சர்ச்சைகளின் ஆண்டு 2018: "ஹைகோர்ட்டாவது ..வது" எச்.ராஜா முதல் தமிழக ஆளுநர் வரை

  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்
ராஜா

பட மூலாதாரம், H.RAJA BJP

எல்லா ஆண்டுகளிலும் சர்ச்சைகள் இருக்கத்தான் செய்யும். ஆனால், சமூக வலைதளங்களால் இந்த ஆண்டு பல சர்ச்சைகள் உருவானதும் பெரிதானதும் புதிது. வரும் ஆண்டுகளில் இம்மாதிரி சர்ச்சைகள் இன்னும் அதிகரிக்கக்கூடும். சந்தேகமே இல்லாமல் இந்த ஆண்டில் சர்ச்சைகளின் நாயகன் பாரதீய ஜனதாக் கட்சியின் தேசியச் செயலர் எச். ராஜாதான்.

ஆண்டாள் சர்ச்சை

2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாளிதழ் ஒன்றில் ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து தெரிவித்த கருத்து தொடர்பான சர்ச்சையின் வெப்பம் இந்த ஆண்டு துவக்கத்திலும் நீடித்தது. இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து வைரமுத்துவுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தியதோடு, எதிர்ப்புகளைப் பதிவுசெய்தும் வந்தனர்.

பட மூலாதாரம், FACEBOOK

இதற்குப் பிறகு, வைரமுத்து மன்னிப்புக் கேட்கும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக திருவில்லிபுத்தூர் ஜீயர் அறிவித்து, உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டார். பிறகு அந்த உண்ணாவிரதத்தை சில மணி நேரங்களில் கைவிடவும் செய்தார். "தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா விண்ணப்பித்து கேட்டுக்கொண்டதன் பேரில், தம் உண்ணா நோன்பை கைவிட்டுள்ளார்கள்" என்று இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் கூறியது தி.மு.கவிற்குள்ளேயே பெரும் புயலை ஏற்படுத்தியது.

வைரமுத்துவில் துவங்கி, எச். ராஜாவால் பெரிதாக, இறுதியில் தி.மு.கவில் முடிந்தது இந்த சர்ச்சை.

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காதது தொடர்பான சர்ச்சை

பட மூலாதாரம், DIBYANGSHU SARKAR/AFP/GETTY IMAGES

நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது காஞ்சி சங்கரமடத்தின் (அப்போதைய) இளைய மடாதிபதி விஜயேந்திரர் எழுந்து நின்று மரியாதை செலுத்தாத விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. பா.ஜ.கவின் தேசியச் செயலர் எச். ராஜாவின் தந்தை ஹரிஹர சர்மா தொகுத்த தமிழ் - சமஸ்கிருத அகராதியின் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள மியூசிக் அகாதெமி அரங்கத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித், பா.ஜ.கவின் தேசியச் செயலர் எச். ராஜா, சங்கரமடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திரர், பேராசிரியர் சாலமன் பாப்பையா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

விழாவின் துவக்கத்தில் தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது மேடையில் உள்ள அனைவரும் எழுந்து நின்றனர். ஆனால், விஜயேந்திரர் எழுந்துநிற்கவில்லை. நிகழ்ச்சியின் முடிவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது விஜயேந்திரர் எழுந்துநின்றார்.

இந்தக் காட்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானதையடுத்து இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது விஜயேந்திரர் தியானத்தில் இருந்ததால் எழுந்து நிற்கவில்லையென்று சங்கரமடத்தின் சார்பில் அதிகாரபூர்வமற்ற முறையில் தெரிவித்தனர்.

இதையடுத்து #tamil_insulted, #விஜயேந்திரா_மன்னிப்புக்கேள் என்ற ஹேஷ்டாகுகளுடன் சமூக வலைதளங்களில் கண்டனக் கருத்துகள் பதிவுசெய்யப்பட்டன.

சென்னை ஐ.ஐ.டி. தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை

சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) நடந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படாமல், சமஸ்கிருத மொழியில் கடவுள் வணக்கப் பாடல் இசைக்கப்பட்ட விவகாரம் ஒரு சர்ச்சையாக உருவெடுத்தது. கப்பல் போக்குவரத்து, துறைமுகங்கள் மற்றும் நீர்வழிப்பாதை தொடர்பான தேசிய தொழில்நுட்ப மையத்தை சென்னை ஐஐடியில் உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சி ஐ.ஐ.டி. வளாகத்தில் கையெழுத்தானது. மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியும் ஐ.ஐ.டியின் இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தியும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த நிகழ்வில் மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

விழா துவங்குவதற்கு முன்பாக, மகா கணபதி என்ற சமஸ்கிருதப் பாடல் மாணவர்கள் நான்கு பேரால் பாடப்பட்டது. இதற்கு விருந்தினர்கள் எழுந்துநின்று மரியாதை செலுத்தினர். இதற்குப் பிறகு விழா நடைபெற்றது. தமிழகத்தில் நடைபெறும் அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது மரபாக உள்ள நிலையில், அதற்குப் பதிலாக சமஸ்கிருதப் பாடலை இசைத்ததாக சர்ச்சை எழுந்தது.

பெரியார் சிலை குறித்து எச். ராஜாவின் சர்ச்சைக் கருத்து

திரிபுராவில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கப்பட்டதையடுத்து, அங்குள்ள லெனின் சிலை ஒன்று அகற்றப்பட்ட நிலையில், நாளை தமிழகத்தில் ஈ.வே. ராமசாமியின் சிலையும் அகற்றப்படும் என்ற பா.ஜ.க. தேசியச் செயலர் எச். ராஜாவின் கருத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. அதற்குப் பிறகு எச். ராஜா தன் பதிவை ஃபேஸ்புக்கிலிருந்து நீக்கினார்.

திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்ட வீடியோ காட்சியை வெளியிட்டிருந்த எச். ராஜா, "லெனின் யார், அவருக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு, கம்யூனிசத்திற்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு, லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபுராவில், இன்று திரிபுராவில் லெனின் சிலை, நாளை தமிழகத்தில் ஜாதிவெறியர் ஈ.வெ. ராமசாமி சிலை" என்று கூறியிருந்தார்.

இந்தக் கருத்து குறித்து பெரும் சர்ச்சை எழுந்த நிலையில், பெரியார் சிலை குறித்த எச். ராஜாவின் கருத்து, அவருடைய தனிப்பட்ட கருத்து என்றும் பா.ஜ.கவின் கருத்து அல்ல என்றும் அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இதிலிருந்து விலகி நின்றார்.

இதற்கு அடுத்த சில நாட்களில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பெரியாரின் மார்பளவு சிலை ஒன்றை இருவர் சுத்தியலால் தாக்கி சேதப்படுத்தினர். அவர்களில் ஒருவர் பாரதீய ஜனதாக் கட்சியின் நகர செயலர் எனத் தெரியவந்தது. இவர்கள் பிறகு கைதுசெய்யப்பட்டனர்.

இந்த சம்பவங்களுக்குப் பிறகு பெரியார் குறித்த பதிவை தனக்குத் தெரியாமல் தன் அட்மின் வெளியிட்டுவிட்டதாக எச். ராஜா வருத்தம் தெரிவித்தார். "திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை ஒப்பிட்டு தமிழகத்தில் ஈவெரா அர்களின் சிலைகளும் அகற்றப்படும் என்ற பதிவை முகநூல் Admin என் அனுமதி இன்றி பதித்துள்ளார். எனவே தான் அதை நான் பதிவு நீக்கம் செய்திருந்தேன்" என்றும் "கருத்துக்களை கருத்துக்களால் எதிர் கொள்ள வேண்டுமே அன்றி வன்முறையால் அல்ல. எனக்கு யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை. எனவே இப்பதிவினால் யார் மனதும் புண்பட்டிருக்குமானால் அதற்கு என் இதய பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் ஈ.வெ.ரா அவர்கள் சிலைகளை சேதப் படுத்துவது போன்ற செயல்கள் நமக்கு ஏற்புடையதல்ல." என்றும் கூறி இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

கள்ள உறவில் பிறந்த குழந்தை: எச். ராஜாவின் சர்ச்சை ட்வீட்

கள்ள உறவில் பிறந்த குழந்தை என தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியை குறிப்பிடும் வகையில் பா.ஜ.கவின் தேசியத் தலைவர் எச். ராசா தெரிவித்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. தி.மு.க. பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியது. "தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை (illegitimate child) மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம் ஆளுநரிடம் கேட்டது போல் நிருபர்கள் கேள்வி கேட்பார்களா. மாட்டார்கள். சிதம்பரம் உதயகுமார், அண்ணாநகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக் பாட்ஷா நினைவு வந்து பயமுறுத்துமே" என்று எச் ராஜா தனது ட்விட்டரில் கூறியிருந்தார்.

எச். ராஜாவின் இந்தக் கருத்தைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. தொண்டர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். பல இடங்களில் எச். ராஜாவின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

இந்த விவகாரம் தமிழக பாரதீய ஜனதாக் கட்சியை தர்மசங்கடத்திற்குள்ளாக்கியுள்ளது. அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், "பொதுவாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் எந்தக் கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை விமர்சிக்கப்படுவது எனக்கு மிகுந்த மனவேதனையைத் தருகிறது" என்று கூறினார்.

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து எஸ்வி சேகர் சர்ச்சை கருத்து

பட மூலாதாரம், Twitter

சினிமா, தொலைக்காட்சி நகைச்சுவை நடிகரும் பாரதீய ஜனதாக் கட்சியின் உறுப்பினருமான எஸ்.வி. சேகர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து பகிர்ந்திருந்த ஆபாச கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.

எஸ்.வி. சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில், திருமலை சடகோபன் என்பவர் எழுதியிருந்த பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், "படிப்பறிவில்லாத, கேவலமான, பொது அறிவில்லாத பொறுக்கிகளே தமிழகத்தில் பெரு்பாலும் மீடியாவில் வேலைக்கு வருகிறார்கள். இந்தப் பெண்ணும் அதற்கு விதிவிலக்கில்லை என்பது தெரிகிறது. பல்கலைக்கழகங்களைவிட அதிக அளவில் செக்ஸுவல் அப்யூஸ் நடப்பது மீடியாக்களில்தான். பெரிய ஆட்களுடன் படுக்காமல் அவர்களால் ஒரு ரிப்போர்ட்டராகவோ, செய்தி வாசிப்பாளராகவோ ஆகிவிட முடியாது என்பது சமீபத்திய பல புகார்களின் மூலம் வெளியே வந்த அசிங்கம். இந்த மொகரக்கட்டைகள்தான் கவர்னரைக் கேள்வி கேட்கக் கிளம்பி விடுகிறார்கள். தமிழகத்தின் மிகக் கேவலமான ஈனமான, அசிங்கமான, அருவருப்பான ஆபாசமான இழிந்த ஈனப் பிறவிகள் அதன்பெரும்பாலான மீடியா ஆட்களே. பொதுவாக தமிழகத்தின் ஒட்டுமொத்த மீடியாவுமே கிரிமினல்களின் பொறுக்கிகளின் ப்ளாக்மெயில் பேர்வழிகளின் பிடிகளில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கிறது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இது தொடர்பான சர்ச்சை எழுந்ததும் திருமலை சடகோபன் தன் ஃபேஸ்புக் பக்கத்தை முடக்கிவிட்டார். எஸ்.வி.சேகரும் அந்தப் பதிவை நீக்கிவிட்டார். இருந்தபோதும் அதற்கு முன்பாக எடுக்கப்பட்ட ஸ்க்ரீஷ் ஷாட்கள் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

இதற்குப் பிறகு நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது சில பத்திரிகையாளர்கள் அவரது வீட்டின் மீதும் கல்லெறிந்தனர்.

"ஹைகோர்ட்டாவது ..வது": உயர் நீதிமன்றம் குறித்த எச். ராஜாவின் அவதூறு கருத்து

பட மூலாதாரம், Twitter

புதுக்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலம் ஒன்றில் பங்கேற்ற பா.ஜ.கவின் தேசியச் செயலர் எச். ராஜா, ஒரு குறிப்பிட்ட பாதையில் விநாயகர் ஊர்வலத்தைச் செல்ல அனுமதிக்க வேண்டுமெனக் கோரினார். ஆனால், அந்தப் பாதை வழியாக ஊர்வலம் சென்றால் சமூகப் பதற்றம் ஏற்படும் என்று கூறி அதற்கு காவலர்கள் அனுமதி மறுத்தனர்.

இதையடுத்து காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எச். ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தையும் காவலர்களையும் மிக இழிவான வார்த்தைகளால் குறிப்பிட்டார். மேலும் காவலர்கள் இஸ்லாமியர்களிடமும் கிறிஸ்தவர்களிடமும் லஞ்சம் வாங்குவதாகவும் அந்த லஞ்சத்தை தான் தரத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

அங்கிருந்த காவலர்கள், ஊர்வலம் செல்வதற்கு உயர்நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகளைச் சுட்டிக்காட்டியபோது, உயர்நீதிமன்றத்தையும் மிக இழிவான வார்த்தையொன்றால் குறிப்பிட்டார். எச். ராஜா இவ்வாறு பேசுவது ஃபேஸ்புக் பக்கமொன்றில் நேரலையாக ஒளிபரப்பானது. பிறகு அந்த வீடியோ டவுன்லோடு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பரவியது.

இது குறித்து புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் காவல் நிலையத்தில் எச். ராஜா உள்ளிட்ட 18 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு வந்தபோது, நேரில் வந்து மன்னிப்புக் கோரினார் எச். ராஜா

விமான நிலையத்தில் கோஷமிட்ட பெண் கைது விவகாரம்

சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் மாநில பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தராஜன் முன்பாக பா.ஜ.கவுக்கு எதிராக கோஷமிட்ட பெண் கைதுசெய்யப்பட்டது பெரிதும் விவாதத்திற்கு உள்ளானது. சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பயணம் செய்தார். விமானத்தில் அவருக்கு சில இருக்கைகள் தள்ளி தூத்துக்குடி கந்தன் காலனியைச் சேர்ந்த சோஃபியா என்ற பெண்ணும் பயணம் செய்தார். அவருடன் அவருடைய பெற்றோரும் பயணம் செய்தனர்.

விமானம் பயணம் நெடுக சோஃபியா தன் தாயிடம் பா.ஜ.க. அரசைக் கடுமையாக விமர்சித்துப் பேசிவந்துள்ளார். பிறகு விமானத்திலிருந்து இறங்கி விமான நிலையத்தில் நடந்துவரும்போது 'பாசிச - பா.ஜ.க. அரசு ஒழிக' என்று கோஷமிட்டுள்ளார்.

இதற்கு தமிழிசை சவுந்தரராஜனும் அவருடைய ஆதரவாளர்கள் சிலரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இது தன்னுடைய கருத்துரிமை என சோஃபியா கூறினார். ஆனால், சோஃபியா தனது பேச்சுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டுமென தமிழிசை வலியுறுத்தினார். சோஃபியா அதற்கு மறுக்கவே தமிழிசை காவல்துறையிடம் புகார் அளித்தார். இதையடுத்து கைதுசெய்யப்பட்ட சோஃபியா புதுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டார். அப்போது தமிழிசை சவுந்தரராஜனும் அவருடன் வந்தவர்களும் தன்னை அவதூறாகப் பேசியதாக சோஃபியாவும் புகார் அளித்தார். 22 வயதாகும் சோஃபியா, கனடாவின் மான்ட்ரியல் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் ஆய்வு மாணவியாக இருந்துவருகிறார். இந்தியாவின் இணைய தளங்கள் சிலவற்றிலும் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

மாணவிகளை தவறான வழிக்குத் தூண்டிய பேராசிரியையும் ஆளுநரின் செய்தியாளர் சந்திப்பும்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றின் மாணவிகளை பணத்திற்காக பாலியல் ரீதியாக இணங்கும்படி கூறிய துணைப் பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரம் ஒரு சில மாதங்களுக்கு தமிழகத்தை கிடுகிடுக்க வைத்தது. இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநர் மாளிகையும் சம்பந்தப்படுத்தப்பட்டதால், இந்த விவகாரம் தேசிய அளவில் செய்தியாக உருவெடுத்தது.

இந்த விவகாரம் குறித்து விளக்கமளிப்பதற்காக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் நடத்திய செய்தியாளர் சந்திப்பும் பெரும் சர்ச்சையில் முடிவடைந்தது. இந்தச் செய்தியாளர் சந்திப்பின் முடிவில் ஆளுனர் புறப்பட்டபோது, அவரிடம் தி வீக் இதழின் செய்தியாளரான லக்ஷ்மி சுப்பிரமணியன் "மாநில அரசின் செயல்பாட்டில் உங்களுக்கு எந்த அளவுக்கு திருப்தி?" என்ற கேள்வியைக் கேட்டார். அதற்கு ஆளுநர், "பெரும் திருப்தி" என்று பதிலளித்தார்.

பட மூலாதாரம், HTTP://WWW.TNRAJBHAVAN.GOV.IN/

அப்படியானால், "பல்கலைக்கழகங்களின் செயல்பாட்டில் மட்டும் திருப்தியில்லை என்று எடுத்துக்கொள்ளலாமா?" என்ற கேள்வியைக் கேட்டபோது, அந்தக் கேள்வியை உள்வாங்காத ஆளுனர் பன்வாரிலால் புரோஹித், லக்ஷ்மி சுப்பிரமணியத்தின் கன்னத்தை சிரித்தபடி தட்டினார்.

இதற்கு, லக்ஷ்மி சுப்பிரமணியன் கடும் கோபமடைந்தார். ட்விட்டரில் எதிர்ப்பையும் பதிவுசெய்தார். இதற்குப் பிறகு ஆளுனர் இதற்கு மன்னிப்புக்கோரினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: