சிபிஐ இயக்குநர் பொறுப்பில் இருந்து அலோக் வர்மா நீக்கம்

அலோக் வர்மா நீக்கம் படத்தின் காப்புரிமை Getty Images

சிபிஐ இயக்குநர் பொறுப்பில் இருந்து அலோக் வர்மா நீக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான நியமனங்களுக்கான அமைச்சரவை குழு தெரிவித்துள்ளது.

அவர் தீயணைப்புத் துறையின் தலைமை இயக்குநர் பதவிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று அந்த அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.

சி.பி.ஐ-இன் பொறுப்பு இயக்குநராக, இணை இயக்குநராக இருந்த நாகேஸ்வர ராவ் மீண்டும் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அலோக் வர்மா நீக்கம் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, தன் மீதான விசாரணைக்கு அஞ்சியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.

படத்தின் காப்புரிமை TWITTER

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரசாந்த் பூஷன், ரஃபேல் வழக்கு குறித்த அச்சத்தில் பிரதமர் நரேந்திர மோதி இவ்வாறு செய்துள்ளதாக ட்வீட் செய்துள்ளார்.

படத்தின் காப்புரிமை TWITTER

இந்நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா தாக்கல் செய்திருந்த வழக்கில் நாளை (வெள்ளிக்கிழமை) டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.

மத்திய அரசால் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட முன்னாள் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை மீண்டும் சிபிஐ இயக்குநராக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

அலோக் வர்மா அலுவலகம் சென்று பணியில் ஈடுபடலாம் என்றும் தற்போதைக்கு மிகப்பெரிய கொள்கை முடிவுகளை எடுக்கமுடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

சிபிஐ இயக்குநரை மாற்றுவதோ, அவரை பணியில் ஈடுபடாமல் முடக்கி வைப்பதோ தேர்ந்தெடுக்கப்பட்ட உயர் மட்ட குழுவின் ஆலோசனையின்றி தன்னிச்சையாக அரசு முடிவெடுக்க சட்டப்படி எந்த அதிகாரமும் இல்லை என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான உயர்மட்ட தேர்வுக்குழு அலோக் வர்மாவை சிபிஐ இயக்குநர் பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளது.

படத்தின் காப்புரிமை CBI
Image caption ராகேஷ் அஸ்தானா (இடது) மற்றும் அலோக் வர்மா

முன்னதாக இந்தியாவின் உச்சபட்ச புலனாய்வு அமைப்பான சிபிஐ-இன் மூத்த பொறுப்புகளில் இருந்த இரு அதிகாரிகள் இடையே உண்டான அதிகாரப் போட்டியால், அதன் இயக்குநர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகிய இருவருமே கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டிருந்தனர்.

சிபிஐ, அதாவது மத்தியப் புலனாய்வு முகமை, ஊழல் பற்றி விசாரணை செய்யும் இந்திய அரசின் முக்கியமான நிறுவனமாகும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்