சித்ர சந்தை: ஓவியங்களும், சிற்பங்களும் குவியும் ஒரு கலைத் திருவிழா

சித்ர சந்தை

இந்த புத்தாண்டின் முதல் ஞாயிற்றுக்கிழமை பெங்களூரு நகரில் சித்ர சந்தை என்ற பெயரில் வீதி கலைக் கண்காட்சி நடந்தது. ஒரு நாள் முழுவதும் நடை பெற்ற இந்த விழாவை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று நடத்திவருவது கர்நாடக சித்ரகலா பரிஷத் என்ற நிறுவனம்.

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாள் விழாவை கொண்டாடும் வகையில் இந்த ஆண்டிற்கான சித்ர சந்தை மகாத்மா காந்தியை கருப் பொருளாக கொண்டு நடத்தப்பட்டது. காந்தி அவர்கள் ஒவ்வொரு முறை பெங்களூரு வரும்போதும் சித்ர சந்தை நடத்தப்படும் குமார க்ருபா வீதியில் உள்ள விருந்தினர் இல்லத்தில் தங்குவார் என்று கூறப்படுகிறது.

எனவே, காந்தியை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்ட பல ஓவியங்கள் இந்த சந்தையில் இந்த ஆண்டு இடம் பெற்றிருந்தன.

கலையை எல்லாத் தரப்பு மக்களுக்கும் கொண்டு செல்லும் நோக்கோடு நடந்துவரும் சித்ர சந்தையில் 100 ரூபாயில் இருந்து 4 லட்சம் வரை விலையுள்ள கலை பொருட்கள் விற்கப்பட்டன.

"இந்த அளவிற்கு இந்த விழா வெற்றி பெரும் என நாங்கள் என்னவே இல்லை. வளரும் கலைஞர்கள், மூத்த கலைஞர்கள் மற்றும் கலைஞராக விரும்புவோர் என எல்லோரும் சங்கமிக்கும் ஒரு மேடையாக இது திகழ்கிறது. இந்த ஆண்டு மட்டும் சுமார் 2,800 விண்ணப்பங்கள் வந்தன. போதுமான இடம் இல்லாததால் 1500 கலைஞர்களை மட்டுமே அனுமதிக்க முடிந்தது," என்று கூறினார் சித்ர கலா பரிஷத்தின் தலைவர் பி.எல்.ஷங்கர்.

ஓவியங்கள், புகைப்படங்கள் மற்றும் சிற்பங்களைக் காண சுமார் 4 லட்சத்திற்கும் மேலானோர் வந்திருந்தனர்.

இந்த விழா பல வளரும் கலைஞர்களுக்கு உத்வேகத்தைத் தருகிறது. "எனது ஓவியங்களுக்கு எண்ணங்களைத் தேடிதான் இங்கு வந்துள்ளேன். இங்கு உள்ள எண்ணெய் ஓவியங்கள் மற்றும் தஞ்சாவூர் ஓவியங்கள் பிரமிப்படைய வைக்கின்றன. சில நாட்களில் நக்கவிருக்கும் எனது கண்காட்சிக்கு இது பெரும் உதவியாக இருக்கும்"என்றார் 16 வயது கலைஞர் ஸ்ரீ வர்ஷா.

இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து கலைஞர்கள் வந்திருந்தாலும் தமிழர்கள் மத்தியில் இந்த விழா பிரபலமானது. சென்னை, தஞ்சாவூர், புதுச்சேரி என தமிழகத்தின் பல மாவட்டங்களின் இருந்து கலைஞர்கள் பங்கேற்றார்கள்.

"எங்களது கலைப்பொருட்களுக்கு இங்கு வரும் மக்களிடையே கிடைக்கு வரவேற்பு பெரும் உற்சாகத்தை அளிக்கிறது. சிறு குழந்தைகள் முதல் சக்கர நாற்காலியில் வரும் முதியவர்கள் வரை அனைவரும் காட்டும் உற்சாகம் மிகவும் ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது" என்றார் சென்னையை சேர்த்த கலைஞர் ரவிச்சந்திரன். இவர் கடந்த எட்டு ஆண்டுகளாக இந்த விழாவில் பங்கேற்று வருகிறார்.

இந்த விழாவில் பாகேற்ற கலைஞர்களுள் சுமார் 25 சதவீதத்தினர் தமிழர்கள் தான். தமிழ்க் கலைஞர்கள் இவ்வளவு இருக்கும்பொழுது ஏன் இது போன்ற விழாவை சென்னையில் நடத்த கூடாது? "சென்னையில் ஓவிய விழாக்கள் நடந்தாலும் இந்த அளவுக்கு நடத்துவது கடினமே. தமிழர்களுக்கு கலை ஆர்வம் இருந்தாலும் ஓவியங்களுக்கு பணம் கொடுத்து வாங்க இன்னும் யோசிக்கிறார்கள்" என்கிறார் சென்னை கவின்கலைக் கல்லூரி முன்னாள் மாணவர் செல்வ குமார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
‘சித்ர சந்தை ’ - கலைஞர்களுக்காக ஒரு திருவிழா

 பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்