தலையை துண்டித்து கொலை செய்யப்பட்ட 16 வயது சிறுமி - ஆணவக் கொலையா?

நாளிதழ்களில் இன்று வெளியான முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கே வாசகர்களுக்காக வழங்குகிறோம்.

படத்தின் காப்புரிமை Getty Images

தமிழ் இந்து: "தலை துண்டிக்கப்பட்ட நிலையில் 16 வயது சிறுமியின் உடல் கண்டெடுப்பு"

தலை துண்டிக்கப்பட்ட நிலையில் 16 வயது சிறுமியின் உடல் பீகார் மாநிலத்தின் கயா மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிறுமி ஆணவக் கொலை செய்யப்பட்டுள்ளாரா என்ற நோக்கில் விசாரணை நடைபெற்று வருவதாக இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.

"கயா மாவட்டத்தின் மான்பூர் பகுதியில் ஜனவரி 6-ம் தேதி 16 வயது சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரின் முகம் மற்றும் மார்புப் பகுதிகளில் ஆசிட் வீசப்பட்டிருந்தது.

கடந்த டிசம்பர் 28-ம் தேதி காணாமல் போன சிறுமி குறித்து, அவரின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஜன. 4-ம் தேதி அவர் அளித்த புகாரில் மகளை யாராவது கடத்திச் சென்றிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து ஜனவரி 6-ம் தேதி சிதைந்த நிலையில் சிறுமியின் உடல் அவரின் வீட்டின் அருகில் கண்டெடுக்கப்பட்டது. சில மீட்டர்கள் தூரத்தில் தலை கிடைத்தது.

சிறுமியின் பிரேதப் பரிசோதனை அறிக்கை முடிவுகளுக்காகக் காத்திருக்கிறோம். ஆணவக் கொலை என்பதற்கு சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன. விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கூறியதாக'' இந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி: "பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து: பாண்டியா, ராகுல் இடைநீக்கம்"

படத்தின் காப்புரிமை Twitter

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியதற்காக இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹார்திக் பாண்டியா, லோகேஷ் ராகுல் ஆகியோரை விசாரணை முடியும் வரை இடைநீக்கம் செய்து பிசிசிஐ உத்தரவிட்டுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

"காபி வித் கரண்” என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற இருவரும் பெண்கள் தொடர்பாக தரக்குறைவான கருத்துக்களை கூறினர் என கடும் சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக இருவரிடம் விளக்கம் கேட்டது பிசிசிஐ.

இதற்கிடையே இருவரையும் 2 ஒரு நாள் ஆட்டங்களுக்கு தடை செய்ய சிஓஏ தலைவர் வினோத் ராய் பரிந்துரைத்தார். மற்றொரு உறுப்பினர் டயானா எடுல்ஜி, விசாரணை முடியும் வரை இருவரையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் எனக்கூறி சட்டப்பிரிவுக்கு பரிந்துரை செய்தார்.

இருவரையும் விசாரணை முடியும் வரை சஸ்பெண்ட் செய்ய சட்டப்பிரிவு கூறியது. இப்பிரச்னை குறித்து விசாரிக்க பிசிசிஐ அலுவலர் குழு அல்லது, இடைக்கால தீர்ப்பாயம் அமைப்பதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், விசாரணைக்காக இருவருக்கும் மீண்டும் புதிதாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் எனத்தெரிகிறது. இதனால் தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ள இருவரும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவார்களா எனத் தெரியவில்லை" என்று இந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: "2021 டிசம்பரில் இந்தியர்கள் விண்வெளிக்கு செல்வார்கள்"

படத்தின் காப்புரிமை 3DSCULPTOR

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் முதல் முறையாக மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை வரும் 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கவுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

"வரும் 2021ஆம் ஆண்டு நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக மூன்று இந்தியர்கள் இஸ்ரோவின் ராக்கெட்டின் மூலமாக விண்வெளிக்கு அனுப்பப்படுவார்கள். மூன்று விண்வெளி வீரர்களையும் இந்திய விமானப்படை தேர்ந்தெடுக்கும். அவர்களில் பெண்களும் இருப்பதற்கு வாய்ப்புள்ளது.

வீரர்கள் தேர்வு முடிந்ததும் அவர்களுக்கு தேவையான முழு பயிற்சியும் இந்தியாவிலேயே அளிக்கப்படும். தேவைப்படும் பட்சத்தில் மேலதிக பயிற்சிக்காக அவர்கள் ரஷ்யாவிற்கு அனுப்பப்படுவதற்கு வாய்ப்புள்ளது" என்று இஸ்ரோவின் தலைவர் சிவன் கூறியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி: "முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தண்டனைக்கு தடை இல்லை"

படத்தின் காப்புரிமை Facebook
Image caption பாலகிருஷ்ண ரெட்டி

முன்னாள் தமிழக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு கீழ் கோர்ட்டு விதித்த சிறை தண்டனைக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டு மறுத்து விட்டதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

"கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள பாகலூர் ஜி.மங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதை தடுக்கக்கோரி 1998-ம் ஆண்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போலீஸ் ஜீப், அரசு பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.

இதுகுறித்து போராட்டக்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் தமிழக அமைச்சராக பதவி வகித்த பாலகிருஷ்ண ரெட்டியும் ஒருவர். இந்த வழக்கில் அவர் 72-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார்.

இந்த வழக்கை சென்னையில் உள்ள சிறப்பு கோர்ட்டு நீதிபதி சாந்தி விசாரித்தார். பின்னர், கடந்த 7-ந் தேதி தீர்ப்பு அளித்தார், அதில், பொதுசொத்துகளை சேதப்படுத்திய பாலகிருஷ்ண ரெட்டி உள்பட 16 பேர் குற்றவாளி என்றும், பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை என்றும் தீர்ப்பு வழங்கினார்.

தண்டனை பெற்றதால் எம்.எல்.ஏ. பதவியை இழந்த பாலகிருஷ்ண ரெட்டி தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து பாலகிருஷ்ண ரெட்டி சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு எதிரான குற்றச்சாட்டு தீவிரமானது. எனவே, அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்க முடியாது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்களை தள்ளுபடி செய்கிறேன்" என்று கூறியதாக இந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: