'எல்லையில் ராணுவ வீரர்கள்...' - பகிரப்படும் புகைப்படங்களில் உண்மை உண்டா? #BBCFactCheck

#BBCபுலனாய்வு படத்தின் காப்புரிமை FACEBOOK

இந்திய ராணுவ வீரர்கள் கடுமையான தட்பவெட்ப நிலையில் பணிபுரிவது போன்று சமூக ஊடகங்களில் சில புகைப்படங்கள் சமீபத்தில் வைரலாகின.

பல சமூக ஊடக பக்கங்கள், அதுவும் நடிகை ஷ்ரத்தா கபூர், கிரக் கேர் போன்றவர்களின் அங்கீகரிக்கப்பட்ட ட்விட்டர் பக்கங்களில் கூட இந்தப் புகைப்படங்கள் பகிரப்பட்டன. இந்திய ராணுவத்தின் அர்ப்பணிப்பை போற்றும் வகையில் அவை பகிரப்பட்டன.

இந்திய ராணுவத்தினர் கடுமையான தட்பவெட்ப நிலையில் பணிபுரிவார்கள்தான் - உலகின் மிக உயர்ந்த போர்க்களம் என்று விவரிக்கப்படும் சியாச்சின் பணிப்பாளத்தில் அவர்கள் வேலை பார்ப்பார்கள். 13,000 முதல் 22,000 அடி உயரம் வரையிலும் ராணுவ வீரர்கள் நிறுத்தப்படுவார்கள்.

ஆனால், சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்படும் புகைப்படங்களில் இருப்பவர்கள் இந்திய ராணுவத்தினர் அல்லர். பிபிசி புலனாய்வில் அந்த புகைப்படங்களில் இருப்பது ரஷ்யா மற்றும் செர்பியா நாட்டை சேர்ந்த ராணுவ வீரர்கள் என்று தெரியவந்தது. அவர்கள் இந்திய ராணுவத்தினர் என்று தவறாக சித்தரிக்கப்பட்டு அந்தப் படங்கள் பகிரப்படுவதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

லைக்குகள் மற்றும் ஷேர்கள் வாங்குவதற்காகவே சில சமூக ஊடகப் பக்கங்கள் இதனை வேண்டுமென்றே செய்வதுபோலத் தெரிகிறது. இந்திய ராணுவத்திற்கு மரியாதை செலுத்துகிறோம் என சில பாலிவுட் பிரபலங்களும் இந்த போலிச் செய்திகளை நம்பி ஏமாறுகின்றனர்.

வேண்டுமென்றே தவறான தகவல்கள் பரப்பப்பட்ட சில உதாரணங்களை இங்கே பார்க்கலாம்.

படத்தின் காப்புரிமை FACEBOOK

கூற்று: "இவர்கள் சினிமா நடிகைகளை விட எந்த வகையிலும் குறைந்தவர்கள் இல்லை. இந்த தைரியமான பெண்கள் பாகிஸ்தான் எல்லையில் பணிபுரிகிறார்கள். ஜெய் ஹிந்த் என்று எழுதத் தயங்காதீர்கள்" என்று விவரித்து ராணுவ உடை அணிந்து மற்றும் துப்பாக்கி ஏந்தி இரு பெண்கள் இருக்கும் புகைப்படம் சமூக ஊடகத்தில் வைரலாக பகிரப்பட்டது.

இந்த புகைப்படத்தில் வலது பக்கத்தில் இருக்கும் பெண்ணின் உடையில் இந்தியக் கொடி போன்று ஒரு கொடி உள்ளது. @indianarmysupporter என்ற பக்கம் இதனை பதிவு செய்ய, 3,000க்கும் மேற்பட்ட மக்கள் பகிர்ந்துள்ளனர்.

உண்மை: இப்படத்தில் இருக்கும் இரு பெண் ராணுவ வீரர்களும், வட ஈராக்கை சேர்ந்த குர்து பெஷ்மெர்கா படையைச் சேர்ந்த போராளிகள் ஆவர். பெஷ்மெர்கா என்பதற்கு "சாவை எதிர்கொள்பவர்கள்" என்று அர்த்தம். இவர்கள் ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக போராடுகிறார்கள். 1800-களின் இறுதியில் சில பழங்குடி எல்லை பாதுகாப்பு குழுக்களை சார்ந்தவர்கள் பெஷமர்காவினர். ஆனால், முதலாம் உலகப்போர் தொடங்கிய பின்பு ஓட்டோமன் சாம்ராஜ்யம் வீழ்ந்த பிறகு, குர்து மக்களின் தேசிய போராடும் படைகளாக முறையான ஒருங்கிணைக்கப்பட்டனர். இதில் அந்த ராணுவ வீரரின் சீருடையில் உள்ள கொடி, சுதந்திர குர்திஸ்தானுக்காக அவர்கள் போராடிய போது இருந்த கொடியாகும்.

படத்தின் காப்புரிமை FACEBOOK

கூற்று: "நாம் உறங்க வேண்டும் என்பதற்காக நம் ராணுவ வீரர்கள் -5 டிகிரியிலும் பணி புரிகிறார்கள். ஜெய் ஹிந்த், ஜெய் பாரத்" என்று எழுதி ஒரு முகம் முழுவதும் பனிக்கட்டியால் மூடப்பட்டிருக்கும் ஆண் ஒருவரின் புகைப்படம் வெகுவாக பகிரப்பட்டு வந்தது.

இதில் கடல் பக்கத்தில் நின்று கொண்டிருக்கும் அந்த மனிதரின் முகம் முழுவதும் பனியால் மூடப்பட்டுள்ளது.

உண்மை: அந்தப் புகைப்படத்தில் இருப்பவர் அமெரிக்க நீச்சல் வீரரான டான் செட்டர். இசையமைப்பாளரும் பாடகருமான ஜெர்ரி மில்ஸ் பதிவு செய்த வீடியோவில் இருந்து எடுக்கப்பட்டதே அப்புகைப்படம். டான் எவ்வாறு கடுமையான தட்பவெட்ப நிலையில் லேக் சுப்பீரியரில் சர்ஃப் செய்ததால், அவரது தாடி பனியால் மூடப்பட்டது என்று அதனை வீடியோ எடுத்து அதனை யூ டியூபில் பதிவேற்றி இருந்தார்.

படத்தின் காப்புரிமை FACEBOOK
Image caption டான் செட்டர்

இதுபோன்று புகைப்படங்களை பகிர்வது ஒன்றும் புதிதல்ல. கடந்த காலங்களிலும் இதுபோன்று சில படங்கள் பகிரப்பட்டு பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்டன. ஆனாலும், வெவ்வேறு தளங்களில் இவற்றை மீண்டும் பார்க்க முடிகிறது.

படத்தின் காப்புரிமை FACEBOOK

கூற்று: பனியால் மூடப்பட்டு படுத்திருக்கும் இரு ராணுவ வீரர்களின் படம் ஒன்று கடந்த சில ஆண்டுளாக பகிரப்பட்டு வருகிறது.

இந்தப்படம் நடிகை ஷ்ரத்தா கபூர் மற்றும் கிரன் கேர் ஆகியோராலும் பகிரப்பட்டது. இதே மாதிரியான ஒரு புகைப்படம் 2014ஆம் ஆண்டு யுக்ரைனிலும் வைரலாக பகிரப்பட்டது. அதில் -20 டிகிரியில் யுக்ரேனிய ராணுவ வீரர்கள் பணிபுரிகிறார்கள் என்பது போன்று எழுதப்பட்டிருந்தது.

உண்மை: இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்ட இடம் ரஷ்யா. அவர்களின் ராணுவ வீரர்களுக்கு எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் பயிற்சி அளிக்கப்படும்போது எடுக்கப்பட்டதாகும். ரஷ்யாவின் சில அதிகாரபூர்வ வலைதளங்களில் இப்படம் பதிவேற்றப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: