மனநலம் பாதிக்கப்பட்ட தாயை கொன்று மகன் தற்கொலை - உருக்கமான சம்பவம்

தற்கொலை

பட மூலாதாரம், இந்து தமிழ்

இந்து தமிழ்: தாயை கொன்று மகன் தற்கொலை - உருக்கமான கடிதம்

மனநலம் பாதிக்கப்பட்ட தாயை கொலை செய்துவிட்டு மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சென்னை தியாகராய நகரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

அந்த செய்தி பின்வருமாரு விவரிக்கிறது,

மனநலம் பாதிக்கப்பட்ட தாயை கொலை செய்துவிட்டு மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தியாகராய நகரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தியாகராய நகர் தாமஸ் சாலை பகுதியைச் சேர்ந்தவர் நடேசன் (65). தனியார் செக்யூரிட்டி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். நடேசனின் மனைவி சுந்தரவல்லி (53). இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இவர்களது ஒரே மகன் விக்னேஷ் (22). சுந்தரவல்லிக்கு மனநலம் பாதிக்கப்பட்டதால் அவர் தானாக பேசிக்கொண்டு இருப்பார். இதனால் அருகில் உள்ளவர்கள் சுந்தரவல்லி குடும்பத்தினரிடமிருந்து சற்று விலகியே இருந்துள்ளனர். மகன் விக்னேஷ் தனது தாய் சுந்தரவல்லியை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து பராமரித்து வந்துள்ளார்.

ஈக்காட்டு தாங்கலில் உள்ள ஐ.டி நிறுவனம் ஒன்றில் உள்ள உணவு விடுதியில் விக்னேஷ் வேலை பார்த்து வந்துள்ளார். மேலும், மாலை நேரத்தில் தனியார் உணவு விநியோகம் செய்யும் நிறுவனத்தில் டெலிவரி பாயாகவும் வேலை பார்த்துள்ளார். நேற்று முன்தினம் இரவு விக்னேஷ் பணிமுடிந்து வீட்டுக்கு வந்ததும் தூங்க முயன்றுள்ளார். அப்போது சுந்தரவல்லி, மகன் விக்னேஷை தூங்க விடாமல் எழுப்பியபடியே இருந்துள்ளார். இதனால், விரக்தியடைந்த விக்னேஷ் தனது தாயை தாக்கியுள்ளார். இதில், சுந்தரவல்லி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தாயை கொலை செய்த சோகத்தில் அவரது சேலையில் தூக்கிட்டு விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுபற்றிய தகவல் அறிந்தது தேனாம்பேட்டை போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறப்பதற்கு முன்னதாக கடிதம் ஒன்றையும் விக்னேஷ் எழுதி வைத்துள்ளார். அதில், ''அனைவரும் மரம் வளர்க்க வேண்டும். இயற் கையை பாதுகாக்க வேண்டும். ஒற்று மையாக இருக்க வேண்டும். நான் சில நாட்களாக சந்தோஷமாக இல்லை. எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை'' என எழுதி வைத்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

இறப்பதற்கு முன்பு தனது நண்பர்களுக்கு "நாளை நல்ல செய்தி சொல்கிறேன்" என்று குறுந்தகவலையும் அவர் அனுப்பி உள்ளார். தாயை கொலை செய்து விட்டு மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் தியாகராயநகர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தாயை கொலை செய்து விட்டு தற்கொலை செய்துகொண்ட விக்னேஷ், இறப்பதற்கு முன்னர் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் தனது அலுவலகத்தில் பணியாற்றும் நண்பர் ஒருவரின் வங்கி கணக்குக்கு ரூ.6,500 அனுப்பி வைத்துள்ளார். இதுபற்றி நண்பர் கேட்டபோது, "நாளை எனது வீட்டில் ஒரு காரியம் உள்ளது. நீதான் அதை முன்னின்று நடத்த வேண்டும். அது என்ன என்பது நாளை தெரியும்" என தெரிவித்துள்ளார். தாய் மற்றும் தனது இறுதி சடங்கு செலவுக்காகவே இந்த பணத்தை அவர் முன்கூட்டி அனுப்பி வைத்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

தினத்தந்தி: 'எச்.ஐ.வி. ரத்தத்தை கொடுத்த வாலிபர் சாவில் மர்மம்'

பட மூலாதாரம், DESHAKALYAN CHOWDHURY

சாத்தூர் கர்ப்பிணிக்கு செலுத்திய எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தத்தை தானமாக கொடுத்த வாலிபர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று திடீரென இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவரது சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் புகார் கூறியுள்ளனர் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவரின் மனைவி 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த அவருக்கு, சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தம் செலுத்தப்பட்டதால், அந்த கர்ப்பிணி எச்.ஐ.வி. தொற்றுக்கு ஆளானார். இதுதொடர்பாக விசாரணை நடத்தியபோது, சிவகாசி அரசு ஆஸ்பத்திரி ரத்த வங்கியில் இருந்து பெறப்பட்ட ரத்தம் அந்த பெண்ணுக்கு செலுத்தப்பட்டது தெரியவந்தது.

அந்த ரத்தத்தை ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த 19 வயது வாலிபரிடம் இருந்து தானமாக பெற்றுள்ளனர்.

தனது ரத்தம் கர்ப்பிணிக்கு செலுத்தப்பட்டதாலும், இதனால் ஏற்பட்ட பிரச்சினை களாலும் மனவருத்தம் அடைந்த அந்த வாலிபர் தனது சொந்த ஊரில், கடந்த 26-ந் தேதி எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கமுதி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அதனை தொடர்ந்து அவர் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தனி வார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர், மன அழுத்தத்தில் இருந்து விடுபடும் வகையில், டாக்டர் குழுவினர் மூலம் மனநல சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அந்த வாலிபர் நேற்று அதிகாலையில் திடீரென ரத்த வாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை மேற்கொண்டனர். ஆனால் தொடர்ந்து ரத்த வாந்தி எடுத்த அவர், நேற்று காலை 8 மணி அளவில் பரிதாபமாக இறந்தார்.

- இவ்வாறாக விவரிக்கிறது அந்நாளிதழ்.

தினமணி: நாளை முதல் பிளாஸ்டிக் தடை: விற்பனை கடைகள் காலவரையின்றி மூடல்

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைத் தவிர்த்து, மற்ற பிளாஸ்டிக் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்வதைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை (ஜன. 1) முதல் காலவரையின்றி கடைகளை மூடப் போவதாக பிளாஸ்டிக் உற்பத்தி, விற்பனை அமைப்புகள் தெரிவித்துள்ளன என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

"ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பை, கப்புகள் உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருள்களை செவ்வாய்க்கிழமை முதல் (ஜன. 1) பயன்படுத்துவதற்கும், விற்பனை செய்வதற்கும், உற்பத்தி செய்வதற்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.

இதுகுறித்து மாவட்டங்கள் வாரியாக விழிப்புணர்வுப் பிரசாரங்கள், கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைப் பறிமுதல் செய்தல் ஆகிய நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கடைகளில் வைக்கப்பட்டுள்ள தடை செய்யப்படாத பிளாஸ்டிக் பொருள்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்வதாக பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனையாளர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்." என்கிறது அந்நாளிதழ் செய்தி.

பிளாஸ்டிக் தடை குறித்து ஒரு தொடரினை தயாரித்தது பிபிசி தமிழ், அவற்றை படிக்க:

காணொளிக் குறிப்பு,

தமிழகத்தில் மீண்டும் களமிறங்கும் துணிப்பை

பட மூலாதாரம், இந்து தமிழ்

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'தூத்துக்குடியில் தடுத்துவைக்கப்பட்ட அமெரிக்க பத்திரிகையாளர்'

அமெரிக்காவை சேர்ந்த ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளர் மார்க் தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டார் என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி.

அவர் ஸ்டெர்லைட்டால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் கிராமங்களை பார்வையிட்டு செய்தி சேகரிக்கும் போது, அவரை தூத்துக்குடி காவல்துறையினர் கைது செய்தனர்.

அவரிடம் பத்து மணி நேரத்திற்கு மேலாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவரது கேமிரா, லாப்டாப் ஆகியவற்றை ஆராயந்தனர். விசாரனையின் போது, சில பெயர்களை அவர் கூறியதகாவும், அவர்களும் விசாரிக்கப்படுவாரகள் என்று தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் முரளி ராம்பா கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: