அலுவலக நேரம் முடிந்த பின்னும் தொந்தரவு செய்கிறார்களா? - வருகிறது புதிய சட்டம்

'அலுவலக நேரத்துக்கு பின் தொந்தரவை தடுக்க மசோதா' படத்தின் காப்புரிமை Getty Images

நாளிதழ்களில் இன்று வெளியான முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கே வாசகர்களுக்காக வழங்குகிறோம்.

தினமலர்: 'அலுவலக நேரத்துக்கு பின் தொந்தரவை தடுக்க மசோதா'

அலுவலக நேரத்துக்கு பின், அலுவலகத்துடன் தொடர்பின்றி இருப்பதற்கான உரிமை அளிக்கும் மசோதா, லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்கிறது தினமலர் நாளிதழ் செய்தி.

"லோக்சபாவில், சரத் பவார் தலைமையிலான, தேசியவாத காங்., கட்சியின், எம்.பி.,யும், பவாரின் மகளுமான, சுப்ரியா சுலே, அலுவலக தொடர்பறு மசோதாவை தாக்கல் செய்துள்ளார்.இந்த மசோதா, சட்டமாக நிறைவேறினால், அலுவலக நேரத்துக்கு பின், ஊழியர்கள், தங்கள் அலுவலகத்தில் இருந்து வரும், தொலைபேசி அழைப்புகள், 'இ - மெயில்' மூலமான கேள்விகள் போன்றவற்றுக்கு பதில் அளிக்கத் தேவையில்லை.

இதன் மூலம், ஊழியர்களின் மன அழுத்தத்தை குறைக்க முயற்சிக்கப்பட்டு உள்ளதாக கூறப் படுகிறது.இந்த மசோதா, 10 ஊழியர்களுக்கு அதிகமாக பணியாற்றும் நிறுவனங்களுக்கு பொருந்தும். அத்தகைய நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், தொழிலாளர் நல கமிட்டியை உருவாக்க வேண்டும்.மசோதா சட்டமானால், அலுவலக நேரத்துக்கு பின் வரும் தொலைபேசி அழைப்புகள், இ - மெயில் தகவல்கள் போன்றவற்றிற்கு பதில் அளிக்காத ஊழியர்களுக்கு எதிராக, சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்க முடியாது.

இது போன்ற சட்டம் இயற்றுவதில், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான, பிரான்ஸ் முன்னணியில் உள்ளது. கடந்த, 2017ல், பிரான்சில் இயற்றப்பட்ட சட்டப்படி, 50 ஊழியர்களுக்கு மேல் வேலை செய்யும் நிறுவனங்களுக்கு, இந்த சட்டம் பொருந்தும். மற்றொரு ஐரோப்பிய நாடான, ஸ்பெயினிலும், இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது." என்கிறது தினமலர் நாளிதழ்.


தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'பெயர் மாற்றத்தில் பா.ஜ.கவுக்கே முதலிடம்'

படத்தின் காப்புரிமை Getty Images

நகரங்களின் பெயர்களை மாற்றுவதில் பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களே முன்னிலை வகிப்பதாக தகவல் அறிவும் உரிமை சட்டத்திலிருந்து பெறப்பட்ட தகவல்கள கூறுகின்றன என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி.

கடந்த 4 ஆண்டுகளில் பெயர் மாற்றுவது தொடர்பாக 93 விண்ணப்பங்கள் மத்திய அரசுக்கு வண்ட்துள்ளது. அதில் 80 பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. பெயர் மாற்றுவதில் ராஜஸ்தான் முன்னிலை வகித்திருக்கிறது. அண்மையில்தான் இங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. இரண்டாவது இடத்தில் ஹரியானா இருப்பதாக அந்நாளிதழ் செய்தி கூறுகிறது.


தினத்தந்தி: 'இந்திய-சீன எல்லையில் 44 சாலைகள்'

இந்தியா-சீனா இடையிலான எல்லை கோடு சுமார் 4 ஆயிரம் கி.மீ. நீளம் கொண்டது. காஷ்மீர், இமாசலபிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம், அருணாசலபிரதேசம் ஆகிய மாநிலங்கள் வழியாக இது செல்கிறது. இந்த எல்லையில், ரூ.21 ஆயிரத்து 40 கோடி செலவில், போர் முக்கியத்துவம் வாய்ந்த 44 சாலைகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்கிறது தினத்தந்தி நாளிதழ்.

"மோதல் சமயத்தில் ராணுவத்தினரை விரைவாக ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு அனுப்ப வசதியாக இச்சாலைகள் போடப்படுகின்றன. மத்திய பொதுப்பணித்துறையிடம் இப்பணி ஒப்படைக்கப்பட்டு உள்ளது. மத்திய மந்திரிசபை விரைவில் ஒப்புதல் அளிக்க உள்ளது.

இதுபோல், இந்திய-பாகிஸ்தான் எல்லையையொட்டி, ரூ.5 ஆயிரத்து 400 கோடி செலவில், 2,100 கி.மீ. நீளத்துக்கு உட்புற சாலைகள் மற்றும் முக்கிய சாலைகள் போடப்பட உள்ளன." விவரிக்கிறது அந்நாளிதழ்.தினமணி: 'வீரசோழபுரத்தில் பாண்டியர் காலக் கல்வெட்டு'

விழுப்புரம் மாவட்டம், திருக்கோயிலூருக்கு அருகேயுள்ள வீரசோழபுரத்தில் பாண்டியர் காலக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

இதைக் கண்ட அதே பகுதியைச் சேர்ந்த காசிமணி, திருக்கோயிலூர் ஓய்வுப் பெற்ற தலைமையாசிரியரும் வரலாற்று ஆய்வாளருமான க. நடராஜனுக்குத் தகவல் அளித்தார். இதையடுத்து, நடராஜன், தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியர் சோ. கண்ணதாசன், முனைவர் பட்ட ஆய்வாளர் கோ. தில்லை கோவிந்தராஜன், ஆசிரியர்கள் உதயசங்கர், ரவிக்குமார் உள்ளடங்கிய குழுவினர் கல்வெட்டைப் படியெடுத்து ஆய்வு மேற்கொண்டனர். இக்கல்வெட்டு குறித்து கண்ணதாசன் தெரிவித்திருப்பது:

திருக்கோயிலூருக்குக் கிழக்கே உள்ள பரணூருக்கு அருகில் வீரசோழபுரம் என்ற ஊரில் ஏறத்தாழ 700 ஆண்டுகள் பழைமையான சிதிலமடைந்த சிவன் கோயிலை அவ்வூர்ப் பொதுமக்கள் புனரமைப்புப் பணி செய்யும்போது பாண்டியர் காலக் கல்வெட்டுக் கிடைத்தது.

கோயில் கருவறைக் கட்டடத்தைப் பெயர்த்தெடுக்கும் பணி மேற்கொண்டபோது 1 அடி அகலமும், 6 அடி நீளமும் உள்ள ஒரு பலகைக் கல்லில் 31 வரிகளைக் கொண்ட கல்வெட்டு ஒன்று இருந்தது.

இதில், முதற்குலோத்துங்க சோழன் ஆட்சிக் காலத்தில் சிற்றரசராக விளங்கிய வாணகோவரையன் சுத்தமல்லன் முடிகொண்டான் என்பவரால் வீரசோழநல்லூர் என்ற பெயரில் ஊரினைத் தோற்றுவித்து நில தானங்கள் வழங்கியதை இவ்வூருக்கருகில் உள்ள அறையணிநல்லூர் கல்வெட்டால் அறிய முடிகிறது.

வீரசோழநல்லூரில் உள்ள சோழர்காலக் கோயிலில் கி.பி. 13 -14 ஆம் ஆண்டைச் சார்ந்த பாண்டியர் காலக் கல்வெட்டு கிடைக்கப் பெற்றுள்ளது. இக்கல்வெட்டில் கோமாறபன்மரான திரிபுவனச்சக்கரவர்த்திகள் ஸ்ரீகுலசேகரத்தேவரின் 25 ஆம் ஆட்சி ஆண்டு சித்திரை மாதத்தில் பொறிக்கப்பட்டதாகும். அதில் இவ்வூருக்கு காசயக்குடி எனப்படுவோரும் (வரிகளை நாணயமாகச் செலுத்தும் கைத்தொழில் செய்பவர்கள்) இதர வணிகர்களும் ஊரைவிட்டு ஓடிப்போனதால் நீண்ட நாட்களாக இவ்வூர் பாழ்பட்டு இருந்துள்ளது. எனவே இந்நாள் முதலாயமாக (வரியாக) குடிக்குக் குடியான கடமையும் (நிலவரி), தறிகடமை (தறி மீதான வரி) கொள்ளும் விலையாக இந்த ஆறுமாதம் முதல் நாட்டுமரியாதி (நாட்டு நடைமுறை) கொள்ளவும் இரண்டு சமுதாயத்தாரிடம் ஏற்பட்ட வழக்கு உடைய வாசல்பணம் (ஒருவகை வரி) காணிக்கையாக வழங்கிய செய்தியைக் குறிப்பதாக உள்ளது.

இக்கல்வெட்டைப் படியெடுக்க ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, பூபாளநைனார், கலியபெருமாள், இளைஞர்கள் உதவி புரிந்தனர். பழைமையான இக்கோயிலை புதுப்பித்து திருப்பணி செய்ய தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என இவ்வூர் மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

- இவ்வாறாக தினமணி விவரிக்கிறது

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :