முன்னேறிய வகுப்பினர் இட ஒதுக்கீடு மசோதா:மாநிலங்களவையிலும் நிறைவேறியது - மற்றும் பிற செய்திகள்

படத்தின் காப்புரிமை Hindustan Times

முன்னேறிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு: மாநிலங்களவையில் நிறைவேறியது மசோதா

முன்னேறிய வகுப்பினரில் பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற மக்களவை நிறைவேறிய நிலையில்,மாநிலங்களவையில் இது தொடர்பாக புதன்கிழமை விவாதம் நடந்து வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது.

இரவு 10 மணிக்கு மேல் நடந்த இந்த வாக்கெடுப்பில் முன்னேறிய வகுப்பினரில் பின் தங்கியவர்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு வகை செய்யும் அரசமைப்புச் சட்டத்தின் 124 வது திருத்த மசோதா அருதிப் பெரும்பான்மையுடன் நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 149 பேரும், எதிராக 7 பேரும் வாக்களித்தனர்.

திமுக, அதிமுக எம்.பி.க்கள் முன்னதாக இந்த மசோதாவை எதிர்த்துப் பேசினர். திமுக உறுப்பினர் கனிமொழி பேசும்போது, மகளிர் இட ஒதுக்கீட்டை நிறைவேற்றவேண்டும் என்றும் வலியுறுத்திப் பேசினார்.

சி.பி.ஐ (எம்) உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் இந்த திட்டத்தை ஆதரித்துப் பேசியபோது திமுக உறுப்பினர் கனிமொழி அதை ஆட்சேபித்து சத்தமிட்டார்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த மசோதா தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும். அவர் கையெழுத்திட்டதும் இது சட்டமாகும்.

விரிவாக படிக்க: முன்னேறிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு: மாநிலங்களவையில் நிறைவேறியது மசோதா

"தொடரும் காஷ்மீர் கொலைகள்"- எதிர்த்து ஐ.ஏ.எஸ். அதிகாரி பதவி விலகல்

Image caption ஷா ஃபைசல்

காஷ்மீரில் கேட்பாரின்றி தொடரும் கொலைகளையும், மத்திய அரசின் பாராமுகத்தையும் கண்டித்து பதவி விலகுவதாகக் கூறியுள்ளார், 2009ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுத் தேர்ச்சி பெற்ற ஷா ஃபைசல் என்னும் அதிகாரி.

இது தொடர்பாக அவர் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட பதிவில், 200 மில்லியன் இந்திய முஸ்லிம்கள் இந்துத்துவ சக்திகளால் விளிம்பு நிலைக்கு தள்ளப்படுவதையும், காணாமல் ஆக்கப்படுவதையும், இரண்டாம்தரக் குடிமக்கள் ஆக்கப்படுவதையும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தனி அடையாளத்தின் மீதான தாக்குதலையும், இந்தியப் பெருநிலப் பகுதியில் அதி தேசியவாதத்தின் பெயரால் பெருகும் சகிப்பின்மை, வெறுப்புணர்வு ஆகியவற்றையும் கண்டித்தும் தாம் இந்திய ஆட்சிப் பணியில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

"இந்திய ரிசர்வ் வங்கி, சி.பி.ஐ., தேசிய புலனாய்வு முகமை, ஆகிய பொது நிறுவனங்களை சிதைப்பது இந்த நாட்டின் அரசமைப்புச் சட்டக் கட்டுமானத்தை அழிக்கவல்லது எனவே இவற்றை நிறுத்தவேண்டும் என்று இன்றைய ஆட்சியாளர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்" என்றும் அவர் கூறியுள்ளார்.

"பகுத்தறியும் குரல்களை இந்த நாட்டில் நீண்ட நாள்களுக்கு முடக்கிவைக்க முடியாது என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். உண்மையான ஜனநாயகத்தில் நடைபோட விரும்பினால் முற்றுகையிட்டதைப் போன்ற சூழல் முடிவுக்கு வரவேண்டும்.

இந்திய ஆட்சிப் பணியில் எனது சிறப்பான பயணத்துக்கு உறுதுணையாக இருந்த எனது குடும்பத்தினர், நண்பர்கள், நலம் விரும்பிகள் ஆகியருக்கு நன்றி.

ஐ.ஏ.எஸ். கனவோடு இருப்பவர்களுக்கு பயிற்சி அளித்து வழிகாட்டுவது இதற்கு மேல் என் முக்கியப் பணிகளில் ஒன்று," என்று அவர் கூறினார்.

விரிவாக படிக்க:"காஷ்மீரில் தொடரும் கொலைகள்": 2009ல் முதலிடம் பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பதவி விலகல்

தொடரும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் - அமைச்சர்கள் மோதல்

படத்தின் காப்புரிமை TWITTER

தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனை மையமாக வைத்து உருவான அமைச்சர்கள் - ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் அதிகாரிகள் மீதான மோதலை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அவரது மரணத்தை சந்தேக மரணமாக பதிவுசெய்து விசாரிக்க வேண்டுமென்றும் கூறினார். மேலும், ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்ய வேண்டாமென சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் முடிவெடுத்ததாகவும், அந்த முடிவின் பின்னணியில் யார் இருந்தது என்றும் கேள்வியெழுப்பினார்.

இந்த நிலையில், தமிழ்நாடு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கம் கடந்த இரண்டாம் தேதியன்று கூடி, தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினர்.

அதில், அமைச்சர் ஒருவர் மாநில சுகாதாரத் துறை செயலர் குறித்து வெளிப்படையாக விமர்சனங்கள் வைப்பது குறித்துச் சுட்டிக்காட்டப்பட்டது. மறைந்த முதல்வருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து சுகாதாரத் துறை செயலர் முடிவுசெய்ய முடியாது என்றும் மருத்துவர்களே எடுப்பார்கள் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

முதல்வரின் மரணம் குறித்து விசாரணை ஆணையம் நடத்தும் விசாரணைகள், பொதுவெளிக்கு வராத நிலையில், ஒருவர் அளித்த சாட்சியத்தை அமைச்சர் ஒருவர் வெளிப்படுத்துவது ஆச்சரியமளிப்பதாகவும் அந்த அறிக்கை கூறியது.

விரிவாக படிக்க:தொடரும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் - அமைச்சர்கள் மோதல்

மத்திய, மாநில அரசுகளை சாடிய ஸ்டாலின்

படத்தின் காப்புரிமை FACEBOOK/M.K.STALIN

மோதி பணக்காரர்களுக்காக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். விவசாய நிலங்களை அழித்து, ஒழித்து கார்ப்பரேட் நிறுவனத்தை உருவாக்க ஆட்சி செய்து கொண்டிருக்கிறார் என திருவாரூரில் நடந்த நிகழ்வொன்றில் ஸ்டாலின் பேசினார்.

நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் மாவட்டம் புலிவலம் ஊராட்சியில் "தி.மு.க ஊராட்சி சபைக் கூட்டத்தை" தொடங்கி வைத்துப் பேசினார்.

இன்றைக்கு தமிழ்நாட்டில் மேகதாது பிரச்னை, ஸ்டெர்லைட் பிரச்னை, விவசாயிகள், அரசு ஊழியர்கள் என அனைத்துத் தரப்பு மக்களின் பிரச்னைகளும் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கின்ற நிலையில், சட்டமன்றக் கூட்டத்துக்கு செல்ல வேண்டுமென முடிவுசெய்து, இதனை இன்றைக்கு தொடங்கியிருக்கிறோம்.

இந்தப் பயணம் பிப்ரவரி 17 வரையிலே நடைபெறவிருக்கிறது. இந்தப் பயணத்திற்கு, மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்கள் மனங்களை வெல்வோம் என்ற முழக்கத்தை வைத்துள்ளோம். அந்த அடிப்படையில் உங்களையெல்லாம் சந்திக்க வந்திருக்கிறோம் என்று அவர் அப்போது பேசினார்.

"இனி பேச்சுவார்த்தையை கிடையாது" - டிரம்ப்

படத்தின் காப்புரிமை SAUL LOEB
Image caption டிரம்ப்

அமெரிக்க அரசுத்துறைகளின் பகுதியளவு முடக்கத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் ஜனநாயக கட்சியினருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் இடையிலேயே அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியேறினார்.

தனது அமெரிக்க-மெக்ஸிகோ எல்லைச்சுவர் திட்டத்திற்கு நிதியளிக்க முடியாதென்று பேச்சுவார்த்தையின்போது அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசியும், ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் சக் ஸ்கூம்மரும் திட்டவட்டமாக கூற, ஏமாற்றமடைந்த டிரம்ப் கூட்டத்திலிருந்து வெளியேறினார்.

மேலும், இந்த பேச்சுவார்த்தை "முழுதாக ஒரு நேர விரயம்" என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

19 நாளாக தொடர்ந்து வரும் அமெரிக்க அரசுத்துறைகளின் பகுதியளவு முடக்கத்தால், கிட்டத்தட்ட 8,00,000 அமெரிக்க அரசுத்துறை பணியாளர்கள் ஊதியமின்றி வேலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: