பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்று: வீட்டிலேயே தொழில் செய்து அசத்தும் பெண்கள்

''வீட்டுவேலை செய்யும் பெண்கள் பலரும், ஓய்வு நேரத்தில் பைகள் தைத்து கொடுக்கிறார்கள்"
Image caption ''வீட்டுவேலை செய்யும் பெண்கள் பலரும், ஓய்வு நேரத்தில் பைகள் தைத்து கொடுக்கிறார்கள்"

ஜனவரி 2019 தொடக்கத்தில் இருந்து பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை தடைசெய்துள்ளதால், மாநிலம் முழுவதும் உள்ள பெண்கள் சுயஉதவிக் குழுவினர் பலர் துணி,காகிதம் மற்றும் சணல் பைகளை தீவிரமாக தயாரித்துவருகின்றனர்.

ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளை தடைசெய்யும் இந்த முயற்சியால், தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நூற்றுக்கணக்கான பெண்களுக்கு பை தைத்து கொடுப்பது, வண்ண அச்சுகளை பொறிப்பது போன்ற வேலைகள் கிடைத்துள்ளன.

சாதாரண தையல் வேலை தெரிந்த இல்லத்தரசிகளுக்கு எளிமையான வேலையாக பை தயாரிப்பு மாறிவருகிறது என பெண் சுய உதவிக் குழுவினரை சந்தித்தபோது தெரியவந்தது.

பிளாஸ்டிக் பை தடையால் பெண்கள் வாழ்வில் ஏற்றம்

சென்னை அயனாவரம் பகுதியில் ஒரு பைதயாரிப்பு நிறுவனத்தை நடத்திவரும் இந்திரா ஸ்ரீனிவாசன் (51) தனது இரண்டு மகள்கள்,மருமகள், தோழிகள் என தன்னுடைய குடும்பத்தினரைக் கொண்டே ஒரு தொழில் வட்டத்தை உருவாக்கியுள்ளார்.

''ஜனவரி 2019 முதல் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை அரசு தடை செய்துள்ளது. இதனால் சணல் மற்றும் துணி பைகளுக்கான தேவை சந்தையில் அதிகமாகும். தற்போது எங்களுக்கு வரும் ஆடர்கள் மேலும் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையோடு வேலைசெய்கிறோம். எங்கள் உழைப்புக்கான ஊதியம் கிடைப்பதோடு, நாங்கள் அனைவரும் சுற்றுச்சூழலை பாதுகாக்க எங்களால் இயன்ற வேலையை செய்கிறோம் என்ற எண்ணமும் எங்களை ஊக்குவிக்கிறது,'' என்கிறார் இந்திரா.

Image caption பைதயாரிப்பு நிறுவனத்தை நடத்திவரும் இந்திரா ஸ்ரீனிவாசன்

இந்திராவின் வீட்டில் இரண்டு அறைகளை ஒதுக்கி பைகளை குவித்துவைத்திருக்கிறார். ஆடர்கள் அதிகரித்தால் தையல் இயந்திரங்களை வீட்டின் முன்புறத்தில் வைத்துக்கொண்டு வீட்டுவேலைகளையோடு, பைகளை தயாரித்து முடிக்கிறார்.

''வீட்டுவேலை செய்யும் பெண்கள் பலரும், ஓய்வு நேரத்தில் பைகள் தைத்துக் கொடுக்கிறார்கள். நாங்கள் 40 விதமான பைகளைத் தயாரிக்கிறோம். குறைந்தபட்சம் 50 பைகளில் இருந்து 3,000 பைகள் வரை உடனே தயாரித்துக் கொடுக்கும் அளவு எங்கள் குழுவினர் ஊக்கமாக உள்ளனர்,'' என இந்திரா கூறுகிறார்.

கடந்த ஒன்பது ஆண்டுகளாக சணல்,துணி பைகளை தயாரித்துவந்தாலும், அரசு கொண்டுவரும் தடையால், தனது தொழில் ஏற்றம் பெறும் என்று நம்புகிறார் இந்திரா.

துணி பைகள் தந்த புதிய சொந்தங்கள்

மளிகைக் கடை, துணிக் கடைகள், உணவகங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் என பல இடங்களில் பயன்பாட்டில் உள்ள பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு உடனடியாக மாறாவிட்டால், அந்த மாற்றத்தை நோக்கி எடுத்துவைக்கும் முதல் அடியே பலருக்கு உதவேகத்தை கொடுத்துள்ளது.

சுற்றுச்சூழலுக்கு உகந்த பைகளை தயாரிக்கும் பணி பலருக்கு புதிய நண்பர்களை தேடிக்கொடுத்துள்ளது என்ற கதைகளையும் கேட்டோம்.

ஆர்.ஏ.புரம் பகுதியைச் சேர்ந்த இண்டீரியர் டெகர்ரேட்டர் சுமித்ரா அதில் ஒருவர். ஆறு மாதங்களுக்கு முன்பு, தனது நண்பர்கள் வட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை பற்றிய பேச்சுகள் தொடங்கவே, அதில் துணிப்பைகளை பயன்படுத்தவேண்டும் என்ற முடிவும் சேர்ந்துகொண்டது. ஆர்.ஏ. புரத்தில் இல்லத்தரசிகள் மற்றும் மாற்றுத்திறனாளி பெண்கள் பலருக்கும் தையல் வேலைகள் அளிக்கும் தன்னார்வ தொண்டு நிறுவங்களை தேடி சுமித்ரா செல்லவே, புதிய சொந்தங்கள் அவருக்குக் கிடைத்தன.

மாற்றுத்திறன் பெண்கள் குழுவினர் மற்றும் வீட்டுவேலை செய்யும் பெண்கள் பைகளை தைத்துத் தர தயாராக இருந்ததால், சுமித்ராவின் நண்பர்கள் துணிகளைச் சேகரிக்கத் தொடங்கினர்.

''திரைச்சீலை கடையை நடத்தும் ராம்மோகன் என்பவர் தன்னிடம் உள்ள மாதிரி திரைச்சீலைகளை இலவசமாக கொடுக்கமுன்வந்தார். மாற்றுத்திறனாளி பெண்கள் தைத்த பைகளை விற்றுத்தர ஒரு சூப்பர்மார்க்கெட் நிறுவனம் ஒப்புக்கொண்டது. பைகளுக்கான பணத்தையும் அந்த பெண்களுக்கு உடனே கொடுக்கமுடிந்தது. ஜனவரி முதல், அரசு கொண்டுவந்துள்ள தடையை தனிநபர்கள் பின்பற்றினால், இன்னும் பல பெண்களுக்கு வேலைகொடுத்து உதவ முடியும்,'' என்கிறார் சுமித்ரா.

இந்திரா, சுமித்ரா போல பல பெண்கள் உறுப்பினர்களாக உள்ள தமிழ்நாடு அரசு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தில் பை தயாரிப்பு பயிற்சி பட்டறைகள் தொடங்கியுள்ளன. மகளிர் மேம்பாட்டு நிறுவன அதிகாரிகளிடம் பேசியபோது ஒவ்வொரு மாவட்டங்களிலும் சுமார் 10 குழுவைச் சேர்ந்த பெண்கள் பை தயாரிப்பில் இறங்கியுள்ளதாக கூறினர்.

தமிழகம் முழுவதும் தனியார் நிறுவங்கள் பலவும் பைகள் தயாரிப்பதில் இறங்கினாலும், பெண்கள் குழுவினரின் பைகளை சந்தைப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டுவருவதாகக் குறிப்பிட்டனர்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் கண்காட்சி நடத்துவதோடு, பெண்களின் தயாரிப்புகளை இணையத்தில் விற்க, இணையதளம் ஒன்றும் தயாராகி வருகிறது என்றும் கூறினார் சுமித்ரா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: