எச்.ஐ.வி பாதித்த ரத்தம் செலுத்தப்பட்டதாக இன்னொரு சென்னை கர்ப்பிணி கண்ணீர்

சாத்தூர் போல இன்னொரு கொடுமை: சென்னை கர்ப்பிணிக்கும் ஹெச்.ஐ.வி. ரத்தம்?

பட மூலாதாரம், Getty Images

இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினமணி: சாத்தூர் போல இன்னொரு கொடுமை: சென்னை கர்ப்பிணிக்கும் எச்.ஐ.வி. ரத்தம்?

சாத்தூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. பாதித்த நபரிடம் இருந்து பெறப்பட்ட ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்குள்ளாக சென்னையிலும் ஒரு பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி. பாதித்த ரத்தம் ஏற்றப்பட்டதாக புகார் கிளம்பியிருப்பதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

"சென்னையை அடுத்த மாங்காட்டை சேர்ந்த தம்பதியர் கீரை வியாபாரம் செய்து வருகிறார்கள். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன் இருக்கிறான். அந்தப் பெண்மணி மீண்டும் கர்ப்பம் அடைந்தார்.

முதலில் அவர், மாங்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பரிசோதனைக்கு சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ரத்தம் மிகவும் குறைவாக இருப்பதாகவும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு செல்லும்படியும் கூறியிருக்கிறார்கள்.

அதன்படி, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவரது ரத்தத்தை பரிசோதித்த டாக்டர்கள், 2 யூனிட் ரத்தம் ஏற்றியதாக தெரிகிறது. தொடர்ந்து கீழ்ப்பாக்கம் மருத்துவமனையிலேயே மாதம்தோறும் மருத்துவ பரிசோதனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

8-வது மாதம் மருத்துவ பரிசோதனை செய்தபோது எச்.ஐ.வி. தொற்று இருப்பதாக கூறியிருக்கிறார்கள். அதை கேட்டதும் அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். 9-வது மாதம் நிறைவடைந்து கடந்த செப்டம்பர் மாதம் 19ந்தேதி குழந்தை பெற்றார்.

எச்.ஐ.வி. பாதிப்பால் மனம் உடைந்த அந்த பெண் தனக்கு ரத்தம் ஏற்றப்பட்டதில் எச்.ஐ.வி. இருந்ததாக தெரிவித்து சுகாதார துறைக்கு மனு அனுப்பி இருக்கிறார்.

ஆனால் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த 3 மாதங்களாக வெளியே சொல்ல பயந்து இருந்த அந்த பெண் சாத்தூர் சம்பவத்தை தொடர்ந்து தனக்கும் அந்த மாதிரி கொடுமை நிகழ்ந்தது என்று இன்று கண்ணீருடன் தெரிவித்தார்.

ஆனால் அதிகாரிகள் தரப்பில் இந்த புகாரை உறுதிப்படுத்தவில்லை. தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் தலைவர் செந்தில்ராஜிடம் கேட்டபோது, 'கீழ்ப்பாக்கம் மருத்துவமனை டீனிடம் இதைப்பற்றி விசாரித்தேன். அவர் தவறான தகவல் என்று தெரிவித்தார்' என்று கூறினார். கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை நிர்வாகிகளும் இந்தத் தகவலை மறுத்திருக்கிறார்கள்" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினத்தந்தி: "முன்னாள்எம்.எல்.ஏ.வுக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை"

பட மூலாதாரம், Twitter

படக்குறிப்பு,

ராஜ்குமார்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து மரணத்தை ஏற்படுத்திய வழக்கில் முன்னாள் திமுக எம்.எல்.ஏ.வுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

"கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை பெரம்பலூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ராஜ்குமார் (வயது 52). இவர் தற்போது பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளராக இருந்து வருகிறார்.

கடந்த 2012-ம் ஆண்டு ஜூன் மாதம் கேரள மாநிலம் இடுக்கி பீர்மேடு பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் வறுமை காரணமாக தனது 15 வயது மகளை ராஜ்குமார் வீட்டுக்கு வேலைக்காக அனுப்பி வைத்துள்ளார்.

ஒரு சில நாட்களில் தனது தாயாரை போனில் தொடர்பு கொண்ட அந்த சிறுமி, தன்னால் இங்கு இருக்க முடியவில்லை என்றும், உடனே அழைத்து செல்லும்படியும் கூறி உள்ளார்.

இதற்கிடையே பெரம்பலூர் வந்த சிறுமியின் தாயார், மருத்துவமனையில் மகளை பார்த்தபோது அந்த சிறுமி சுயநினைவில்லாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி இறந்து போனார்.

மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் காவல்துறையினர் முதலில் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது.

முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் மீது பாலியல் வன்கொடுமை, கூட்டு சதி, மரணம் ஏற்படும் என்று தெரிந்தே குற்றச்செயலில் ஈடுபடுதல் ஆகிய 3 குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆகி உள்ளன. எனவே, அவருக்கு ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது.

இதில் குற்றஞ்சாட்டப்பட்ட ஜெய்சங்கர் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற 4 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அவர்கள் விடுதலை செய்யப்படுவதாக தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்து தமிழ்: "ககன்யான் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்"

பட மூலாதாரம், Getty Images

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தமிழ் இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

"டெல்லியில் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதியன்று பிரதமர் மோடி சுதந்திர தின உரை நிகழ்த்தி னார். அதில், 2022-ம் ஆண்டுக் குள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும் எனக் குறிப்பிட்டார்.

இதன் தொடர்ச்சியாக, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, இத்திட்டத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. கடந்த 2004-ம் ஆண்டு முதலா கவே ககன்யான் திட்டத்தை செயல்படுத்துவதற்கு பல்வேறு கட்ட முயற்சிகள் நடந்து வந்த நிலையில், தற்போது அது இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இத்திட்டத்துக் கான மதிப்பீட்டினை மத்திய அரசிடம் இஸ்ரோ அண்மையில் சமர்ப்பித்தது. அதன்படி, இத்திட்டத்துக்கு ஆகும் மொத்த செலவான ரூ.10 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.

ககன்யான் திட்டத்தின் கீழ், 3 பேர் விண்வெளிக்கு அனுப்பப்படவுள்ளனர். இதற்கு ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் பயன் படுத்தப்படவுள்ளது. ககன்யான் திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பு, இரண்டு முறை ஆளில்லா விண்கலங்கள் பரிசோதனை முயற்சியாக விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - போக்ஸோ சட்டத்தில் மரண தண்டனை

பட மூலாதாரம், Serghei Turcanu

'போக்ஸோ' சட்டம் என்று பரவலாக அறியப்படும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தில் மரண தண்டனையையும் ஒரு தண்டனையாகச் சேர்ப்பதற்கான திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தச் சட்டத்தின்கீழ் சிறை தண்டனைக்கான அதிகபட்ச ஆண்டுகள் 10 ஆண்டுகளில் இருந்து 20 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

18 வயதுக்கும் கீழான ஆண் மற்றும் பெண் குழந்தைகள் மீது 21 வகையான பாலியல் குற்றங்களை இந்தச் சட்டம் பட்டியலிடுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: