சங்க இலக்கியத்தில் ஜல்லிக்கட்டு: நிலமும், சுத்த வீரனின் ரத்தமும்

ஜல்லிக்கட்டு படத்தின் காப்புரிமை Getty Images

ஜல்லிக்கட்டு சிந்துவெளி நாகரிகத்திற்கு முற்பட்டது. சிந்துவெளியில் காளை முத்திரை பொறிக்கப்பட்ட சின்னங்கள் கிடைக்கிறதென்றால், அதற்கு முன்பே காளையை மையப்படுத்திய விளையாட்டு இருந்துள்ளது என்றுதான் பொருள் என்கிறார் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சு. வெங்கடேசன்.

படத்தின் காப்புரிமை ARUN SANKAR/AFP/Getty Images

எழுத்தாளரும், பண்பாட்டு ஆய்வாளருமான சு.வெங்கடேசன் ஜல்லிக்கட்டின் பண்பாட்டு வரலாறு குறித்து பிபிசியுடன் உரையாடினார்.

அவர், "தமிழ்நாட்டில் கண்டுப்பிடிக்கப்பட்ட கல்வெட்டுகளிலேயே மிகவும் பழமையானது தேனி மாவட்டத்தில் உள்ள புலிமான் கோம்பையில் கிடைத்த நடுகல். அசோகர் காலத்திற்கு முந்தைய நடுகல் அது. காளையை கவர வரும் வீரர்களை தடுத்தது பற்றி விவரிக்கிறது அந்த நடுகல். அதாவது, ஆநிரைகள், காளைகள்தான் அப்போது செல்வத்தின் குறியீடாக இருந்தது. ஓர் இனக்குழுவை வீழ்த்துவதற்கு அவர்கள் ஆநிரையை கவர்தல் என்பது ஒரு பழக்கமாக இருந்திருக்கிறது." என்று வரலாற்றுத் தொடர்பை விவரிக்கிறார் வெங்கடேசன்.

"அப்படி செல்வமாக மதிக்கப்பட்ட காளைகளை மையப்படுத்திய பண்பாட்டு செயல்பாடு மிக விரிந்த அளவில் இருந்திருக்கிறது. அதிலிருந்துதான் `ஜல்லிக்கட்டு` என்று அழைக்கப்படும் 'ஏறுதழுவல்' பிறந்திருக்கிறது" என்கிறார்.

வளத்தின் குறியீடு

"வேளாண் சமூகத்தின் ஆதி பழக்கமான இந்த ஜல்லிக்கட்டு நிகழ்வின் போது, யாரும் மாடு பிடிபட வேண்டும் என்று நினைக்கமாட்டார்கள். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் முதல் காளை முனியாண்டி கோயிலின் காளை. அந்த காளையை ஜல்லிக்கட்டில் அவிழ்த்து விடும்போது, `இந்த வருஷம்... குத்து நிறைய விழ வேண்டும்` என்றுதான் வேண்டிக் கொள்வார்கள். மாடுபிடிபட வேண்டும் என்று யாரும் வேண்டிக்கொள்ளமாட்டார்கள். ஜல்லிகட்டு நடத்துபவர்களின் நோக்கம் மாடு பிடிப்பது அல்ல.

படத்தின் காப்புரிமை M Niyas Ahmed

இதற்கு என்ன காரணமென்றால், நிறைய குத்தப்பட்டால் நிறைய ரத்தம் சிந்தும். ஒரு சுத்த வீரனின் ரத்தம் நிலத்தின் சிந்தினால் அந்த ஆண்டு விளைச்சல் அதிகமாகும் என்பது நம்பிக்கை. இது ஆதி நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் தொடர்ச்சிதான் இன்றுவரை தொடர்கிறது. அதாவது ஜல்லிக்கட்டு என்பது காளையை அடக்கும் விழா அல்ல... வீரனை அடையாளப்படும் விழா." என்று விளக்குகிறார் வெங்கடேசன்.

சங்க இலக்கிய சான்றுகள்

ஜல்லிக்கட்டு முந்தைய காலத்தில் எப்படி நடந்தது என்று விவரிக்கும் போது, சங்கப் பாடல்களை சான்றாகக் கூறுகிறார் சு.வெங்கடேசன்.

"முல்லைக்கலியின் முதல் ஏழுபாடல்கள் சங்க காலத்தில் எப்படி ஏறுதழுவல் நிகழ்வு நடந்தது, அதில் பங்கெடுத்த காளைகள் எந்த நிறத்தில் இருந்தன, ஆண்கள் அணிந்திருந்த பூக்களின் வகை என்ன, அந்த நிகழ்வை பார்க்க கூடி இருந்த பெண்கள் எப்படி இருந்தார்கள்... என்று மிக விரிவாக வவரிக்கிறது."

மக்களின் பண்பாடு

படத்தின் காப்புரிமை ARUN SANKAR/AFP/Getty Images

"ஜல்லிக்கட்டு என்பது வரலாற்று காலம் தொட்டே எளியமக்களின் ஒரு பண்பாட்டுக் கூறாகத்தான் இருந்து வருகிறது. ஆகம விதிப்படி அமைந்த எந்த கோயில் விழாவின் பகுதியாகவும் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடைபெறுவதில்லை. நாட்டார் கோயில்களின் விழாவின் பகுதியாகதான் ஜல்லிக்கட்டு அமையும். பெரும் மதங்களுக்கும் சிறு தெய்வ வழிபாட்டுக்கும் இருக்கும் முரணாக இதை நாம் பார்க்கலாம். இது மக்களுடைய ஒரு விளையாட்டாக, மக்களின் வழிபாட்டு முறையாக, மக்களின் பண்பாட்டுத் தொடர்சியாக இது உள்ளது என்றும் புரிந்துக் கொள்ளலாம்.

மேலும் அவர், வளமான காவிரி படுகையில் ஜல்லிக்கட்டு விளையாட்டு பெரிதாக நடைபெறுவதில்லை. ஆனால் மதுரை போன்ற தென்மாவட்டங்களில் அது உள்ளது. இதற்கு என்ன காரணம் என்று யோசிக்கும் போது, காவிரி டெல்டா பகுதிகளான தஞ்சை, நாகையில் நில உடைமை அதிகமாகி, உழைப்பாளிகள் முழுக்க முழுக்க அடிமை நிலைக்கு கொண்டு செல்லப்பட்டதனால், சுதந்திர உணர்வு கொண்ட இந்த விளையாட்டின் தொடர்ச்சி அங்கு அறுபட்டுள்ளது," என்று கூறுகிறார் வெங்கடேசன்.

சாதி ஆதிக்கம்

ஜல்லிக்கட்டில் சாதிய ஆதிக்கம் இருக்கிறதா என்பது குறித்து விவரித்த அவர், இவ்வாறாக சொல்கிறார், "ஜல்லிக்கட்டு விமர்சையாக நடக்கும் மூன்று முக்கிய பகுதிகளான அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டுகளில் எந்த குறிப்பிட்ட சாதியும் காளைகள் எடுத்து வரக் கூடாது அல்லது எந்த குறிப்பிட்ட சாதியும் பங்கெடுக்கக் கூடாது என்ற எந்த தடையும் இல்லை. சொல்லப்போனால், அலங்காநல்லூர் காளையை வளப்பதே தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவர்தான். சாதி கட்டமைப்புக்குள் அது கிடையாது. ஆனால், இன்றைக்கும் இந்திய கிராமங்கள் சாதிய பிடிக்குள்தான் உள்ளன. அதனுடைய தன்மைகள் மற்ற எந்த விளையாட்டிலும் பிரதிபலிப்பதைபோல ஜல்லிக்கட்டிலும் பிரதிபலிக்கும். இந்த வித்தியாசத்தை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்." என்கிறார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :