"நான் இந்தியாவின் எதிர்ப்பாளரும் அல்ல, தமிழ் வெறியனும் அல்ல" - ஆபிரகாம் சாமுவேல் பிரத்யேக பேட்டி

"மும்பை விமான நிலையத்தில் நடந்தது என்ன?" - ஆபிரகாம் சாமுவேல் பிரத்யேக பேட்டி படத்தின் காப்புரிமை Twitter/ Getty Images

"முயன்று பார்த்து தோற்றுவிட்ட இந்தி திணிப்பை மத்தியிலுள்ள அரசுகள் மீண்டும், மீண்டும் செய்தால் அது நாட்டில் பிளவுகளையே ஏற்படுத்தும்" என்று இந்தி மொழி தெரியாததால் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் குடியேற்ற ஒப்புதல் மறுக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த இளைஞர் ஆபிரகாம் சாமுவேல் பிபிசி தமிழுடனான பிரத்யேக பேட்டியின்போது தெரிவித்தார்.

கடந்த ஜனவரி 8ஆம் தேதி தமிழகத்தை சேர்ந்த ஆபிரகாம் சாமுவேல் என்ற இளைஞர், "எனக்கு தமிழ், ஆங்கிலம் மட்டுமே தெரியும், இந்தி தெரியாது என்ற ஒரே காரணத்திற்காக மும்பை சர்வதேச விமான நிலையத்தில் எனக்கு குடியேற்ற ஒப்புதல் வழங்குவதற்கு அதிகாரி ஒருவர் மறுப்புத் தெரிவித்துவிட்டார்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், திமுக தலைவர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோதி உள்ளிட்டோரை டேக் செய்து பதிவிட்டிருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக அவர் பதிவிட்டிருந்த தொடர் ட்விட்டுகளுக்கு ஆதரவாக தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்ததோடு, இது போன்று தாங்கள் சந்தித்த சம்பவங்களை நினைவுகூர்ந்தது வைரலானது.

அதே சூழ்நிலையில், ஆபிரகாம் சாமுவேல் வேண்டுமென்றே இது போன்று பிரச்சனையை கிளப்புவதாகவும், அவரை யாரோ இயக்குவதாகவும், அரசியல் கட்சிகளையும் அதன் தலைவர்களையும் டேக் செய்வதற்கு என்ன காரணம் போன்ற கேள்விகளை பலர் சமூக ஊடங்கங்களில் எழுப்பி வருகின்றனர்.

எனவே, மும்பை விமான நிலையத்தில் நடந்தது என்ன? என்பது குறித்து அறிவதற்காக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் முனைவர் பட்ட ஆய்வு செய்துவரும் ஆபிரகாம் சாமுவேலை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது.

"நினைத்துக்கூட பார்க்கவில்லை"

"அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள கிளார்க்சன் பல்கலைக்கழகத்தில் கடந்த இரண்டாண்டுகளாக முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். ஒரு மாத விடுப்பில் தமிழகத்திற்கு வந்துவிட்டு மீண்டும் அமெரிக்கா செல்வதற்காக சென்னை வழியாக மும்பை விமான நிலையத்திற்கு சென்றேன். இந்தியாவின் எல்லையிலிருந்து நான் வெளியேறும் கடைசி விமான நிலையம் என்பதால் குடியேற்ற ஒப்புதல் சோதனைக்காக வழக்கம்போல் வரிசையில் நின்றிருந்தேன்" என்று கூறிய ஆபிரகாம், “அதன் பிறகு நடந்ததை ஒருபோதும் நினைத்துக்கூட பார்க்கவில்லை” என்கிறார்.

"33வது கவுண்டருக்கு சென்றதும், அங்கிருந்த குடியேற்றத்துறை அதிகாரி என்னுடைய பாஸ்போர்ட் மற்றும் விசாவை பார்த்துவிட்டு தொடர்ந்து இந்தியில் பேசியபடி இருந்தார். அவர் பேசியதில் எனக்கு ஒரு வார்த்தைக்கூட புரியாததால், நிதானமாக 'சார் எனக்கு இந்தி தெரியாது; தமிழ், ஆங்கிலம்தான் தெரியும்' என்று கூறியவுடனேயே 'என்னது இந்தி தெரியாதா? நீ அப்போ தமிழ்நாட்டுக்கே போக வேண்டியதுதானே? என்னால் உனக்கு ஒப்புதல் கொடுக்க முடியாது. தமிழ் தெரிஞ்ச அதிகாரி இருக்குற கவுண்டருக்கு போயிக்கோ' என்று நக்கலாக கூறியதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை" என்று ஆபிரகாம் விவரிக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

தனது விமானத்துக்கு நேரமானதால் அப்போது தனக்கு ஏற்பட்ட கோபமும், விரக்தியும் கலந்த மனநிலையை கட்டுப்படுத்தி கொண்டதாக கூறும் ஆபிரகாம், தனக்கு முன்பாக வெளிநாட்டை சேர்ந்த பெண்மணி ஒருவருக்கு அதே அதிகாரி ஆங்கிலத்தில் உரையாடி பரிசோதனை செய்தததை எண்ணி மொழி ரீதியிலான பாகுபாட்டை உணர்ந்ததாக கூறுகிறார்.

"அருகிலிருந்த 32வது கவுண்டருக்கு சென்றபோது அங்கிருந்த அதிகாரி ஆங்கிலத்தில் உரையாடி அடுத்த 2-3 நிமிடங்களில் எனக்கு ஒப்புதல் வழங்கிவிட்டார். அதற்கடுத்து உடனடியாக விமான நிலையத்துக்குளேயே இருந்த குடியேற்றத்துறை அலுவலக அதிகாரிகளிடம் நடந்ததை கூற, அந்த குறிப்பிட்ட அதிகாரியை நேரிலேயே வரவழைத்துவிட்டனர்.

அப்போதும்கூட தனது தவறுக்கு மன்னிப்பு கேட்காத அவர், தொடர்ந்து முன்பு கூறியவற்றை அப்படியே திரும்ப திரும்ப கூற, பதற்றமடைந்த அதிகாரிகள், உயரதிகாரிகளை நேரில் அழைக்க, 'அவர் இன்று நீண்டநேரமாக பணிபுரிவதால் ஏற்பட்ட களைப்பின் காரணமாக இப்படி செய்திருப்பார்' என்று கூறி என்னை சமாதானப்படுத்த பார்த்தனர். அதை ஏற்றுக்கொள்ள மறுத்த நான் விமான புறப்பாட்டுக்கு நேரமானதால் அங்கிருந்து சென்றுவிட்டேன்" என்கிறார்.

"சீமானை கூட டேக் செய்திருப்பேன்"

நான் தமிழகத்தை சேர்ந்தவனாக இருந்தாலும், இந்தியன் என்று கூறிக்கொள்வதிலும் பெருமையடைவதாக கூறும் ஆபிரகாம், "இந்தியாவின் அரசமைப்பு சட்டம் எனக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமையை மறுத்ததாலும், மனதை புண்படுத்தியதுடன் எனது நேரத்தை வீணடித்ததற்காகவும், இதுபோன்ற நிலை மற்றொரு இந்தியல்லாத மொழியை தாய்மொழியாக கொண்டவருக்கு ஏற்படக்கூடாது என்பதற்காகவும் இந்த விவகாரத்தை ட்விட்டருக்கு எடுத்து சென்றேன்" என்று கூறுகிறார்.

குறிப்பிட்ட அரசியல் கட்சி மற்றும் தலைவர்களை மட்டும் டேக் செய்ததால் எழுந்துள்ள விமர்சனங்கள் குறித்து கேட்டபோது, "நான் ஒரு சாதாரண ட்விட்டர் பயன்பாட்டாளர். ட்விட்டரில் சுறுசுறுப்பாக இயங்கி வரும் பிரதமர் நரேந்திர மோதி, வெளியுறத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், தமிழ் மொழி சார்ந்த விவகாரங்களில் காலங்காலமாக குரல் கொடுத்து வரும் திமுகவின் தலைவர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் ராகுல் காந்தி போன்றோரை அந்த பரபரப்பான சமயத்தில் டேக் செய்தேன். பொறுமையாக இருந்திருந்தால் சீமானை கூட டேக் செய்திருப்பேன்." என்றார்.

படத்தின் காப்புரிமை TWITTER
Image caption ஆபிரகாம் சாமுவேல்

அதுமட்டுமின்றி, தனக்கும் எந்த அரசியல் கட்சி தலைவர்களுக்கும் எவ்வித தொடர்புமில்லை என்றும், அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்பதே தனது குறிக்கோள் என்றும் அவர் கூறுகிறார்.

"லண்டன், பாரீசில் தமிழிலில் பேசுகிறார்கள்"

"நான் பலமுறை லண்டன், பாரிஸ் நகரங்களின் விமான நிலையங்களுக்கு செல்லும்போது, அங்கிருக்கும் அதிகாரிகள் தமிழில் இயல்பாக உரையாடுகிறார்கள். அந்த நிலையில், இந்தியாவின் ஒரு மாநிலமாக இருக்கும் தமிழகத்தில் பேசப்படும் மொழிக்கு அதே நாட்டிலேயே இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை ஏற்படுமென்று நான் நினைக்கவில்லை.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆங்கிலம் தெரிந்த எனக்கே இப்படிப்பட்ட நிலை என்றால் தமிழ் போன்ற தாய்மொழிகளை மட்டுமே தெரிந்தவர்களின் நிலை என்னவாக இருக்கும் என்று நினைத்துப்பார்த்ததன் காரணமாகவே முற்றிலும் தவறாக நடந்து கொண்ட குடியேற்றத்துறை அதிகாரி மன்னிப்பு கேட்கவேண்டும் என்பதற்காக நான் மும்பை விமான நிலையத்தின் குடியேற்றத்துறை அலுவலகத்துக்கு முறைப்படி மின்னஞ்சல் அனுப்பியுள்ளளேன்.

அந்த அதிகாரியை நான் மன ரீதியாக மன்னித்துவிட்டேன் என்றாலும், இந்த சம்பவம் இது போன்று மொழியை திணிக்கும் அதிகாரிகளுக்கு பாடமாக அமைய வேண்டும் என்பதற்காகத்தான் தொடர்ந்து போராடி வருகிறேன்" என்று விவரிக்கிறார்.

"இந்தியாவின் எதிர்பாளரும் அல்ல, தமிழ் வெறியனும் அல்ல"

"வெளிநாட்டில் வசித்துக்கொண்டு இந்தியாவில் நான் பிரச்சனையை கிளப்புவதாக சிலர் கூறி வருகின்றனர். முன்னதாக பிரிட்டனிலும், தற்போது அமெரிக்காவிலும் கல்வி பயின்ற நான் இந்த நாடுகளில் நிரந்தரமாக வசிப்பதற்கு ஒருபோதும் விரும்பியதில்லை. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தமிழகத்திற்கு திரும்பி அங்கு சொந்தமாக ஸ்டாட்அப் நிறுவனம் தொடங்குவதற்கே திட்டமிட்டுள்ளேன்" என்று ஆபிரகாம் சாமுவேல் தெரிவித்தார்.

இது குறித்து மேலும் பேசிய அவர், "இந்தியா அடிப்படையில் பல்வேறு மொழிகளையும், கலாசாரத்தையும், பண்பாட்டையும் கொண்டு வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு. நான் இந்தியாவின் எதிர்பாளரும் அல்ல, தமிழ் வெறியனும் அல்ல. ஆனால், ஏற்கனவே முயன்று பார்த்து தோற்றுவிட்ட இந்தி திணிப்பை மத்தியிலுள்ள அரசுகள் மீண்டும், மீண்டும் செய்தால் அது நாட்டில் பிளவுகளையே ஏற்படுத்தும். அதை நான் ஒருபோதும் விரும்பியதில்லை. ஒரு தமிழனாக இருப்பதில் எந்த அளவிற்கு பெருமை அடைகிறேனோ அதே அளவுக்கு இந்தியனாக இருப்பதிலும் பெருமையடைகிறேன்" என்று கூறினார்.

சமூகத்தில் ஊடகத்தில் வலுக்கும் ஆதரவு

ஆபிரகாம் சாமுவேலுக்கு ஆதரவு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக, மேற்குவங்கத்தை சேர்ந்த மொழியியல் உரிமை செயற்பாட்டாளரான கார்கா சாட்டர்ஜி, "தமிழகத்தை சேர்ந்த ஆபிரகாம் என்பவருக்கு இந்தி தெரியாது என்ற காரணத்தில் மும்பை விமான நிலையத்திலுள்ள இந்தி மொழிவெறி கொண்ட அதிகாரி குடியேற்ற அனுமதி வழங்குவதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். நானும் இதே போன்றதொரு சூழ்நிலையை கொல்கத்தா விமான நிலையத்தில் எதிர்கொண்டபோது அந்த அதிகாரிக்கு தக்க பதிலடி கொடுத்தேன்" என்று காணொளியுடன் கூடிய பதிவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

"இதேபோன்றதொரு சூழ்நிலையை கடந்தாண்டு இறுதியில் சென்னை விமான நிலையத்திலேயே எனக்கு ஏற்பட்டது. அப்போது, எனக்கு ஏன் இந்தி தெரியாது என்று கேள்வியெழுப்பிய விமான நிலைய அதிகாரி, எனக்கு மிரட்டலும் விடுத்தார்" என்று வினோத் பாபு என்பவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரி மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து அறிவதற்காக மும்பை சர்வதேச விமான நிலைய குடியேற்றத்துறை அலுவலகத்தை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டபோது, பதிலளிப்பதற்கு அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்