சபரிமலை சென்ற கனகதுர்கா உறவினரால் தாக்கப்பட்டாரா?

கனகதுர்கா படத்தின் காப்புரிமை Getty Images

மரபை உடைத்து சபரிமலை சன்னிதானம் சென்று வழிபட்ட இரண்டு பெண்களில் ஒருவரான கனகதுர்கா அவரது மாமியாரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்குபின் கேரளாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

பிபிசி இந்தி சேவையிடம் பேசிய பிந்து, "இத்தனை நாள் மறைவாக இருந்துவிட்டு வீடு திரும்பிய கனகதுர்காவை, அவரது மாமியார் இன்று (செவ்வாய்க்கிழமை) தலையில் அடித்துள்ளார்." என்று கூறினார்.

கனகதுர்கா (39) மற்றும் பிந்து (40) ஜனவரி 2ஆம் தேதி சபரிமலை சென்று ஐயப்ப சாமியை வழிப்பட்டனர். இது தடைகளை தகர்த்த சாதனையாக கருதப்படுகிரது.

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என தீர்ப்பு வந்த பின் அங்கு சென்ற முதல் பெண்கள் இந்த இருவர்தான்.

தீர்ப்புக்கு பின் அக்டோபரிலிருந்து பல பெண்கள் கோயிலுக்கு செல்ல முயற்சி எடுத்திருந்தாலும், அவை அனைத்தும் தீவிர வலதுசாரிகளால், பாரதிய ஜனதா கட்சியினரால் தடுத்து நிறுத்தப்பட்டது.

இந்த சூழ்நிலையில் ஜனவரி 2ஆம் தேதி அதிகாலை சுமார் 03:45 மணியளவில் போலீஸ் பாதுகாப்புடன் சந்நிதானத்தை அடைந்தனர் பிந்து, கனகதுர்கா.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த சம்பவத்திற்கு பின் அவர்களுக்கு மிரட்டல்கள் வந்தன. இதனால் தலைமறைவாக இருந்த நாயர் சமூகத்தை சேர்ந்த கனகதுர்கா இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7.30 மணிக்கு வீடு திரும்பி இருக்கிறார்.

இவர்கள் குறித்த தகவல் அறிந்த இவர்களது நண்பர், "அவர் வீடு திரும்பியவுடன் கோல் ஒன்றால் தாக்கப்பட்டிருக்கிறார். முதலில் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின் மலப்புரம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்" என்கிறார்.

பிந்து, "கனகதுர்கா சபரிமலைக்கு சென்றதில் முதலில் அவர் கணவருக்கு உடன்பாடில்லாமல்தான் இருந்தது. ஆனால், இப்போது அவர் கனகதுர்காவிற்கு ஆதரவாக இருக்கிறார்." என்றார்.

சட்ட பேராசிரியரான பிந்து, இப்போது மீண்டும் பணிக்கு திரும்பிவிட்டார். அவர், "நான் என் மாணவர்கள் மற்றும் சக மாணவர்களுடன் மகிழ்வாக இருக்கிறேன். அவர்கள் எனக்கு ஒத்தாசையாக இருக்கிறார்கள்" என்று கூறினார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
'அவர்கள் எங்களை கொலை செய்யலாம்; ஆனாலும் பயமில்லை'

அந்த பெண்களுடன் சபரிமலைக்கு சென்ற பிரசாத், "கோயிலுக்கு சென்றதன் மூலம் குடும்பத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டதாக கனகதுர்காவின் குடும்பம் கருதுகிறது. அவரின் சமூகமும் அவ்வாறாகவே கருதுகிறது. அவரை இன்று வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை." என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்