தொடரும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் - அமைச்சர்கள் மோதல்

ராதாகிருஷ்ணன் சண்முகம்

தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனை மையமாக வைத்து உருவான அமைச்சர்கள் - ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் அதிகாரிகள் மீதான மோதலை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அவரது மரணத்தை சந்தேக மரணமாக பதிவுசெய்து விசாரிக்க வேண்டுமென்றும் கூறினார். மேலும், ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்ய வேண்டாமென சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் முடிவெடுத்ததாகவும், அந்த முடிவின் பின்னணியில் யார் இருந்தது என்றும் கேள்வியெழுப்பினார்.

இந்த நிலையில், தமிழ்நாடு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கம் கடந்த இரண்டாம் தேதியன்று கூடி, தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினர்.

படத்தின் காப்புரிமை Getty Images

அதில், அமைச்சர் ஒருவர் மாநில சுகாதாரத் துறை செயலர் குறித்து வெளிப்படையாக விமர்சனங்கள் வைப்பது குறித்துச் சுட்டிக்காட்டப்பட்டது. மறைந்த முதல்வருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து சுகாதாரத் துறை செயலர் முடிவுசெய்ய முடியாது என்றும் மருத்துவர்களே எடுப்பார்கள் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

முதல்வரின் மரணம் குறித்து விசாரணை ஆணையம் நடத்தும் விசாரணைகள், பொதுவெளிக்கு வராத நிலையில், ஒருவர் அளித்த சாட்சியத்தை அமைச்சர் ஒருவர் வெளிப்படுத்துவது ஆச்சரியமளிப்பதாகவும் அந்த அறிக்கை கூறியது.

சட்ட அமைச்சர் தவிர, மீன் வளத் துறை அமைச்சரும் விசாரணை ஆணையம் தவிர, "காவல் துறையும் சரியான ட்ரீட்மென்ட் கொடுத்து விசாரித்தால் உண்மை வெளியாகும்" என்று கூறியிருப்பதையும் கவலையோடு சுட்டிக்காட்டிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், தங்களால் வெளிப்படையாக பேச முடியாத நிலையில், அமைச்சர் ஒருவர் தங்கள் மீது குற்றம்சாட்டுவது நியாயமானதல்ல என்றும் இவ்வாறு செய்வது தங்களது மனதிடத்தை குலைப்பதாகவும் பணிகளைச் சரியாகச் செய்யவிடாமல் தடுப்பதாகவும் கூறினர்.

முதல்வர் இந்த விவகாரத்தில் தலையிட்டு, இம்மாதிரி கருத்துகளை அமைச்சர்கள் பொதுவெளியில் வெளியிடுவதை தடுக்க வேண்டுமென்றும் அறிக்கை வலியுறுத்தியது.

ஜனவரி நான்காம் தேதியன்று இந்த அறிக்கையை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்க நிர்வாகிகள் முதல்வரை சந்தித்து அளித்து, அமைச்சர்கள் குறித்து புகார் தெரிவித்தனர். இந்த அறிக்கை ஊடகங்களிலும் கசிந்தது.

இந்த நிலையில், இன்று காலையில் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் அருண்மொழி தேவன், சட்டமன்ற உறுப்பினர் முருகுமாறன் ஆகியோர், சி.வி. சண்முகத்திற்கு ஆதரவாகவும் சுகாதாரத் துறை செயலருக்கு எதிராகவும் கருத்துக்களைத் தெரிவித்தனர்.

"தமிழகத்தின் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் குறித்து அமைச்சர் சி.வி.சண்முகம் சந்தேகம் எழுப்பியிருந்த நிலையில், சேத்தியாத்தோப்பில் டி.டி.வி. தினகரன் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனை உயர்வாகப் பேசியிருக்கிறார். மேலும் அமைச்சர் சி.வி.சண்முகம் குறித்தும் அவர் சந்தேகம் எழுப்பியிருக்கிறார். இது பூனைக் குட்டி வெளியில் வந்துவிட்டது என்பதையே காட்டுகிறது" என்று அருண்மொழித் தேவன் குற்றம்சாட்டினார்.

"ஜெயலலிதாவை மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாட்டிற்குக் கொண்டு செல்ல வேண்டாமென்ற முடிவை முடிவை அவர் எப்படி எடுத்தார் என்பதை சுகாதாரத்துறை செயலர் பொதுமக்களிடம் விளக்க வேண்டும் என்கிற ஐயப்பாட்டைத்தான் சாதாரண அதிமுக தொண்டராக இருந்து அமைச்சர் சி.வி.சண்முகம் எழுப்பியுள்ளார்." என திருத்தணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கோ. அரி கூறினார்.

இதற்கிடையில் இன்று மீண்டும் விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம், ராதாகிருஷ்ணனையும் டிடிவி தினகரனையும் மீண்டும் குற்றம்சாட்டினார். "அம்மாவின் தொண்டர் என்ற முறையில் சந்தேகத்தை எழுப்பியிருந்தேன். அதற்குப் பதில் சொல்லாமல் அரசு அதிகாரியை கேள்வி கேட்கலாமா என்று பதிலுக்குக் கேட்கிறார்கள். யாரை வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம். கேள்விகேட்கக் கூடாது எனச் சொல்ல இது ஹிட்லர் ஆட்சி அல்ல. ஆனால், அமைச்சர்களைக் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறுவது சரியல்ல. அவர்கள் தங்களைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்" என்று கூறினார் சி.வி. சண்முகம்.

இம்மாதிரியான நடவடிக்கைகள் அரசு நிர்வாகத்தை கடுமையாக பாதிக்கும் என்கிறார் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான தேவசகாயம். "அமைச்சர்கள் வாய்க்கு வந்ததைப் பேசுவது சரியல்ல. இதற்கென ஒரு ஆணையம் இருக்கிறது. அங்கே சென்றுதான் அவர்கள் தங்கள் சந்தேகங்களைச் சொல்ல வேண்டும். வெளிப்படையாகச் சொல்வது சரியல்ல. தமிழகத்தில் அரசு நிர்வாகம் முழுமையாக சீர்குலைந்திருக்கிறது என்பதையே இது காட்டுகிறது" என்கிறார் தேவசகாயம்.

இது மிக ஒரு ஆபத்தான போக்கு என்று சுட்டிக்காட்டுகிறார் ஃப்ரண்ட்லைன் இதழைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளரான இளங்கோவன். "முதல்வர் திடீரென மரணமடையவில்லை. 2 மாதங்களுக்கு மேல் மருத்துவமனையில் இருந்துதான் மரணமடைந்துள்ளார். ஒரு மிகப் பெரிய மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றிருக்கிறார். ஒட்டுமொத்த அமைச்சரவையும் அங்கே இருந்திருக்கிறது. இந்த நிலையில், ஒரு செயலரை குறைசொல்வது சரியாகத் தெரியவில்லை. இது நிர்வாகத்தை சீர்குலைக்கும் அபாயகரமான போக்கு" என்கிறார் இளங்கோவன்.

சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் திடீரென சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணனை குறிவைப்பது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. முதல்வரின் மரணத்தை விசாரிக்கும் விசாரணை ஆணையத்தையும் தாண்டி, சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்றை அமைப்பதற்கான முன்னோட்டமாக இந்த மோதலை அமைச்சர்கள் நடத்தக்கூடும் என்ற பார்வையும் அரசியல் நோக்கர்களிடம் இருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்