ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் வெறும் கானல் நீரா?: தர்பாருக்கு பின் சிவா, அடுத்தடுத்து படங்கள் ஓர் அலசல்

  • மு.நியாஸ் அகமது, அறவாழி இளம்பரிதி
  • பிபிசி தமிழ்
Rajinikanth

பட மூலாதாரம், Dinodia Photos

ரஜினி தன் அரசியல் பிரவேசத்தை அறிவித்து இன்றோடு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அவரது ரசிகர்களின் பல தசாப்த காத்திருப்புக்குப் பின் 2017 டிசம்பர் 31 ஆம் தேதி ரஜினி தான் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார்.

"எனது அரசியல் பிரவேசம் உறுதி. இது காலத்தின் தேவை" என்று அவர் அப்போது பேசி இருந்தார்.

அதுமட்டுமல்ல, "ஆன்மிக அரசியல்" என்ற பதத்தை அன்றைய உரையில் அவர் முன் வைத்திருந்தார். "ஊழலை வேரறுப்போம் நேர்மையான, வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவோம்" என்றும் கூறி இருந்தார்.

தொடங்கப்படாத கட்சி

சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாகவும் அறிவித்து இருந்தார். ஆனால், ஓராண்டாகிவிட்டது இன்னும் கட்சி தொடங்கப்படவில்லை.

இது அவரது ரசிகர்களை தொய்வடைய செய்துள்ளது.

சேலத்தை சேர்ந்த ஒரு ரசிகர் இதனால் மனமுடைந்து தற்கொலை முயற்சியில் கடந்த சில நாட்களுக்கு முன் ஈடுபட்டார்.

இது ஒரு பக்கமென்றால், மற்றொரு பக்கம், தீவிரமான ரஜினி ரசிகர்கள் சிலர் உங்களை எப்போதும் நடிகனாகவே பார்க்க விரும்புகிறோம். அரசியலெல்லாம் நமக்கு வேண்டாம் என்ற தொனியில் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.

பட மூலாதாரம், Facebook

துரிதமாக நடக்கும் பணி

ஆனால், அதே நேரம் கட்சி பணிகள் துரிதமாக நடப்பதாக கூறிகிறார்கள் ரஜினி மன்ற நிர்வாகிகள்.

திருச்சியை சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத ரஜினி மன்ற நிர்வாகி, "களத்தில் பணிகள் துரிதமாகவே நடந்து வருகிறது. வார்டு வாரியாக பணியாற்றி வருகின்றோம். வேர்களில் வேலை செய்கிறோம்." என்றார்.

மன்ற நிர்வாகிகள் ஊடகங்களிடம் பேச ரஜினி தடைவிதித்து இருக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images

கண்டிப்பு

ரஜினி தன் மன்ற விஷயத்தில் மிகவும் கண்டிப்பாகவே நடந்து வருகிறார். மன்றத்தின் பெயருக்கு களங்கம் விளைவித்ததாக பத்து மன்ற நிர்வாகிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தார். அவர்கள் மன்னிப்பு கேட்டபின் மன்றத்தில் மீண்டும் அவர்களை இணைத்து கொண்டார்.

அப்போது அவர் வெளியிட்ட அறிக்கையில், "ரசிகர் மன்றத்தில் 30,40 ஆண்டுகள் இருந்தது மட்டுமே மக்கள் மன்றத்தில் பதவி பெறுவதற்கோ அரசியலில் ஈடுபடுவதற்கோ முழு தகுதி ஆகிவிட முடியாது" என்று குறிப்பிட்டு இருந்தார்.

பட மூலாதாரம், Facebook

அப்போது சிலர், இது ரஜினிக்கும் பொருந்தும் என்று குறிப்பிட்டு இருந்தார்கள்.

சறுக்கிய இடங்கள்

நடிகராக இருந்த போது பெரும்பாலும் பத்திரிகையாளர்களை சந்திப்பதை தவிர்த்த ரஜினி. இப்போது வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சந்திக்கிறார். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் என்றால் வெளியூருக்கு செல்லும்போது விமான நிலையத்தில்.

ஆனால், அதுவே சில சமயம் சறுக்கிய இடங்களாக அமைந்துவிட்டன. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து கேள்வி எழுப்பிய போது, அவர் பத்திரிகையாளர்களிடம் குரல் உயர்த்தி எரிந்து விழுந்தார். இது பல்வேறு தரப்புகளிலிருந்தும் அவருக்கு கண்டனங்களை பெற்று தந்தன.

பட மூலாதாரம், Facebook

படக்குறிப்பு,

சமூக ஊடகத்தில் ரசிகர்கள் நடத்திய கருத்து கணிப்பு

அது போல ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டிற்கு காரணம், சமூக விரோதிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்ததுதான் என்று குறிப்பிட்டதும் எதிர்ப்புக்கு உள்ளாகியது.

பட மூலாதாரம், Facebook

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கச் சென்ற ரஜினிகாந்தை, சந்தோஷ் என்ற இளைஞர் கோபமாக "யார் நீங்க?" என்று கேட்பார். அதற்கு ரஜினி, "நான்தான்பா ரஜினிகாந்த்" என்பார். "ரஜினிகாந்த் என்பது தெரிகிறது, எங்கேயிருந்து வருகிறீர்கள்?" என அந்த இளைஞர் கேட்டவுடன் "நான் சென்னையிலிருந்து வருகிறேன்" என்பார்.

அந்த சமயத்தில்"நான்தான்பா ரஜினிகாந்த்" என்ற வார்த்தை ட்ரெண்டானது.

ஆனால், அதே நேரம் சில மீனவர்கள் சமூக விரோதிகளே தூத்துக்குடி கலவரத்திற்கு காரணம் என்ற மனுவை மாவட்ட சட்ட உதவி மையத்திடம் அளித்த போது `அன்றே சொன்ன ரஜினி' என்ற ஹாஷ்டாக் ட்விட்டரில் ட்ரெண்டானது.

அது போல, ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற எழுவர் விடுதலை குறித்து கேள்வி எழுப்பிய போது, யார் அந்த ஏழு பேர்? என்று வினவியது அதிர்ச்சிக்கும், நகைப்பிற்கும் உள்ளாகியது. ஆனால், அடுத்த நாள் இது குறித்து விரிவான விளக்கம் தந்தார். தாம் ஏழு பேர் விடுதலையை ஆதரிப்பதாகவும் கூறினார்.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், கஜ புயல் பாதித்த பகுதிகளை அவர் பார்வையிடாதது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியது.

பா.ஜ.க ஆதரவு

ஆன்மிக அரசியல், பத்து பேர் சேர்ந்த ஒரு நபரை எதிர்த்தால் யார் பலசாலி போன்ற வசனங்கள் அவரை பா.ஜ.க சார்புடையவராகவே பார்க்க வைத்தது. ஆனால், அண்மையில் வந்த ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் பா.ஜ.கவுக்கு எதிர்மறையானதாக இருந்தது. அப்போது பேசிய ரஜினி பா.ஜ.க தன் செல்வாக்கை இழந்துவிட்டதை இது காட்டுவதாக கூறி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதற்கு மத்தியில் தொலைக்காட்சி தொடங்குவதற்காக அவர் விண்ணப்பம் செய்தது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.

அதிகாரத்திற்கானது அல்ல மக்களுக்கானது

சூழலியல், மாற்று அரசியல் தளத்தில் செயல்படும் இளம் செயற்பாட்டாளர் பாலசுப்பிரமணி, "ரஜினி அதிகாரத்தை எதிர்க்க விரும்பாதது அவரின் கடந்த ஓராண்டு செயல்பாடுகளில் தெரிகிறது" என்கிறார்.

பட மூலாதாரம், Facebook

"அரசியல் என்பது அதிகாரத்திற்கானது அல்ல, அது மக்களுக்கானது. அதிகாரத்தினை மட்டுமே இலக்காக கொண்டுள்ளவர்கள் தான் அரசியலுக்கு வருகிறேன், வருகிறேன் என்று சொல்லி கொண்டிருப்பார்கள். அதிகாரத்தினை பிடிப்பதற்கு மட்டும் அல்லாமல் மக்களுக்கான அரசியலை முன்னெடுக்க காத்திருக்க வேண்டிய சூழல் தமிழகத்தில் சிறிதும் இல்லை. ஒவ்வொரு நாளும் தமிழக மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களுக்காகவும், வளங்களை காக்கவும், சாதிய கொடுமைகளை எதிர்த்தும், பெண்கள் மீதான வன்முறைகளை எதிர்த்தும் தொடர்ந்து ஆங்காங்கே போராடி வருகின்றனர்.அரசியலுக்கு வரவிருக்கும் ரஜினி, பணி செய்ய வேண்டியது களத்தில், கைகோர்க்க வேண்டியது அந்த மக்களுடன்" என்றார்.

"ரஜினியாக இருப்பதன் கஷ்டம் ரஜினிக்குதான் தெரியும் என்பது பிரபலமான வாக்கியம். ரஜினி ரஜினியாக இருந்து எவ்வளவு கஷ்டங்களை வேண்டுமானாலும் அனுபவிக்கட்டும். அது அவர் சொந்த விஷயம். இதே ரஜினியாக அரசியல் தளத்தில் இருந்து மக்களை இம்சிக்க வேண்டாம்" என்கிறார் பாலா.

இடைவெளி அவசியமானது

கட்சி தொடங்க ரஜினி எடுத்து கொண்டிருக்கும் இந்த கால இடைவெளி அவசியமானது என்கிறார் ரஜினியின் தீவிர ரசிகரும் சினிமா விமர்சகருமான பாலகணேசன்.

பட மூலாதாரம், facebook

அவர், "ஒரு சொலவடை உள்ளது ஒரு மரத்தை வெட்ட பத்து மணி நேரம் ஆகிறதென்றால், எட்டு மணி நேரம் கோடரியை கூர்மைப்படுத்த வேண்டுமென்று. இப்போது ரஜினி அதனைதான் செய்து கொண்டிருக்கிறார். ரசிகர்களை அரசியலுக்காக பண்படுத்த இந்த அவகாசம் தேவை. ரஜினியை ரஜினியாக காட்டுவது இந்த நிதானம்தான்." என்கிறார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரும், ரஜினியின் தீவிர ரசிகருமான சந்திரகாந்த், ரஜினி மக்கள் மன்றத்தின் கடந்த ஓராண்டு செயல்பாடு திருப்திகரமாக இருப்பதாகவும், தமிழகத்தில் எது நடந்தாலும் அங்கு ரஜினி என்ற ஒற்றை மனிதனின் கருத்து என்ன என்று அறியும் ஆவல் எல்லோரிடத்திலும் இடம்பெற்றிருப்பதாகவும் கூறுகிறார்.

சந்திரகாந்த்தின் குடும்பமே ரஜினியின் தீவிர நலம்விரும்பிகள். அதனாலேயே சந்திரகாந்த் சகோதரர்கள் பெயரில் காந்த் என்ற அடைமொழி இடம்பெற்றிருக்கும்.

ஆனால், ரஜினிகாந்தின் மற்றொரு தீவிர ரசிகையான சென்னையை சேர்ந்த ஃபெலிக்ஸ் மரியா, தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். ரஜினி அரசியலில் செல்ல வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது என்றும், பொதுமக்களுடன் தொடர்பற்றிருப்பதாகவும் தெரிவித்தார்.

கமல் ஹாசன் பொதுமக்களுடன் சங்கமித்து பல முன்னெடுப்புகளை எடுக்கும்போது, ரஜினி தனித்திருப்பது போன்று தெரிவதாகவும் ஆதங்கப்பட்டார் அவர்.

இது தொடர்பாக காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியனிடம் பேசினோம்.

ஸ்டாலினின் கனவு கனவாக மட்டுமே இருக்கும்

அவர், "தற்போது தமிழகத்திலுள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ரஜினி மக்கள் மன்றத்துக்கு 30 நிர்வாகிகள் இருக்கிறார்கள். தமிழகத்தில் இருக்கும் 65,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் இதுபோன்ற ஒரு ஆள்பலம் தி.மு.க, அ.தி.மு.கவை அடுத்து ரஜினி மக்கள் மன்றத்துக்கு மட்டுமே இருக்கிறது." என்றார்.

பட மூலாதாரம், Facebook

மேலும் அவர், "இந்த சாதனையை ரஜினிகாந்த் மவுனமாக சாதித்து காட்டிவிட்டார். ஒரு கட்சியை தொடங்க வேண்டியதற்கான கட்டமைப்பை மிகக் கவனமாக கையாண்டு வெற்றி பெற்றிருக்கிறார். இதற்கு அடுத்த கட்டம் கட்சியை தொடங்குவது. அவ்வாறு தொடங்கப்படும் போது, ரஜினி மக்கள் மன்றத்தில் செயல்படக்கூடிய மனிதர்களை நீங்கள் பார்ப்பீர்கள்." என்றார்.

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டி என்பது ஸ்டாலின் - ரஜினி இடையேதான் இருக்கும் என்று கூறும் அவர், பலவீனங்களால் சரிந்து கிடக்கும் அதிமுகவை சரிவிலிருந்து அக்கட்சியில் ஆளுமைமிக்க தலைவர்கள் யாருமில்லை என்றும், ஜெயலலிதா பின்னால் நின்று வாக்குகளை பெற்றவர்களால் சொந்த முகத்தை காட்டி வாக்கு கேட்டால் அவர்களால் வெற்றி பெற முடியாது என்றும் மணியன் தெரிவித்தார்.

கோட்டைக்கு செல்லும் ஸ்டாலினின் கனவு கனவாக மட்டுமே இருக்கும் என்று தமிழருவி மணியன் தெரிவித்தார்.

மேலும் அவர், "ரஜினி இன்றைய எம்.ஜி.ஆர். கமல் ஹாசன் இன்றைய சிவாஜி கணேசன். கமல் ஹாசனின் நடிப்பாற்றல் பற்றி எனக்கு உயர்வான மதிப்பீடல்கள் உண்டு. ஆனால், அரசியலை பொருத்துவரை கமல் பக்குவப்படவில்லை." என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

(கடந்தாண்டு எழுதப்பட்ட கட்டுரையின் மீள்பகிர்வு இது)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :