கும்பமேளா: பிரம்மாண்ட விழாவுக்கு எப்படித் தயாராகிறது அலகாபாத்?

கும்ப மேளா படத்தின் காப்புரிமை Getty Images

இந்தியாவில் நடைபெறும் கும்பமேளா திருவிழா, உலகில் அதிக அளவில் மக்கள் கூடும் மிகப் பெரிய நிகழ்ச்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்தத் திருவிழாவுக்கான பட்ஜெட் சுமார் 400 மில்லியன் டாலர்கள்

இப்போது தொடங்கி மார்ச் வரையில் 120 மில்லியன் பக்தர்கள், கங்கை, யமுனை மற்றும் நம்பிக்கையின் அடிப்படையிலான சரஸ்வதி நதிகள் கூடுவதாக உள்ள சங்கமத்தில் குளிப்பதற்கு வருவார்கள் என்று விழா ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

சங்கமத்தில் குளிப்பதன் மூலம் பாவங்களில் இருந்து தங்களுக்கு விடுதலை கிடைத்து, `மோட்சம்' அடைவதற்கு ஆசி கிடைக்கும், பிறப்பு, இறப்பு ஆகிய சுழற்சிகளில் இருந்து விடுதலை கிடைக்கும் என்று இந்துக்கள் நம்புகின்றனர்.

எனவே, விண்வெளியில் இருந்து பார்த்தாலும் தெரியக் கூடிய அளவுக்கு மிக அதிக அளவில் மனிதர்கள் கூடும் இந்த நிகழ்ச்சிக்கு எப்படி ஏற்பாடு செய்யப்படுகிறது?

வடக்கில் உள்ள அலகாபாத் நகரில் (சமீபத்தில் பிரயாக்ராஜ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது) 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த மேளா (திருவிழா என்பதன் ஹிந்தி வார்த்தை) கொண்டாடப்படுகிறது.

இந்தத் திருவிழா முறைப்படி தொடங்கும் செவ்வாய்க்கிழமையன்று, 15 முதல் 20 மில்லியன் பேர் வரையில் வருவதற்கு ஏற்ப அதிகாரிகள் ஆயத்தமாகி வருகின்றனர். ஆனால் பிப்ரவரி 4 ஆம் தேதி தான் மிகப் பெரிய சவாலாக இருக்கும். அன்றைய தினம் மிகவும் புனிதமான நாள் என்பதால் 30 மில்லியன் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்தத் திருவிழா மார்ச் 4 ஆம் தேதி நிறைவடைகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த ஆண்டு நடைபெறும் திருவிழா `அர்த்த கும்பமேளா'' - இரண்டு கும்பமேளாக்களுக்கு இடைப்பட்ட காலத்தில் வரக் கூடிய ``பாதி அளவு'' விழாவாக கருதப்படுகிறது - ஆனால் இதை குறைத்து மதிப்பிட முடியாது. உண்மையில் 2013ல் நடைபெற்ற கடந்த முழு கும்பமேளாவைக் காட்டிலும் இது பெரியதாக உள்ளது.

எல்லோரும் எங்கே தங்குவார்கள்?

கரையின் ஓரத்தில் சமவெளியில் பெரிய அளவிலான கூடார நகரம் உருவாக்கப் பட்டுள்ளது. முடிந்த வரையில் இந்தத் திருவிழா நல்ல முறையில் நடந்து முடிவதை உறுதி செய்வதற்காக, ஆயிரக்கணக்கான அதிகாரிகள் நாள் முழுக்க உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

``ஓராண்டு காலத்துக்கும் மேலாக நாங்கள் உழைத்துக் கொண்டிருக்கிறோம்'' என்று சில தினங்களுக்கு முன்பு நான் சந்தித்த, நிர்வாகத் துறை மூத்த அதிகாரி ராஜீவ் ராய் தெரிவித்தார்.

கும்ப மேளா விழா தயாரிப்புகள்

சுமார் 6,000 மதம் மற்றும் கலாச்சார அமைப்புகளுக்கு நிலம் ஒதுக்கப் பட்டுள்ளது. இந்தியா மற்றும் உலகெங்கிலும் இருந்து வருபவர்கள் தங்குவதற்காக கூடாரங்கள் கொண்ட நகரை உருவாக்க இந்த இடம் அளிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் உரையாடிக் கொண்டிருந்தபோது செல்போன் அழைப்புகள், கையெழுத்து வாங்குவதற்காக கடிதங்களைக் கொண்டு வந்த அலுவலர்கள் மற்றும் காவி அணிந்த துறவிகள் பேசுவதற்காக கதவைத் திறந்து உள்ளே வருவது போன்றவற்றால் இடையூறுகள் ஏற்பட்டுக் கொண்டிருந்தன.

இதற்கிடையில், 32 சதுர கிலோ மீட்டர் (12.35 சதுர மைல்கள்) பரப்பில் திருவிழா நடைபெறும் என்று அவர் தெரிவித்தார். இது ஒரு பெரிய நகரத்தின் அளவுக்கானதாக இருக்கும்.

பக்தர்கள் எப்படி அங்கு வந்து சேருவார்கள்?

நூற்றாண்டுகளாக கும்பமேளாக்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால் சமீபத்திய தசாப்தங்களாகத் தான் பெருமளவு கூட்டம் கூடுகிறது. 2001ல் அலகாபாத் நகரம் முதலாவது ``மெகா மேளாவை'' கண்டது.

இந்த ஆண்டின் திருவிழாவுக்கான பட்ஜெட் 28 பில்லியன் ரூபாய். 49 நாட்கள் விழா நடைபெறும். வரக் கூடிய மக்களின் எண்ணிக்கை பிரிட்டன் மற்றும் ஸ்பெயின் நாடுகளின் கூட்டு மக்கள் தொகையைவிட அதிகம்.

படத்தின் காப்புரிமை ANKIT SRINIVAS

திருவிழாவுக்குத் தயாராகும் வகையில் நகரின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளில் பெரும் மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன.

கடந்த 12 மாதங்களில் நகரின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளில் பெரும் மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன.

டெல்லியில் இருந்து ஒரு மணி நேரத்துக்கும் குறைவான நேரத்தில் வந்திறங்கும் வகையில் புத்தம் புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

நகரம் முழுக்க சாலைகள் விரிவுபடுத்தப் பட்டுள்ளன, மேம்பாலங்கள் கட்டப் பட்டுள்ளன. மேளா நடைபெறும் பகுதிக்குள் 300 கிலோ மீட்டர் நீளத்துக்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. 50 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்தும் வகையில் நகரம் முழுக்க பெரிய கார் நிறுத்தும் வளாகங்கள் அமைக்கப் பட்டுள்ளன.

கூட்டத்தை சமாளிப்பதற்கு நூற்றுக்கணக்கான புதிய ரயில்களை இயக்கப் போவதாக ரயில்வே துறையும் அறிவித்துள்ளது.

``திருவிழாவின் போது 3.5 மில்லியன் பக்தர்கள் ரயில் மூலம் பயணிப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். நகருக்கு சேவை அளிக்கும் எட்டு ரயில் நிலையங்களும் புதுப்பிக்கப்பட்டு, விரிவுபடுத்தப்பட்டுள்ளன'' என்று ரயில்வே செய்தித் தொடர்பாளர் அமித் மாளவியா கூறினார்.

படத்தின் காப்புரிமை ANKIT SRINIVAS

இந்த நதியில் குளிப்பதால் தங்களுடைய பாவங்கள் நீங்கும் என்று இந்துக்கள் நம்புகின்றனர்.

கடந்த முறை திருவிழா நடந்தபோது 40 பேர் உயிரிழந்த - பிரதான ஸ்டேஷனில் இருந்து ஒரு சுற்றுப்பயணமாக என்னை அழைத்துச் சென்று மீண்டும் அதுபோன்ற சம்பவம் நடந்துவிடாமல் தடுப்பதற்கு எடுக்கபட்டுள்ள நடவடிக்கைகளை விவரித்தார்.

புதிய நடைமேடை கட்டப்பட்டுள்ளது. ஏராளமான நடைமேடைகளை இணைக்கும் பெரிய அளவிலான, பாதசாரிகளுக்கான பாலம் கட்டப்பட்டுள்ளது. வண்ணங்கள் தீட்டிய காத்திருப்புப் பகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அங்கே நுழைவதும், வெளியேறுவதும் தீவிரமாக கட்டுப்படுத்தப்படும்.

நகருக்கு வெளியில் இருந்து கூடுதலாக 5,000 அலுவலர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக மாளவியா தெரிவித்தார்.

இவ்வளவு பெரிய நிகழ்ச்சியில் காவல் பணி எப்படி மேற்கொள்ளப்படும்?

போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு தேவைகளைக் கையாள்வதற்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினரும், துணை ராணுவத்தினரும் பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.

ஆயிரக்கணக்கான காவல் துறையினரும், துணை ராணுவத்தினரும் பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை ANKIT SRINIVAS

எங்கே சோதனைச் சாவடிகளை அமைப்பது, பாதுகாப்பு தடுப்புகளை எங்கே அமைப்பது என்பவை குறித்து தீவிரமாக திட்டமிடப்பட்டிருப்பதாக காவல் துறை மூத்த அதிகாரி கவிந்த்ரா பிரதாப் சிங் கூறினார்.

``மக்கள் நெரிசலோ அல்லது எந்த அசம்பாவிதங்களோ நடந்துவிடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதில் தான் முன்னுரிமை தருகிறோம்'' என்று அவர் தெரிவித்தார். ``எதுவும் தவறாகிவிடக்கூடாது என்பதை உறுதி செய்வதற்காக நாள் முழுக்க நாங்கள் உழைத்துக் கொண்டிருக்கிறோம்'' என்றார் அவர்.

கூட்டத்தின் நகர்வுகளைக் கண்காணிப்பதற்கு, முதன்முறையாக கணினிசார் அறிவைப் பயன்படுத்தப் போவதாக அவர் தெரிவித்தார்.

``1,000 கண்காணிப்புக் காமிராக்களின் பதிவுகளைப் பயன்படுத்தி, கூட்டத்தின் அளவை நாங்கள் மதிப்பிடுவோம். தேவைப்பட்டால், நெரிசலைக் குறைப்பதற்காக அவர்களை வேறு பாதையில் திருப்பிவிடுவதற்கு ஏற்பாடு செய்வோம்'' என்று ஓர் அதிகாரி தெரிவித்தார்.

கும்பமேளா ஒரு கண்ணோட்டம்

•கங்கை, யமுனை, மற்றும் நம்பிக்கையின் அடிப்படையிலான சரஸ்வதி நதிகள் கூடுவதாக உள்ள சங்கமத்தின் பகுதியில் புனித நீராடுவதற்கு இந்துக்கள் கூடுகின்றனர்.

•ஏழு வார காலத்திற்கு நடைபெறும் இந்த ஆண்டுக்கான விழாவில் 120 மில்லியன் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு செளதி அரேபியாவுக்கு சென்ற ஹஜ் யாத்ரிகர்களின் எண்ணிக்கையைவிட (2.4 மில்லியன்) இது அதிகம்.

•தேதி, கால நேரம் மற்றும் அமைவிடம் (நான்கு இடங்கள்) போன்றவை உள்ளிட்ட விஷயங்களை ஜோதிடம் முடிவு செய்கிறது.

•அலகாபாத் நகரில் 2013ல், மிக சமீபத்தில் நடைபெற்ற முழுமையான கும்பமேளா மகா கும்பமேளாவாகவே இருந்தது. மகா கும்பமேளா 144 ஆண்டுகளுக்கு (12 முழு கும்பமேளாக்களுக்குப் பிறகு) பிறகு நடைபெறும். அப்போது 100 மில்லியன் பக்தர்கள் வந்ததாக கணக்கிடப்பட்டது.

•காணாமல் போனவர்களை கண்டுபிடித்து தருவதற்கான முகாம்கள் 1946ல் அமைக்கப்பட்டு, பெரிய கூட்டத்தில் காணாமல் போனவர்களை குடும்பத்தினருடன் சேர்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

•இந்த ஆண்டு காணாமல் போனவர்களை கண்டுபிடித்து சேர்ப்பதற்கு 15 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கம்ப்யூட்டர் மையங்கள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் செய்யப்படும் அறிவிப்புகளை கும்பமேளா மைதானங்கள் முழுக்க கேட்கும். காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்கள் முகநூல் மற்றும் ட்விட்டரிலும் பதிவிடப்பட்டு, அவர்களை அடையாளம் காண ஏற்பாடு செய்யப்படும்.

லட்சக்கணக்கானவர்களுக்குப் பசியாற்ற போவது யார்?

குறுகிய கால பயணமாக வரும் பெரும்பாலான பக்தர்கள், தாங்களே சாப்பாடு கொண்டு வருவார்கள்.

ஆனால், தனிப்பட்ட பக்தர்களுக்கும், ஒரு மாதம் வரையில் தங்குபவர்களும், முகாம்கள் அமைத்துள்ள மத அமைப்பினரும், பெரும்பாலும் உணவுக்கு அதிகாரிகளை நம்பியிருக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை ANKIT SRINIVAS

மத அமைப்புகள் அமைத்துள்ள முகாம்களில் இருப்பவர்கள் பெரும்பாலும் உணவுத் தேவைக்கு அதிகாரிகளையே நம்பியிருக்கின்றனர்.

திருவிழா மைதானத்தில் ஐந்து கிடங்குகளும், 160 ``நியாயவிலைக் கடைகளும்'' அமைக்கப் பட்டுள்ளன. அரிசி, கோதுமை மாவு, சர்க்கரை, சமைப்பதற்கு மண்ணெண்ணெய் ஆகியவற்றை வழங்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மத முகாம்களுக்கு இவை இலவசமாக வழங்கப்படுகின்றன. மற்ற பக்தர்களுக்கு மானிய விலையில், வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்காக ஒதுக்கப்பட்ட விலையில் வழங்கப்படும் என்று, உணவு மற்றும் சிவில்சப்ளை துறை அதிகாரி அப்ரிதா உபாத்யாய தெரிவித்தார்.

150,000 பக்தர்களுக்கு அட்டைகள் வழங்கப் பட்டுள்ளன. குறைந்த விலையில் ஒரு மாதத்துக்கு ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ள இது உதவும். 2 கிலோ அரிசி, 3 கிலோ கோதுமை மாவு, 7.5 கிலோ சர்க்கரை, 4 லிட்டர் மண்ணெண்ணெய் உள்ளிட்டவை இதில் வழங்கப்படும்.

இந்தத் திருவிழாவுக்காக மொத்தம் 5,384 டன்கள் அரிசி, 7,834 டன்கள் கோதுமை மாவு, 3,174 டன்கள் சர்க்கரை, 7லட்சத்து 67 ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெய் ஆகியவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

திருவிழா மைதானம் முழுக்க 160 இடங்களில் சுத்தமான, பாதுகாப்பான குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

உடல்நலக் குறைவு ஏற்பட்டால் என்ன செய்வது?

10 சிறிய மருத்துவமனைகளும், 100 படுக்கை வசதி கொண்ட மத்திய மருத்துவமனை ஒனஅறும் அமைக்கப்பட்டு டிசம்பர் 1 ஆம் தேதியில் இருந்து அவை இயங்கிக் கொண்டிருக்கின்றன.

``தினமும் 3,000 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். ஜனவரி 15 ஆம் தேதி கூட்டத்தின் அளவு அதிகரிக்கும். சுமார் 10,000 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்'' என்று, கூடார நகரில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின் தலைவராக உள்ள டாக்டர் அசோக் குமார் பலிவால் கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து அலகாபாத் நகரில் கும்பமேளாக்கள் நடைபெற்று வருகின்றன.

193 டாக்டர்கள் மற்றும் 1,500க்கும் மேற்பட்ட சுகாதாரத் துறை அலுவலர்கள் - செவிலியர்கள், மருந்தாளுநர்கள், பல் மருத்துவர்களும்கூட - இவருக்கு கீழே பணியில் உள்ளனர். பாரம்பரிய வைத்தியங்கள் செய்வதற்கு, 80 ஆயுர்வேதா சிகிச்சை நிபுணர்களும் உள்ளனர்.

அறுவை சிகிச்சைகள் செய்வது, எக்ஸ்-ரே எடுப்பது, அல்ட்ரா சவுண்ட் எடுப்பது, ஆய்வக பரிசோதனைகள் செய்வதற்கும் மருத்துவமனைகளில் வசதிகள் செய்யப் பட்டுள்ளன.

``86 ஆம்புலன்ஸ்கள், ஒன்பது நதி ஆம்புலன்ஸ்கள், ஒரு வான்வழி ஆம்புலன்ஸ் ஆகியவற்றுக்கும் ஏற்பாடு செய்திருக்கிறோம்'' என்று டாக்டர் பலிவால் தெரிவித்தார். ``பெரிய அவசரத் தேவைகளையும் சமாளிப்பதற்கும் தயாராக இருக்கிறோம்'' என்றும் அவர் குறிப்பிட்டார்.

கழிவறைகள் எப்படி?

திருவிழா பகுதியில் துப்புரவு பணிகளையும் பலிவால் மற்றும் அவருடைய குழுவினர் கவனிக்கின்றனர்.

திருவிழாவுக்கு வரக் கூடிய பல லட்சம் பேருக்காக 122,000 கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. 20,000 குப்பைத் தொட்டிகளும் அமைக்கப் பட்டுள்ளன. 22,000 துப்புரவுப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

கழிவுகளைக் கையாள்வதற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன - எந்தப் பிரச்சினையையும் கையாள்வதற்கு உதவும் வகையில் ஒவ்வொரு கழிப்பறையும் ஜியோ-டேக் செய்யப்பட்டுள்ளன என்று பலிவால் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை ANKIT SRINIVAS

கும்பமேளா நடைபெறும் பகுதியில் துப்புரவுப் பணி பெரிய பிரச்சனையாக இருக்கும்.

ஆனால் கழிப்பறைகளில் தண்ணீர் வரவில்லை என்றும், பல பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதாகவும் அவருடை குழுவின் மீது புகார்கள் ஏற்கெனவே எழுந்துவிட்டன.

திருவிழா தொடங்குவதற்கு முன்னதாக இவையெல்லாம் சரி செய்யப்பட்டுவிடும் என்று பலிவால் கூறினார்.

``இது ஒரு பெரிய திட்டம். ஒரு நாட்டையே இங்கே நாங்கள் உருவாக்குகிறோம். குழாய்கள் பதிப்பது, தண்ணீர் இணைப்புகள் தருவது, கழிப்பறைகள் கட்டுவதில் தொழிலாளர்கள் இரவு பகலாக வேலை பார்த்து வருகிறார்கள்'' என்று அவர் கூறினார்.

``எங்களுடைய இலக்குகளை எட்டும் அளவுக்கு நெருங்கிவிட்டோம்'' என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்