இரவு 3 மணிக்கு பிரியாணி, ஐஸ் க்ரீம்: பழைய டெல்லியில் ஓர் இரவு

  • மு. நியாஸ் அகமது
  • பிபிசி தமிழ்
சென்னை : எளிய மக்களின் வாழ்வு

பட மூலாதாரம், M Niyas Ahmed

நினைவில் காட்டினை சுமந்து அதன் மகோன்னதத்தில் லயித்துருப்பவனுக்கு ஒரு பெருநகரம் என்னவாக இருக்கும்? அந்த நகரத்தை, அந்த நகரத்திற்கு ஏற்றவாரு தங்களை வடிவமைத்துக் கொண்ட மனிதர்களை அவன் எப்படி எதிர்கொள்வான்? தயங்குவான், தாழ்வு மனப்பான்மையில் உழல்வான், இது வேண்டாமென உதறி தள்ளி மீண்டும் கூடு திரும்புவான். இவைதானே நடக்கும். இதுதான் எனக்கும் நடந்தது.

சென்னைக்கு முதல் முறையாக 2008ஆம் ஆண்டு பணி நிமித்தமாக குடிபுகுந்தபோது, தாக்குப் பிடிக்காமல் தஞ்சைக்கு ஓடியவன் நான். இனி வழியே இல்லை. பிழைத்திருத்தல் வேண்டுமென்றால் பெருநகரத்தில் வாழ வேண்டும் என்ற நிலையில் மீண்டும் சென்னை வந்தேன்.

எளிய மக்களின் வாழ்வு

முதல்முறை பாரா முகம காட்டிய சென்னை இரண்டாம் முறை வாரி அணைத்துக் கொண்டது. அது எல்லாருக்குமான நகரமாக இருப்பது மெல்ல புரிந்தது. மாதம் லட்சங்களில் சம்பாதிப்பவனுக்கு ஒரு வாழ்க்கை இருக்கிறதென்றால், ஆயிரங்களில் சம்பாதிப்பவனுக்கு ஒரு வாழ்க்கையை அந்த நகரம் வைத்திருந்தது. ஏற்றத்தாழ்வுகளை கடந்து அந்த வாழ்க்கையை சுவீகரித்துக் கொண்டு மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதைக் கண்டேன்.

அவர்கள் அனைவரும் என்னைப் போல நினைவில் ஒரு காட்டை சுமந்து, அதனை நகரத்தில் நிறுவ முயல்வதை பார்த்திருக்கிறேன். எளிய மக்கள் வாழும் சென்னையின் ஏதாவது ஒரு பகுதிக்கு ஆடி மாத இரவில் சென்று பாருங்கள். திரைப்படங்களில் காட்டப்படாத இன்னொரு சென்னை இயங்கிக் கொண்டிருக்கும். திருவிழா, தெருச் சண்டை எனக் கோலாகலமாக இருக்கும்.

அந்த மக்கள் உன்னதமான வாழ்க்கையை வாழ்கிறார்கள் எனச் சொல்லவில்லை. வீதிகளில் கடுங்குளிரில் வசிக்கிறார்கள், ஒரு கொசுவலை மட்டுமே அவர்களின் கூடாக இருக்கிறது. தாங்கள் நிர்மாணித்த நகரத்திலிருந்து எப்போது வேண்டுமானாலும் துரத்தப்படலாம் என்ற நிலையில் தங்கள் இருப்பை தக்க வைத்துக் கொள்ள தினம் தினம் போராடவும் செய்கிறார்கள்.

இது சென்னை எனும் ஒரு நகரத்தின் கதை மட்டுமல்ல. எல்லா பெருநகரங்களின் இப்படியாகதான் இருப்பதாகக் கருதுகிறேன்.

இப்போது பணிபுரியும் டெல்லியின் இரவு வாழ்க்கை எப்படி இருக்கிறது. குறிப்பாக பழைய டெல்லியின் ஓர் இரவு எப்படி இயங்குகிறது என்பதைக் காண வேண்டும் விருப்பங்களில் ஒன்றாக இருந்தது.

நானும் பிபிசி தமிழின் செய்தியாளர் விவேக் ஆனந்தும் ஜும்மா மஸ்ஜித், சாந்தினி சவுக், நிஜாமுதீன் ஆகிய பகுதிகளுக்கு சென்றோம்.

நள்ளிரவின் நளிர்

அந்த நள்ளிரவில் எங்கும் குளிர் வியாபித்திருந்தது. மொத்தமான சட்டை, அதற்கு மேல் ஜெர்கின் என எங்கள் முயற்சிகள் எதையும் மதிக்காமல் குளிர் ஊடுருவி எலும்பை பதம் பார்க்க, அந்த குளிரிலும் மெலிதான போர்வை ஒரு கொசுவலை என அங்கு பெரும் மக்கள் கூட்டம் நடைபாதையிலும், தங்களின் ரிக்‌ஷாக்களிலும் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆடிமாத இரவு சென்னைக்கு ஒரு முகம் தருகிறதென்றால், டெல்லிக்கு குளிர் கால இரவு.

டெல்லியின் கோடை என்பது கொடும் தண்டனை. அந்த மாதங்களை கடப்பது பாலையை கடப்பதற்கு சமமானது. அதனால் இந்த மக்கள் குளிர்காலத்தை பெரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது போலவே தெரிகிறது.

திருமண விழாக்கள், ஒன்று கூடல்கள் என டெல்லியின் குளிர் நாட்களை அந்த மக்கள் கொண்டாடுகிறார்கள்

இரவு இரண்டு மணிக்கு நிஜாமுதீன் பகுதிக்கு சென்றோம். ஒரு பக்கம் காளிக்கு விழா கொண்டாட இன்னொரு பக்கம் ஏதோவொரு சூஃபி இசை ஒலிக்கிறது.

ஒரு ஜனத்திரள் அந்த இரவிலும் கடுமையாக வேலை பார்த்துக்கொண்டிருக்கிறது.

அங்கு புகைப்படங்களை எடுத்துவிட்டு ஜும்மா மஸ்ஜித் இருக்கிற பகுதிக்கு சென்றோம்.

இந்த உலகத்திலிருந்து தம்மை முழுவதுமாக துண்டித்துக் கொண்ட இன்னொரு உலகம் அங்கு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

கொண்டாட்டம்... கொண்டாட்டம் மற்றும் கொண்டாட்டம்

இரவு மூன்று மணிக்கு சூடாக விற்கப்படும் பிரியாணி. அதனை வாங்க நிற்கும் ஒரு கூட்டம். கடை வாசல்களில் வரிசையாக அமர்ந்து புகை இழுத்துக் கொண்டிருக்கும் பெரியவர்கள், அந்த சமயத்தில் குறுகலான வீதியில் செல்லும் இ-ரிக்‌ஷாக்கள், குளிரில் பரபரப்பாக விற்கப்படும் ஐஸ் க்ரீம் என டெல்லியின் இந்த முகம் எந்த அரிதாரமும் பூசாமல் அசலாக இருக்கிறது.

எங்கு காணிணும் கொண்டாட்ட மனநிலைதான் இருக்கிறது. நம்மையும் அறியாமல் அந்த உற்சாகம் பற்றிக் கொள்கிறது.

மனிதர்கள்தான் ஓர் இடத்திற்கு முகம் தருகிறார்கள். அவர்கள் உரையாடல்களால்தான் அந்த இடம் உயிர்பெறுகிறது.

உயிரோட்டமான ஒரு டெல்லியை பார்க்க விரும்பினால், நிச்சயம் பழைய டெல்லியை குளிர் நள்ளிரவில் பார்க்க வேண்டும்.

அங்கிருந்து அதிகாலை கிழக்கு டெல்லியில் உள்ள எங்கள் வீட்டிற்கு திரும்பியபோது, இதன் சுவடுகள் எதுவும் இல்லாமல் பேரமைதியில் பனி விலகிய ஒரு விடியலுக்காக மெல்ல நெட்டி முறித்துக் கொண்டிருந்தது அந்தப் பகுதி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: