போகியால் மாசு: கடந்த ஆண்டைவிட குறைவு என்கிறது மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்

கோப்புப்படம் படத்தின் காப்புரிமை EPA
Image caption சித்தரிப்புப் படம்

சென்னையில் போகிப் பண்டிகையன்று பழைய பொருட்களை எரிப்பதால் ஏற்படும் மாசு கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் வெகுவாகக் குறைந்திருப்பதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

போகிப் பண்டிகையன்று பழைய பொருட்களை எரிப்பதால், கடந்த சில ஆண்டுகளாகவே காற்று மாசு பாடு அதிகரித்துவந்தது. மாசுபாட்டினால், ஓடுபாதை தெரியாத காரணத்தில் கடந்த சில ஆண்டுகளாக போகிப் பண்டிகை தினத்தன்று சென்னை விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் புறப்படுவதிலும் வந்து சேர்வதிலும் பெரும் தாமதங்கள் ஏற்பட்டன. பல விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு மாற்றிவிடப்பட்டன. சில விமானங்கள் ரத்துசெய்யப்பட்டன.

இந்த நிலையில், இந்த ஆண்டு போகிப் பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்பிருந்தே பல்வேறு அமைப்பினரும், பழைய பொருட்களை தீயிட்டு எரிக்க வேண்டாமென வேண்டுகோள் விடுத்துவந்தனர். தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், இந்திய மருத்துவர் சங்கத்தின் தமிழ்நாடு பிரிவு, சுற்றுச்சூழல் அமைப்புகள் இத்தகைய வேண்டுகோள்களை விடுத்தன.

இது தவிர, காவல்துறையினருடன் இணைந்து 36 குழுக்களை அமைத்து இரவில் ரோந்துப் பணியிலும் ஈடுபட்டனர். எரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான பழைய டயர்களை கைப்பற்றினர். 15 இடங்களில் காற்றின் தரத்தை அளக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இருந்தபோதும், போகி தினமான திங்கட்கிழமையன்று அதிகாலையில் பல இடங்களில் பழைய பொருட்கள் எரிக்கப்பட்டன. காலை எட்டு மணி அளவில்கூட சாலைகள் புகைமூட்டமாகக் காட்சியளித்தன.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption சித்தரிப்புக்காக...

தற்போது தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், போகிப் பண்டிகை தினத்தன்று ஏற்பட்ட மாசின் அளவை வெளியிட்டுள்ளது.

அதன்படி நகரின் எல்லா இடங்களிலுமே கந்தக டை ஆக்ஸைடும், நைட்ரஜன் டை ஆக்ஸைடும் அனுமதிக்கப்பட்ட அளவைவிட குறைவாகவே இருந்ததாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

ஆனால், காற்றில் உள்ள நுண்துகள்கள் பல இடங்களில் போகிக்கு முந்தைய தினத்தைவிட அதிகரித்தே காணப்பட்டது. பல இடங்களில் போகிக்கு முந்தைய தினத்தைவிட இரட்டிப்பாக அதிகரித்துக் காணப்பட்டது. பிஎம்10 அளவுள்ள நுண்துகளின் அளவு சென்னையின் எந்த இடத்திலும் அனுமதிக்கப்பட்ட அளவுக்குள் இல்லை.

"சென்னையில் பல இடங்களில், உதாரணமாக தண்டையார்பேட்டை, ராயபுரம், அண்ணா நகர், தேனாம்பேட்டை, வளசரவாக்கம் போன்ற இடங்களில் பிஎம்10 துகள்களின் அளவு அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருக்கிறது. போகி இதனை இன்னும் அதிகரிக்கச் செய்துள்ளது. இந்தப் பகுதியில் வசிப்பவர்கள், போகி இல்லாவிட்டாலும்கூட தூசு நிறைந்த காற்றைத்தான் சுவாசிக்கிறார்கள். ஒட்டுமொத்தமாகவே நகரில் காற்றின் தரம் மேம்பட வேண்டும் என்பதைத்தான் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன" என்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன்.

கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு போகியின்போது மாசின் அளவு 40 சதவீதம் அளவுக்குக் குறைந்திருப்பதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

உயிரைப் பறிக்கும் காற்று மாசு: அதிகம் பாதிக்கப்படுவது யார்?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
உயிரை பறிக்கும் காற்று மாசு: அதிகம் பாதிக்கப்படுவது யார்?

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்