வறண்ட ஏரிகள் - கழிவு நீரிலிருந்து குடிநீர் - புதுமையான தீர்வை எதிர்நோக்கும் சென்னை

தண்ணீர் விநியோகம் படத்தின் காப்புரிமை Getty Images

சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் குடிநீர் தேவை அதிகரித்துவரும் நிலையில், மழை பொய்த்துப் போகும் ஆண்டுகளில் பெரும் நெருக்கடியை எதிர்கொள்கிறது குடிநீர் வாரியம். இந்த நிலையில், கழிவுநீரை மிகத் தூய்மையாகச் சுத்திகரித்து விநியோகிப்பது ஒரு தீர்வாக அமையக்கூடும்.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டும் பருவமழை சரியாகப் பெய்யாத நிலையில், சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகள் அனைத்துமே வறண்டுபோயுள்ளன.

இந்த ஆண்டு மட்டுமல்லாமல், பெரும்பாலான வருடங்களில் இந்தப் பிரச்சனையை எதிர்கொள்ளும் சென்னைக் குடிநீர் வாரியம், நகரின் கழிவுநீரைச் சுத்திகரித்து சோதனை முறையில் விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளது. எல்லாம் திட்டமிட்டபடி நடக்குமானால், அடுத்த ஆண்டு இந்தக் குடிநீர் விநியோகம் துவங்கலாம்.

முதற்கட்டமாக, நெசப்பாக்கத்திலும் பெருங்குடியிலும் அமைந்துள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்களில் மூன்றாம் நிலை சுத்திகரிப்பு ஆலைகளை நிறுவுவதற்கான பணிகளை குடிநீர் வாரியம் துவங்கியுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP

ஒவ்வோர் இடத்திலும் ஒரு நாளைக்கு தலா 10 மில்லியன் லிட்டர் கழிவு நீர் குடிப்பதற்கான தகுதியான வகையில் சுத்திகரிக்கப்படும்.

சென்னை நகரைப் பொறுத்தவரை தற்போது ஆறு இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இயங்கிவருகின்றன. இந்த கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஒரு நாளைக்கு மொத்தமாக 727 மில்லியன் லிட்டர் நீரைச் சுத்திகரிக்கும் திறன் கொண்டவை.

கழிவுநீரைச் சுத்திரித்து பயன்படுத்துவது சென்னை குடிநீர் வாரியத்திற்கு புதிதல்ல. "இந்தியாவிலேயே முதன் முதலில் கழிவுநீரைச் சுத்திகரித்து விநியோகிக்க ஆரம்பித்தது சென்னைக் குடிநீர் வாரியம்தான்" என்கிறார் அங்கு பணியாற்றும் மூத்த அதிகாரி ஒருவர்.

1980களின் இறுதியிலேயே கழிவுநீரைச் சுத்திரித்து தொழிற்சாலை பயன்பாட்டிற்காக சிபிசிஎல், எம்எஃப்எல் ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கியது குடிநீர் வாரியம். தற்போதும் இதுபோல பல நிறுவனங்களுக்கு கழிவுநீர் இருகட்டங்களாகச் சுத்திகரித்து வழங்கப்பட்டுவருகிறது.

விரிவாக்கப்பட்ட சென்னை நகருக்கான ஒரு நாள் குடிநீர்த் தேவை அதிகபட்சமாக 1,200 மில்லியன் லிட்டரும் குறைந்த பட்சமாக 830 மில்லியன் லிட்டராகவும் இருக்கிறது.

இவற்றில் 50 சதவீத நீர் ஏரி, குளங்கள் போன்ற நீர்த்தேக்கங்களில் இருந்து கிடைக்கிறது. 25 சதவீதம் கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலைகளில் இருந்து கிடைக்கிறது.

மீதமுள்ள 25 சதவீதம் நிலத்தடி நீரிலிருந்து பூர்த்திசெய்யப்படுகிறது. ஏரி, குளங்கள் வற்றும்போது நிலத்தடி நீரைச் சார்ந்திருப்பது அதிகரிக்கிறது.

சென்னை நகரிலும் நகரைச் சுற்றியும் அமைந்துள்ள ஏரிகளில் ஒட்டுமொத்தமாக 11 டிஎம்சி தண்ணீரைச் சேமித்துவைக்க முடியும்.

ஆனால், சென்னை நகரின் ஒரு வருட நீர்த் தேவையே 12 டிஎம்சியாக இருக்கிறது. மழை பொய்த்துப்போகும் வருடங்களில் நிலத்தடி நீரைச் சார்ந்திருப்பதும் சென்னையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் இருந்து தண்ணீரை லாரிகளைக் கொண்டுவருவதும் வெகுவாக அதிகரிக்கும்.

படத்தின் காப்புரிமை Getty Images

இரு ஆண்டுகளுக்கு முன்பாக இதே போல வறட்சி ஏற்பட்ட போது, சென்னையைச் சுற்றியுள்ள குவாரிகளில் தேங்கியிருந்த தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு, ஏரிகளுக்கு அனுப்பப்பட்டு, அவை மீண்டும் சுத்திகரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதனால், பயன்பாட்டில் இல்லாமல் இருந்த பல ஏரிகள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டன.

ஆனால், குவாரிகளில் இருந்து கிடைக்கும் தண்ணீர் மிகக் குறைவு என்பதால் தொடர்ந்து நீர் ஆதாரங்களைத் தேட வேண்டிய தேவை சென்னைக் குடிநீர் வாரியத்திற்கு ஏற்பட்டது. இந்த நிலையில்தான் கடந்த ஆண்டில் இப்படி ஒரு யோசனையை அதிகாரிகள் முன்வைத்தனர்.

ஏற்கனவே சென்னை ஐஐடியில் இதேபோல, கழிவுநீரைச் சுத்திகரித்து குடிநீராகப் பயன்படுத்தும் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதே பாணியிலேயே இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த குடிநீர் வாரியம் திட்டமிட்டிருக்கிறது.

முதற்கட்டமாக பெருங்குடியிலும் நெசப்பாக்கத்திலும் இதற்கான சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. முதலில் கழிவு நீரிலிருந்து திடக்கழிவுகள் பெரிய சல்லடைகளின் மூலம் பிரிக்கப்படும். இதன் பிறகு பல்வேறு கட்டங்களில் அதிலுள்ள சிறு சிறு துகள்கள், உயிர்மத் துகள்கள் அகற்றப்படும்.

படத்தின் காப்புரிமை Getty Images

இதன் பிறகு, அல்ட்ரா ஃபில்ட்ரேஷன் முறையில் அதிலுள்ள அனைத்துத் துகள்களும் நீக்கப்பட்டு, கிருமிநீக்கம் செய்யப்படும். இதற்காக முதற்கட்டத்தில் ஓசோன் செலுத்தப்படுவதோடு, அதற்கடுத்த கட்டத்தில் குளோரினும் கலக்கப்படும்.

இந்த நிலையிலேயே இந்த நீர் குடிக்கத்தக்கதாகிவிடும் என்றாலும்கூட நேரடியாக பயனாளர்களுக்கு வழங்கப்படாது. இந்த நீர் அருகிலுள்ள ஏரியில் விடப்படும். பெருங்குடி கழிவுநீரகற்று நிலையத்தில் சுத்திகரிக்கப்படும் நீர், பெருங்குடி ஏரியிலும் நெசப்பாக்கத்தில் சுத்திகரிக்கப்படும் போரூர் ஏரியிலும் தேக்கப்பட்டு, பிறகு மீண்டும் சுத்திகரிக்கப்படும். இந்தத் தண்ணீர், வேறு நீர் ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் நீருடன் கலக்கப்பட்டு பிறகு நுகர்வோருக்கு வழங்கப்படும்.

தற்போது முதற்கட்டமாக 20 மில்லியன் லிட்டரும் பிறகு படிப்படியாக ஒரு நாளைக்கு 100 மில்லியன் லிட்டர் தண்ணீர் இந்த வகையில் சுத்திகரித்து வழங்கப்படும் எனத் தெரிகிறது.

இப்படி கழிவுநீரைச் சுத்திகரித்து குடிநீராக்குவதால் பல்வேறு பயன்கள் இருக்கின்றன என்கிறார்கள் குடிநீர் வாரிய அதிகாரிகள். நிலத்தடி நீரையோ, ஏரி நீரையோ பயன்படுத்தாமல் புதிய நீர் ஆதாரம் கிடைக்கிறது.

கழிவுநீரை பாதியளவுக்கு சுத்திகரித்து ஆற்றிலும் ஏரியிலும் விடுவது குறையும். இதனால் ஆறுகளும் ஏரிகளும் சுத்தமாகும். கடல் நீரைச் சுத்தமாக்கிப் பயன்படுத்துவது போன்ற செலவுமிக்க, மையப்படுத்தப்பட்ட குடிநீர்த் திட்டங்களைச் சார்ந்திருப்பது வெகுவாகக் குறையும்.

கழிவுநீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவது இந்தியாவில் பெரிதாக வரவேற்கப்படுவதில்லையென்றாலும் உலகில் பல நாடுகள் இந்த முறையில் நீரை வீணாக்காமல் பயன்படுத்துகின்றன.

ஆஸ்திரேலியாவில் 20 சதவீதமும் சிங்கப்பூரில் 30 சதவீதமும் கழிவுநீர் சுத்திகரித்து பயன்படுத்தப்படுகிறது. இஸ்ரேலில் 85 சதவீத கழிவு நீர் சுத்திகரித்துப் பயன்படுத்தப்படுகிறது.

சென்னையைப் பொறுத்தவரை தற்போது 6.5 சதவீத நீர் சுத்திகரிக்கப்பட்டு தொழிற்சாலை பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படுகிறது. 2020வாக்கில் இதனை 25 சதவீதமாக உயர்த்துவதை இலக்காக வைத்திருப்பதாக குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சென்னைக் குடிநீர் வாரியத்தின் இந்த நடவடிக்கையை சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவனத்தின் பேராசிரியர் ஜனகராஜன் வெகுவாக வரவேற்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

"நாம் இப்போது சுத்திகரிப்பது மிக மிகக் குறைவு. நம்முடைய கழிவுநீர் மொத்தத்தையும் சுத்திகரித்து பயன்படுத்த வேண்டும். காரணம், குடிநீர் வாரியம் எந்த அளவுக்கு நீர் விநியோகம் செய்கிறதோ, அதைவிட அதிகமாக கழிவுநீர் உருவாகிறது. ஆகவே, கழிவு நீர் முழுவதையும் சுத்திகரித்து வழங்கினால், புதிதாக நீர் ஆதாரம் எதையும் தேடவேண்டியதில்லை” என்கிறார் ஜனகராஜன்.

கடல் நீரை சுத்திகரித்து வழங்குவதைவிட மிகக் குறைவான செலவில் கழிவுநீரைச் சுத்திகரிக்க முடியுமென்று கூறும் அவர், இவை ஏரியில் தேக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதோடு, அந்தந்தப் பகுதிகளுக்கு ஆங்காங்கே சுத்திகரிப்பு செய்து வழங்க முடியும். இதனால், மையப்படுத்தப்பட்ட விநியோகத்தில் உள்ள அழுத்தம் குறையும். உதாரணமாக கடல் நீரை குடிநீராக்கினால், கடலோரத்தில் சுத்திகரித்து நகரின் பல பகுதிகளுக்கும் குழாய் மூலம் எடுத்துச் செல்ல வேண்டும். இதற்கு தண்ணீரை மோட்டர்களின் மூலம் 'பம்ப்' செய்ய வேண்டும். ஆனால், கழிவுநீரை ஆங்காங்கே உள்ள சுத்திகரிப்பு நிலையங்களில் செய்வதால் விநியோகம் செய்வது எளிது என்கிறார் ஜனகராஜன்.

கழிவுநீரைச் சுத்திகரித்த பிறகு உருவாகும் திடக்கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்க முடியும். சென்னைக் குடிநீர் வாரியம் மிகச் சிறிய அளவில் அதைச் செய்துவருகிறது. "பெரிய அளவில் கழிவு நீரைச் சுத்திகரிக்கும்போது, இன்னும் நிறைய மின்சாரம் தயாரிக்க முடியும். எஞ்சியிருக்கும் திடக் கழிவை உரமாகப் பயன்படுத்த முடியும். இது எல்லாவிதத்திலும் நன்மைதரக்கூடிய விஷயம்" என்கிறார் ஜனகராஜன்.

சென்னையில் தற்போது சுமார் 4800 கி.மீ நீளமுள்ள நீர் விநியோகக் குழாக்களும் சுமார் 4200 கி.மீ. தூரத்திற்கான கழிவுநீர் குழாய்களும் உள்ளன. சுமார் 7 லட்சம் பயனாளிகள் சென்னைக் குடிநீர் வாரியத்தின் மூலம் குடிநீரைப் பெற்றுவருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்