நகையை பறித்த திருடனுடன் போராடிய ’நம்பிக்கை’ பாட்டி

நகையை பறித்த திருடனுடன் போராடிய மூதாட்டி

நாளிதழ்களில் இன்று வெளியான முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கே வாசகர்களுக்காக வழங்குகிறோம்.

தினத்தந்தி: 'நகையை பறித்த திருடனுடன் போராடிய மூதாட்டி'

திருச்சி பொன்மலை அருகே நகையை பறித்த திருடனுடன் மூதாட்டி கடுமையாக போராடினார். அப்போது திருடனின் கையை கடித்து கூச்சலிட்டதால் அவன் தப்பி ஓட்டம் பிடித்தான் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

திருச்சி பொன்மலை அருகே உள்ள திருநகர் முதல் தெருவை சேர்ந்தவர் மரியதாஸ். இவரது மனைவி தமிழ்ச்செல்வி (வயது 62). மரியதாஸ், திருச்சி கோட்ட ரெயில்வேயில் ஊழியராக வேலைபார்த்து ஓய்வு பெற்றவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் இறந்து விட்டார். அதைத்தொடர்ந்து தமிழ்ச்செல்வி கணவரின் ஓய்வூதியத்தில் வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

கடந்த சில நாட்களாக தமிழ்ச்செல்வி உடல் நலமின்றி, பொன்மலையில் உள்ள ரெயில்வே ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வருகிறார். அதன்படி, நேற்று காலை 9.30 மணிக்கு ரெயில்வே ஆஸ்பத்திரிக்கு வீட்டில் இருந்து சைக்கிளில் தமிழ்ச்செல்வி சென்றார்.

பொன்மலை சூசையப்பர் கோவில் அருகே கடந்து சென்றபோது, அங்கு ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் 2 ஆசாமிகள் மரத்து நிழலில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு மூதாட்டி தமிழ்ச்செல்வி தனியாக வருவதை கண்காணித்தனர். அருகில் வந்ததும் அவர்களில் ஒருவன், திடீரென வழிமறித்து மூதாட்டி கழுத்தில் கிடந்த 4 பவுன் சங்கிலியை பறிக்க முயன்றான். சுதாரித்துக் கொண்ட மூதாட்டியோ நகையை கெட்டியாக பிடித்துக் கொண்டு திருடனுடன் போராடினார்.

ஆனால், திருடனும் விடுவதாக இல்லை. மூதாட்டி தலையை பிடித்து தள்ளினான். அப்போது, மூதாட்டி திருடனின் கையை கடித்ததோடு, திருடன்... திருடன் என கூச்சலிட்டார். சத்தம் கேட்டு 2 பேர் ஓடிவந்தனர். அதைப்பார்த்ததும் திருடன் மூதாட்டி கழுத்தில் கிடந்த நகையை பறிப்பதை விட்டான். பின்னர் தப்பித்தால் போதும் என இருவரும் மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு மின்னல் வேகத்தில் மறைந்தனர்.

அதன்பிறகு பொன்மலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். மேலும் திருடனுடன் தைரியமாக போராடி நகையை பறிகொடுக்காமல் தக்கவைத்த தமிழ்ச்செல்வியை போலீசார் பாராட்டினர்.

- இவ்வாறாக அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.


தினமணி: 'கொடநாடு விடியோ தகவல்களில் உண்மையில்லை'

படத்தின் காப்புரிமை Getty Images

கொடநாடு எஸ்டேட் சம்பவம் தொடர்பாக வெளியிடப்பட்ட விடியோ காட்சியில் தன்னைத் தொடர்புபடுத்திப் பேசுவது உண்மைக்கு மாறானது என முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். மேலும், அதுதொடர்பாக சென்னை காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார் என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

"கொடநாடு எஸ்டேட் சம்பவத்தில் என்னைத் தொடர்புபடுத்தி வெள்ளிக்கிழமை செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் உண்மைக்கு மாறானது.

துளியும் உண்மையில்லை. இந்தச் செய்திகளை வெளியிட்டவர்கள், அதற்கு பின்புலமாக இருப்போர் ஆகியோர் உடனடியாகக் கண்டறியப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமையன்றே சென்னை காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்வர். கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஏப்ரலில் நடந்த சம்பவம் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு நடந்து வருகிறது.

இதில், கைது செய்யப்பட்டுள்ள 10 பேர் இதுவரை நீதிமன்றத்தில் எதுவும் சொல்லவில்லை. ஆனால், இப்போது புதிதாக ஒரு செய்தியைச் சொல்லி வழக்கை திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். இந்த வழக்கு வரும் பிப்ரவரி 2-இல் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் என் மீது குற்றச்சாட்டு சொன்னவர்கள் குறித்தும் அவர்களுக்குப் பின்னால் யார் யார் இருக்கிறார்கள் என்பதும் விரைவில் கண்டறியப்படுவர்." என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.


இந்து தமிழ்: 'கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹம்பி நகருக்கு 2-வது இடம்'

படத்தின் காப்புரிமை M Niyas Ahmed

"நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள உலகில் காண வேண்டிய சிறந்த இடங்களின் பட்டியலில் கர்நாடகாவில் உள்ள ஹம்பி நகரம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. 52 இடங்கள் அடங்கியுள்ள இந்த பட்டியலில் இந்தியாவில் இடம் பிடித்த ஒரே இடம் ஹம்பி என்பது குறிப்பிடத்தக்கது." என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

2019-ல் உலகில் காண வேண்டிய சிறந்த இடங்களின் பட்டியலை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. 52 முக்கிய இடங்கள் அடங்கியுள்ள இந்த பட்டியலில் கரிபியன் தீவில் உள்ள போர்ட்டோ ரிக்கோ முதல் இடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள பழமை வாய்ந்த ஹம்பி பெற்றுள்ளது. இந்த இடம் ஏற்கெனவே யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

14-ம் நூற்றாண்டில் தென்னிந்தியாவை ஆண்ட விஜய நகர பேரரசின் தலைநகராக ஹம்பி இருந்தது. 41.8 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள இந்த நகரம் துங்கபத்ரா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. அழகான கற்கோயில்களும், அதில் கலை நேர்த்தியோடு வடிவமைக்கப்பட்ட சிற்பங்களும், அதனைச் சுற்றியுள்ள மலைகளும் காண்போரை பிரமிக்க வைக்கும். இங்குள்ள ஆயிரக்கணக்கான வரலாற்று சின்னங்கள் சேதமடைந்த நிலையில் இருந்தாலும், இன்றும் அதன் அழகு வியப்பை அளிக்கிறது.

இந்தியாவில் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடங்களின் பட்டியலில் ஹம்பி தொடர்ந்து முதல் 5 இடங்களில் இடம்பிடித்து வருகிறது. இதே போல தெற்காசிய மற்றும் உலக அளவிலும் தொன்மையான இடங்களின் பட்டியலில் ஹம்பி முதல் 5 இடங்களில் தொடர்ந்து வருகிறது. 2014-ம் ஆண்டு கூகுளில் அதிகமாக தேடப்பட்ட கர்நாடக வரலாற்றுச் சிறப்புடைய இடங்களில் ஹம்பி முதல் இடத்தை பிடித்தது.

- இவ்வாறாக இந்து தமிழ் செய்தி விவரிக்கிறது.


தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'சொல்லாத விஷயத்திற்கு எதிர்வினையாற்றிய மோதி'

நான் சொல்லாத விஷயத்திற்கு மோதி எதிர்வினையாற்றி இருக்கிறார். இவ்வாறாக அவர் எதிர்வினையாற்றுவது இரண்டாவது முறை என கர்நாடக முதல்வர் குமாராசாமி கூறினார் என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி.

காங்கிரஸ் தலையீட்டால் தான் ஒரு குமாஸ்தா போல பணி செய்ய உள்ளது என்று குமாரசாமி கூறி இருக்கிறார் என மோதி பா.ஜ.க தேசிய மாநாட்டில் கூறி இருந்தார். அதற்கு , "நான் அவ்வாறாக கூறவே இல்லை. மோதியின் இத்தகைய பேச்சுகள் எங்களது கூட்டணி அரசை சிதைக்காது" என்று குமாரசாமி கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: