முன்னேறிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு: மாநிலங்களவையில் நிறைவேறியது மசோதா

நாடாளுமன்றம் படத்தின் காப்புரிமை Getty Images

முன்னேறிய வகுப்பினரில் பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற மக்களவை நிறைவேறிய நிலையில்,மாநிலங்களவையில் இது தொடர்பாக புதன்கிழமை விவாதம் நடந்து வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது.

இரவு 10 மணிக்கு மேல் நடந்த இந்த வாக்கெடுப்பில் முன்னேறிய வகுப்பினரில் பின் தங்கியவர்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு வகை செய்யும் அரசமைப்புச் சட்டத்தின் 124 வது திருத்த மசோதா அருதிப் பெரும்பான்மையுடன் நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 149 பேரும், எதிராக 7 பேரும் வாக்களித்தனர்.

திமுக, அதிமுக எம்.பி.க்கள் முன்னதாக இந்த மசோதாவை எதிர்த்துப் பேசினர். சி.பி.ஐ (எம்) உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் இந்த திட்டத்தை ஆதரித்துப் பேசியபோது திமுக உறுப்பினர் கனிமொழி அதை ஆட்சேபித்து சத்தமிட்டார்.

திமுக உறுப்பினர் கனிமொழி பேசும்போது, மகளிர் இட ஒதுக்கீட்டை நிறைவேற்றவேண்டும் என்றும் வலியுறுத்திப் பேசினார்.

படத்தின் காப்புரிமை RajyaSabha TV

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த மசோதா தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும். அவர் கையெழுத்திட்டதும் இது சட்டமாகும்.

முன்னேறிய வகுப்பினரில் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் இத்தகைய ஒரு திட்டம் நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது கொண்டுவரப்பட்டாலும், உச்சநீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் கொண்ட அரசமைப்புச் சட்ட அமர்வால் அது நிராகரிக்கப்பட்டது.

அது போல இந்த அரசமைப்பு திருத்த சட்டமும் நீதிமன்றத்தில் சவாலுக்கு உள்ளாகும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தமிழகத்தின் முன்னணி கட்சிகளான திமுக- அதிமுக தவிர, பாஜக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட நாட்டின் பெரும்பான்மையான பிற கட்சிகள் அனைத்தும் இந்த சட்டத்தை ஆதரித்தன.

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கும்போது இப்படி ஒரு சட்டத் திருத்தம் கொண்டுவரப்படும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

இப்படி ஒரு சட்டத்தை கொண்டுவர அமைச்சரவை ஒப்புக்கொண்டதாக திங்கள்கிழமை செய்தி வெளியானது. செவ்வாய்க்கிழமையே மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு அதே நாளில் நிறைவேற்றப்பட்டது.

மறுநாள், புதன்கிழமை மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. மொத்தத்தில் மூன்றே நாளில் இந்த சட்டத் திருத்தம் பற்றிய செய்தி வெளியாகி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்