'நான் அம்மாவின் விசுவாசி; ஆனால், அதிமுக தோற்கும்' - அப்சரா ரெட்டி - மற்றும் பிற செய்திகள்

படத்தின் காப்புரிமை Twitter

'நான் அம்மாவின் விசுவாசி; ஆனால், அதிமுக தோற்கும் ' - அப்சரா ரெட்டி

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மகளிர் அணியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அப்சரா ரெட்டி உடனான பிபிசி தமிழின் சிறப்பு நேர்காணல்.

அதிமுகவிலிருந்து விலகி, காங்கிரஸில் இணைந்தது ஏன் என அவரிடம் பிபிசி தமிழ் செய்தியாளர் கிருத்திகா கேட்டபோது, "அதிமுகவின் செய்தித்தொடர்பாளர் என்ற முறையில், நான் குழந்தைகளின் பாதுகாப்பு, உரிமை ஆகிய விஷயங்களில் பணியாற்றி வந்தேன். அப்போதுதான் அம்மாவின் மரணம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து, கட்சியில் பல்வேறு பிரச்சனைகளும், குழப்பங்களும் எழுந்தன. அதிலிருந்து எல்லாம் ஓதுங்கி இருந்தபோதுதான், காங்கிரஸ் மகளிர் அணி தலைவியான சுஷ்மிதா தேவ் என்னை சந்தித்து காங்கிரசில் இணையுமாறு கேட்டுக்கொண்டார்."

தற்போதைய தமிழக அரசு குறித்து கேட்டபோது, "தற்போதுள்ள அரசு மக்கள் விரோத அரசு. இவர்கள் நரேந்திர மோதி கூறுவதற்கெல்லாம் தலையாட்டுகிறார்கள். இவர்கள் வீட்டிற்கு செல்லும் நேரம் வந்துவிட்டது." என்றார்.

விரிவாக படிக்க: 'திருநங்கைகளுக்கு அனுதாபம் தேவையில்லை' - அப்சரா ரெட்டி

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா பதவி விலகல்

படத்தின் காப்புரிமை Getty Images

சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான உயர்மட்டக் குழு தம்மை நீக்கிய மறுநாளான இன்று, அலோக் வர்மா தனது புதிய பொறுப்பை ஏற்க மறுத்துள்ளார்.

அவர் தீயணைப்புத் துறையின் தலைமை இயக்குநர் பதவிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று நியமனங்களுக்கான அமைச்சரவை குழு நேற்று, வியாழக்கிழமை, தெரிவித்திருந்தது.

இந்த மாத இறுதியில் அவரது சிபிஐ இயக்குநர் பதவிக்காலம் முடிவடைய இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை செயலருக்கு அவர் இன்று எழுதியுள்ள கடிதத்தில் இந்தியக் காவல் பணியில் (ஐ.பி.எஸ்) இருந்து அவர் ஜூலை 31, 2017 அன்றே ஓய்வு பெற்று விட்டதால், ஏற்கனவே பணி ஓய்வு வயதை அடைந்துள்ள தாம் புதிய பொறுப்பை ஏற்க முடியாது என்று கூறியுள்ளார்.

விரிவாக படிக்க: புதிய பதவியை ஏற்க மறுத்து சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா பதவி விலகல்

"சவேந்திர சில்வா வெள்ளை கொடியுடன் சரணடைந்தோர் தொடர்பாக பொறுப்புக்கூற வேண்டும்"

படத்தின் காப்புரிமை Twitter

இறுதி போரில் வெள்ளை கொடியுடன் சரணடைந்த நடேசன் உட்பட ஏனைய போராளிகள் தொடர்பாக சவேந்திர சில்வாவே பொறுப்புக்கூற வேண்டுமென தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த எழிலனின் மனைவியும், ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலளார் நாயகமுமான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், போர்க்குற்றவாளியாக முன்னிறுத்தப்பட்டுள்ள சவேந்திர சில்வாவிற்கு உயர்பதவி வழங்கியிருப்பது தமிழ் மக்களுக்கு வேதனை அளிக்கின்றது.

விரிவாக படிக்க: “இலங்கை ராணுவத்தின் புதிய பிரதானி ஒரு போர்க்குற்றவாளி”

அமைச்சர்கள் - அதிகாரிகள் மோதல் சாதியக் கோணத்தில் திரும்புகிறதா?

படத்தின் காப்புரிமை Twitter

கடந்த சில நாட்களாக தமிழக அரசியலின் பொது வெளியில் பேசு பொருளாக மாறியிருப்பது தமிழ்நாட்டில் பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் மீது, குறிப்பாக மாநிலத்தின் சுகாதாரத் துறை செயலாளர் ஜே.ராதாகிருஷ்ணன் மீது ஆளும் அஇஅதிமுக அமைச்சர்கள் வைத்துக் கொண்டிருக்கும் கடுமையான குற்றச் சாட்டுகளும், அதற்கு மாநிலத்தில் பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் நிறைவேற்றியிருக்கும் கண்டனத் தீர்மானமும்தான்.

கடந்த 30 ஆண்டுகால தமிழக அரசியல் வரலாற்றில் இது போன்று சில ஐஏஎஸ் அதிகாரிகள் சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறார்கள். 1989 - 1991 ம் ஆண்டு கருணாநிதி ஆட்சிக் காலத்தில் நாகராஜன் என்ற ஐஏஎஸ் அதிகாரி உள்துறை செயலாளராக இருந்தார்.

கருணாநிதி மற்றும் சில மூத்த அமைச்சர்கள் தவிர, ஜூனியர் அமைச்சர்களே நாகராஜனிடம் நேரடியாக பேச தயங்குவார்கள். ஒரு ஈழப் போராளிக் குழுவின் தலைவர் பத்மாநாபா 1990ம் ஆண்டு சென்னையில் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில், 1991 ம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சரானவுடன், நாகராஜன் பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு, 1997 ல் குற்றமற்றவர் என்று வழக்கு விசாரணை முடிவில் விடுதலை செய்யப்பட்டார்.

விரிவாக படிக்க: அமைச்சர்கள்- அதிகாரிகள் மோதல் சாதியக் கோணத்தில் திரும்புகிறதா?

இஸ்லாமை துறந்த சௌதி பெண்ணுக்கு தஞ்சம் அளிக்கும் கனடா

படத்தின் காப்புரிமை copyrightUNHCR

தனது குடும்பத்தினரிடம் இருந்து தப்பி சென்று தாய்லாந்து தலைநகர் பாங்காக்கின் பிரதான விமான நிலையத்தில் தடுக்கப்பட்ட சௌதி பெண்ணுக்கு கனடா தஞ்சம் அளித்துள்ளது.

18 வயதான ரஹாஃப் மொஹம்மத் அல்-குனன் என்ற சௌதி பெண் பாங்காக் வழியாக ஆஸ்திரேலியா செல்ல முயன்றார்.

அவரது குடும்பத்தினர் அவரின் வருகைக்காக காத்துக்கொண்டிருப்பதால் குவைத்துக்கு திரும்ப வேண்டுமென தொடக்கத்தில் அவரிடம் கூறப்பட்டது.

அதற்கு மறுத்துவிட்ட அவர், விமான நிலையத்தின் ஹோட்டல் அறையை விட்டு வெளியே வராமல் தன்னைதானே அடைத்து கொண்டது சர்வதேச கவனத்தை பெற்றது.

இஸ்லாம் மதத்தை தான் துறந்துவிட்டதாக அவர் தெரிவித்தார். இது சௌதி அரேபியாவில் மரண தண்டனை பெறுகின்ற குற்றமாகும்.

விரிவாக படிக்க:

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: