நரேந்திர மோதிக்கு ராகுல் காந்தி சவால்: 'ரஃபேல் ஒப்பந்தம் குறித்து ஒற்றைக்கு ஒற்றை விவாதிக்க தயாரா?'

ராகுல் படத்தின் காப்புரிமை Getty Images

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக பதில் அளிக்கும் துணிவு இல்லாமல் பிரதமர் நரேந்திர மோதி, நாடாளுமன்றத்துக்கு வராமல் தன் அறைக்குள்ளேயே ஒளிந்துகொண்டிருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

பாதுகாப்பு அமைச்சரும் (நிர்மலா சீதாராமன்) அவையில் அதிமுக உறுப்பினர்களுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டிருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

அவருக்கு பதில் அளித்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி ராகுல் காந்தி தொடர்ச்சியாகப் பொய்களைப் பரப்புவதாகவும், போஃபர்ஸ், அகஸ்ட்டா வெஸ்ட்லேண்ட் போன்ற கடந்த கால ஊழல்களிலும் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் இப்போது பிறர் மீது குறை கூறுவதாகவும் கூறினார்.

ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய கோப்புகள் முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும், தற்போது கோவா மாநில முதலமைச்சராகவும் உள்ள மனோகர் பரிக்கரின் படுக்கை அறையில் உள்ளதாக, கோவா அமைச்சர் விஸ்வஜித் ரானே என்பவர் பேசியதாக ஒலிப்பதிவு ஒன்றை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று, புதன்கிழமை, நாடாளுமன்றத்தில் வெளியிட முயன்றார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மனோகர் பரிக்கர்

அதற்கு அனுமதி மறுத்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன், அந்த ஒலிப்பதிவின் நம்பகத்தன்மைக்கு ராகுல் பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறினார்.

நிதி அமைச்சர் அருண் ஜேட்லியும் அதற்குக் கடுமையாக எதிர்ப்பைத் தெரிவித்தார்.

பின்னர் அந்த ஒலிப்பதிவு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சிங் சுர்ஜேவாலாவால் புதன்கிழமை மாலை செய்தியாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டது.

"காங்கிரஸ் வெளியிட்டுள்ள இந்த ஒலிப்பதிவு புனையப்பட்டது; அவர்கள் பொய் சமீபத்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் அம்பலப்படுத்தப்பட்டது," என பரிக்கர் ட்விட்டரில் கூறியுள்ளார்.

இது பொய்யான ஒலிப்பதிவு என்று விஸ்வஜித் ரானே கூறியுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனமும் செய்தி வெளியிட்டுள்ளது.

ரஃபேல் விமானங்கள் தயாரிக்கும் பிரான்ஸ் நிறுவனத்தின் இந்தியக் கூட்டாளியாக உள்ள ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனத்தின் அதிபர் அணில் அம்பானியின் பெயரைப் பயன்படுத்த சபாநாயகர் அனுமதி வழங்காததால், 'AA' என்பருக்கு வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தால் அரசுக்கு 30,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று ராகுல் கூறினார்.

இன்று மாலை நிகழ்ந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல், ''மனோகர் பரிக்கரின் படுக்கை அறையில் உள்ள கோப்பில் என்ன உள்ளது? அதை வைத்து பிரதமரை அவர் மிரட்டுகிறாரா? அந்தத் தகவல்கள் பிரதமர் மீது செலுத்தும் தாக்கம் என்ன?'' என்று கேள்வி எழுப்பினார்.

ரஃபேல் தொடர்பாக ஒற்றைக்கு ஒற்றையாக பிரதமருடன் விவாதிக்க எனக்கு 20 நிமிடங்கள் தாருங்கள் என்றும் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி சவால் விடுத்தார் .

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ரண்தீப் சிங் சுர்ஜேவாலா

மோதிக்கு காங்கிரஸ் கட்சியின் 10 கேள்விகள்

இதனிடையே பிரதமர் நரேந்திர மோதி புத்தாண்டில் அளித்த சிறப்பு நேர்காணலை தொடர்ந்து, செய்தியாளர் கூட்டத்தை கூட்டிய காங்கிரஸ் கட்சி, அதில் பிரதமரிடம் 10 கேள்விகளை முன்வைத்திருக்கிறது.

பிரதமரின் பேட்டியை விமர்சித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சிங் சுர்ஜேவாலா, 'மலையை வெட்டினால் எலி ஓடுகிறது' என்று கிண்டலடித்தார்.

நரேந்திர மோதியின் 90 நிமிட பேட்டியில், 'நான், எனது, என்னுடைய, என்னால்' என்ற வார்த்தைகளையே அவர் நூற்றுக்கணக்கான முறை பயன்படுத்தியிருக்கிறார் என்று சுட்டிக் காட்டுகிறார் ரண்தீப் சிங் சுர்ஜேவாலா.

55 மாதங்களாக ஆட்சிப் பொறுப்பை நிர்வகித்து வரும் பிரதமர் மோதியிடம் இன்னும் எஞ்சியிருப்பது 100 நாட்கள் மட்டுமே. அவரது கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது.

நாங்கள் கேட்கும் இந்த கேள்விகளுக்கு பிரதமர் பதில் சொல்லட்டும் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சிங் சுர்ஜேவாலா சவால் விடுத்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

1. 2014 தேர்தல் பிரசாரத்தில் வாக்குறுதி அளித்தபடி பொதுமக்கள் ஒவ்வொருவரின் கணக்கிற்கும் 15 லட்ச ரூபாய் எப்போது வந்து சேரும் பிரதமர் அவர்களே?

2. 100 நாட்களுக்குள் 80 லட்சம் கோடி கருப்புப் பணம் வரவேண்டியிருந்ததே? 55 மாதங்களாகியும் அது ஏன் வரவில்லை?

3. ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்புகள் என்ற அடிப்படையில் 55 மாதங்களில் ஒன்பது கோடி வேலைவாய்ப்புகள் உருவாகியிருக்க வேண்டுமே? ஆனால் ஒன்பது லட்சம் வேலைவாய்ப்புகள் கூட உருவானதுபோல் தெரியவில்லையே?

4. விவசாயிகளின் சாகுபடி செலவில் 50% அளவுக்கு லாபம் கிடைக்கும் என்று கொடுத்த வாக்குறுதி நிறைவேறிவிட்டதா?

5. தொழில் நடைமுறைகளை எளிதாக்குவதாக உறுதி அளித்தீர்களே? ஆனால், ஜி.எஸ்.டியை சுமத்தி தொழில்களை மந்தமாக்கியது ஏன்?

6. பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டு, பொதுமக்களை வரிசையில் நிற்க வைத்துவிட்டு, கருப்புப் பணம் வைத்திருப்பவருக்கு சாதகமாக இரவோடு இரவாக அவர்களின் பணத்தை மாற்றிக் கொடுத்தீர்களே? நாட்டின் பொருளாதாரத்தில் மூன்றரை லட்சம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தினீர்களே? பணம் எடுக்க வரிசையில் நின்ற 120 பேர் இறந்தார்களே? இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?

படத்தின் காப்புரிமை Getty Images

7. தேச பாதுகாப்புடன் ஏன் விளையாடினீர்கள்? ஜம்மு - காஷ்மீரில் கடந்த 55 மாதங்களில் 428 ராணுவ வீர்ர்களும், பொதுமக்களில் 278 பேரும் உயிரிழந்தார்களே? நக்சல்வாதத்தினால் 248 ராணுவ வீரர்களும், பொதுமக்களில் 378 பேரும் கொல்லப்பட்டார்களே? இதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்?

8. ஊழல் தலைவிரித்தாடுகிறது. ரஃபேல் விவகாரத்தில் 3 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல். தவறேதும் நடக்கவில்லை என்று சொல்வது உண்மையென்றால், கூட்டு நாடாளுமன்ற குழு (ஜி.பி.சி) விசாரணைக்கு ஒப்புக்கொள்ள மறுப்பது ஏன்?

9. கங்கை நதி தூய்மையாகிவிட்டதா பிரதமரே? கங்கையில் 39 இடங்களில் 38 இடங்களில் கங்கை இப்போதும் மாசடைந்திருப்பதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறுகிறதே?

10. 100 ஸ்மார்ட் சிட்டிகளின்ன் நிலை என்ன பிரதமரே? ஒன்றுகூட தயாராகவில்லை போலிருக்கிறதே? ஸ்டார்ட் அப் இண்டியா, ஸ்டாண்ட் அப் இண்டியா போன்றவை எல்லாம் என்னாயிற்று? அந்த பெயர்களை இப்போதெல்ல்லாம் நீங்கள் உச்சரிப்பதுகூட இல்லையே பிரதமரே?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: