இனி தனிநபர்களுக்கும் செயற்கைகோள் போன் - ஆண்டுக்கு ரூ.1.25 லட்சம் செலவு

சித்தரிப்புப் படம் படத்தின் காப்புரிமை Getty Images

நாளிதழ்களில் இன்று வெளியான முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கே வாசகர்களுக்காக வழங்குகிறோம்.

இந்து தமிழ்: 'தனி நபர்களுக்கு செயற்கைகோள் போன்'

செயற்கைகோள் போன் இணைப்பைப் பெற தனிநபர்கள், அரசு துறைகள் விண்ணப்பிக் கலாம். இதற்கு கட்டணம் ஆண்டுக்கு ரூ.1.25 லட்சம் வரை ஆகும் என பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

"சாட்டிலைட் எனப்படும் செயற்கைகோள் போன் சேவையை பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கி வருகிறது. செயற்கைக்கோள் சிக்னல் மூலம் இந்த போன் செயல்படும்.குறிப்பாக, மலைகள், கடல் மற்றும் வனப்பிரதேசங்களுக் குச் செல்பவர்களுக்கு பிறரிடம் தொடர்பு கொண்டு பேச இந்த போன் பேருதவியாக இருக்கும். இந்த செயற்கைக்கோள் போன் பெற தனிநபர்கள், அரசு துறைகள் விண்ணப்பிக்கலாம்.வணிக ரீதியில் பயன்படுத்த போன் கட்டணம், உரிமம், பதிவு, ப்ரீபெய்டு கட்டணம் என ஆண்டுக்கு ரூ.1.25 லட்சம் வரை ஆகும். இந்த போன் பெற விண்ணப்பிக்கலாம்" என பி.எஸ்.என். எல். நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ்.


படத்தின் காப்புரிமை மதன்/தினமணி

தினத்தந்தி: 'குமாரசாமி ஆட்சிக்கு ஆபத்தா?'

கர்நாடகத்தில், தங்கள் எம்.எல்.ஏ.க்களை பாரதீய ஜனதா இழுக்க முயற்சிப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. இதனால் அங்கு குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - ஜனதாதளம் (எஸ்) கூட்டணி அரசுக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கூறப்படுகிறது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

படத்தின் காப்புரிமை Getty Images

கர்நாடக சட்டசபைக்கு கடந்த ஆண்டு மே மாதம் 12-ந்தேதி நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை.மொத்தம் உள்ள 224 இடங்களில் பாரதீய ஜனதா 104 இடங்களை கைப்பற்றியது. காங்கிரசுக்கு 82 இடங்களும், ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு 38 இடங்களும் கிடைத்தன.

அதிக இடங்களை கைப்பற்றிய பாரதீய ஜனதாவைச் சேர்ந்த எடியூரப்பா முதல்-மந்திரியாக முதலில் பதவி ஏற்றார். ஆனால் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாததால் அவர் பதவி விலகினார். இதனால் ஜனதா தளம் (எஸ்) கட்சி ஆட்சி அமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அறிவித்தது.

இதைத்தொடர்ந்து அங்கு காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமைந்தது. முதல்-மந்திரியாக ஜனதாதளம் (எஸ்) கட்சியைச் சேர்ந்த குமாரசாமி இருந்து வருகிறார்.

பதவி கிடைக்காத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அடிக்கடி போர்க்கொடி உயர்த்தி வருகிறார்கள். சிலர் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களில் சமீபத்தில் மந்திரி பதவி பறிக்கப்பட்ட ரமேஷ் ஜார்கிகோளி முக்கியமானவர் ஆவார்.

- இவ்வாறாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.தினமணி: 'கணினிகள் கண்காணிப்பு: மத்திய அரசுக்கு நோட்டீஸ்'

நாடு முழுவதும் உள்ள கணினிகளை கண்காணிப்பதற்கு எதிரான பொது நல மனுக்கள் தொடர்பாக, 6 வாரத்துக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

நாட்டில் உள்ள அனைத்து கணினிகளையும் கண்காணிக்க, சிபிஐ, அமலாக்கத் துறை, தேசிய புலனாய்வு அமைப்பு, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு உள்ளிட்ட 10 விசாரணை அமைப்புகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த டிசம்பர் 20-ஆம் தேதி அனுமதியளித்தது.

மத்திய அரசின் இந்த அனுமதி தன்மறைப்பு உரிமையை மீறுவதாகக் கூறி வழக்குரைஞர் மனோகர் லால் சர்மா உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார். மேலும், நீதிபதிகள் உள்பட பல மூத்த அதிகாரிகளின் கணினிகள் மற்றும் தொலைபேசிகள் கண்காணிக்கப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார்.

மனோகர் லால் சர்மா தாக்கல் செய்த மனுவில், நாட்டில் உள்ள அனைத்து கணினிகளையும் கண்காணிக்க மத்திய அரசு அனுமதி கொடுத்து, மக்களின் அடிப்படை உரிமையான தன்மறைப்பு சுதந்திர உரிமையை மீறியுள்ளது. சட்டவிரோதமாகவும், அரசியலமைப்புச் சட்டத்தை மீறியும் இந்த அனுமதியை வழங்கியுள்ளனர். மேலும், அந்த அனுமதியின்படி, விசாரணை அமைப்புகள் நடவடிக்கை மேற்கொள்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், அவரது மனுவுடன் சேர்த்து, கணினிகள் கண்காணிப்புக்கு எதிரான அனைத்து மனுக்களும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த அமர்வில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண் மற்றும் எஸ்.கே. கெளல் ஆகியோரும் இருந்தனர். அப்போது, இந்த மனுக்கள் தொடர்பாக 6 வாரத்துக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நாட்டில் உள்ள அனைத்து கணினிகளிலும் உள்ள தகவல்களை கண்காணிக்க, நுண்ணறிவு பிரிவு(ஐ. பி.), அமலாக்கத் துறை, சிபிஐ, தேசிய புலனாய்வு அமைப்பு, மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, வருவாய் புலனாய்வுத் துறை, ரா உளவு அமைப்பு, தில்லி காவல் துறை, ஜம்மு-காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கான சிறப்பு விசாரணை அமைப்பு ஆகிய 10 விசாரணை அமைப்புகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்து. இதற்கு காங்கிரஸ் தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து மத்திய அரசின் முடிவை எதிர்த்தன.

- இவ்வாறாக தினமணி நாளிதழ் செய்தி கூறுகிறது.


தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: "புத்தக காட்சி: எட்டு லட்சம் பார்வையாளர்கள்'

இவ்வாண்டு புத்தக காட்சி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது என்று அமைப்பாளர்கள் கூறியதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி கூறுகிறது.

படத்தின் காப்புரிமை BAPASI

திங்கட்கிழமை மட்டும் புத்தகக் காட்சிக்கு 60 ஆயிரம் பார்வையாளர்கள் வந்துள்ளனர். இதுவரை 8 லட்சம் பார்வையாளர்கள் வந்துள்ளனர்.

கடந்த ஆண்டைவிட இரண்டு மடங்கு பார்வையாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்ப்பதாக தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்க தலைவர் எஸ். வைரவன் கூறினார் என்கிறது அந்நாளிதழ்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :