விஸ்வாசம் படத்துக்கு பணம் தர மறுப்பு: தந்தையை கொளுத்திய மகன்

கைது செய்யப்படும் இளைஞர். படத்தின் காப்புரிமை Getty Images
Image caption படம்: சித்தரிப்புக்காக.

அஜித் நடித்த விஸ்வாசம் படம் இன்று (வியாழக்கிழமை) வெளியாகியுள்ள நிலையில், அதன் முதல் காட்சியைப் பார்த்துவிட வேண்டும் என்ற வெறி ஓர் இளைஞனின் புத்தியைப் பறித்துவிட்டது.

பிரசாந்த் என்கிற அஜித்குமார் என்ற அந்த இளைஞரின் வயது 20. வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே உள்ள கழிஞ்சூரை சேர்ந்தவர். 6-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு கட்டட வேலை செய்து வருகிறார்.

பீடி சுற்றும் தொழிலாளியான பாண்டியனின் (20) மகன் இவர்.

தீவிர அஜித் ரசிகரான பிரசாந்த், விஸ்வாசம் வெளியாவதற்கு முதல் நாளான புதன்கிழமை இரவு தமது தந்தையிடம் விஸ்வாசம் படம் பார்ப்பதற்கு டிக்கெட் கட்டணம் கேட்டுள்ளார். ஆனால், தந்தை பாண்டியன் பணம் தர மறுத்த நிலையில், ஆத்திரப்பட்டதாகவும், பிறகு அதிகாலை தந்தை பாண்டியன் தூங்கிக்கொண்டிருந்தபோது அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துவிட்டதாகவும் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

இந்தக் குற்றத்தை செய்யும்போது பிரசாந்த் குடித்திருந்ததாகவும் போலீசார் கருதுகின்றனர். இப்போது மகன் போலீஸ் பிடியில் இருக்கிறார்.

தீ வைத்ததும், பாண்டியன் எழுப்பிய அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

சுமார் 40 சதவீத தீக்காயங்களுடன் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார் பாண்டியன். அவருக்கு ஏற்பட்ட காயங்கள் தீவிரமானவை என்று மருத்துவர்கள் கூறுவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தலை, முகம், கைகளில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

இதுதவிர, வேலூர் நகரில் உள்ள அலங்கார் திரையரங்கில் நடந்த அதிகாலை விஸ்வாசம் படக் காட்சியில் ஏற்பட்ட நெரிசலில் தகராறு ஏற்பட்டு பிரதாப் என்ற ஒரு ரசிகர் இரண்டு சக ரசிகர்களை கத்தியால் குத்தியுள்ளார். இருவரும் தற்போது மருத்துவமனையில் உள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்