கொடநாடு விவகாரம்: சயன், மனோஜ் விடுவிக்கப்பட்டது ஏன்?

ஜெயலலிதா. படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஜெயலலிதா.

கொடநாடு விவகாரத்தில் தமிழக காவல்துறையால் தில்லியில் கைதுசெய்யப்பட்ட சயன், மனோஜ் ஆகிய இருவரையும் நீதிமன்றக் காவலில் அடைக்க மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் மறுத்திருக்கிறது. காரணம் என்ன?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு பங்களாவில் 2017ஆம் ஆண்டில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக வெளியிடப்பட்ட வீடியோ, அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் அந்த வீடியோவில் பேசியிருந்த கே.வி. சயன், வாளையார் மனோஜ் ஆகியோர் தமிழக காவல்துறையால் தில்லியில் கைதுசெய்யப்பட்டனர்.

விமானம் மூலம் சென்னைக்குக் கொண்டுவரப்பட்ட அவர்களை, திங்கட்கிழமை காலை முதல் மாலை 5 மணி வரை விசாரித்த காவல்துறை அதிகாரிகள், மாலையில் இவர்கள் இருவரையும் எழும்பூர் பெருநகர நீதிபதி சரிதா முன்பாக ஆஜர் படுத்தினர். இவர்கள் இருவர் மீதும் இரு சமூகங்களுக்கு இடையில் பிரிவினையை ஏற்படுத்துதல் (153 A) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரிதா, மனோஜையும் சயனையும் ஆஜர்படுத்திய காவல்துறையினரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். சம்பந்தப்பட்ட வீடியோவைப் பார்த்த நீதிபதி, இவர்களது பேட்டியின் காரணமாக எங்கு கலவரம் ஏற்பட்டது, என்ன பிரச்சனை ஏற்பட்டது என்ற கேள்விகளை எழுப்பினார். மேலும், இவர்களைக் கைது செய்வதற்கு முன்பாக இது தொடர்பாக புகார் அளித்த புகார்தாரரிடம் விசாரணை நடத்தப்பட்டதா என்றும் கேட்டார். இது தொடர்பான விவரங்களை அளிக்கும்படி கூறிய நீதிபதி, இருவரையும் சிறைக்கு அனுப்ப மறுத்துவிட்டார்.

படத்தின் காப்புரிமை facebook
Image caption மேத்யூ சாமுவேல்

இதற்குப் பிறகு மனோஜையும் சயனையும் அழைத்துச் சென்ற காவல்துறையினர் மீண்டும் நள்ளிரவில் நீதிபதி சரிதா முன்பு அவரது இல்லத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது காவல்துறையினர் அளித்த பதில் திருப்திகரமாக இல்லையெனக் கூறிய நீதிபதி சரிதா, இருவரையும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப மறுத்துவிட்டார்.

இருவரும் ஜனவரி 18ஆம் தேதியன்று காலை பத்து மணிக்கு மீண்டும் ஆஜராக வேண்டுமென்றும் அவர் உத்தரவிட்டார். ஒவ்வொருவரும் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட இரு ஜாமீன்தாரர்களுடன் ஆஜராக வேண்டுமென்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து, மனோஜ், சயன் இருவரும் கேரளாவுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றபோது எழும்பூர் நீதிமன்றத்திற்குள் செய்தியாளர்கள் யாரையும் அனுமதிக்க மறுத்துவிட்டனர்.

ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு பங்களாவில் அவரது மறைவுக்குப் பிறகு, 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி கொள்ளை நடந்தது. அப்போது அங்கு காவலராக இருந்த ஓம் பகதூர் என்ற காவலர் கொல்லப்பட்டார். மற்றொரு காவலர் கடுமையாகத் தாக்கப்பட்டார்.

இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட கனகராஜ் என்பவர், ஏப்ரல் 28ஆம் தேதி இரவு எட்டே முக்கால் மணியளவில் ஆத்தூர் அருகில் கார் விபத்தில் பலியானார். இதற்கு சில மணி நேரத்திற்குப் பிறகு, இரண்டாவது குற்றவாளியான சயன் தன் குடும்பத்தினருடன் பயணம் செய்த கார், பாலக்காடு அருகில் விபத்தில் சிக்கியது. இதில் அவரது மனைவி விஷ்ணுப்ரியா, மகள் நீத்து ஆகியோர் உயிரிழந்தனர். சயன் பலத்த காயங்களுடன் உயிர் பிழைத்தார்.

படத்தின் காப்புரிமை MATHEW SAMUEL/ FACEBOOK
Image caption சயன் மற்றும் மனோஜ்

இந்த நிலையில், பத்திரிகையாளர் மாத்யூ சாமுவேல் என்பவர் இது தொடர்பாக ஆவணப் படம் ஒன்றை வெளியிட்டார். இதில் சயனும் மனோஜும் அளித்த பேட்டிகள் இடம்பெற்றிருந்தன. தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமியை இந்த ஆவணப் படம் நேரடியாகக் குற்றம்சாட்டியது.

இந்த வீடியோ வெளியானதும் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், இந்த வீடியோவை வெளியிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் தரப்பு தெரிவித்தது. அதன்படி, மேத்யூ சாமுவேல், சயன், மனோஜ் ஆகிய மூவர் மீது அ.தி.மு.க. ஐடி பிரிவின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் கீழ் தில்லியில் இருந்த சயன், மனோஜ் ஆகிய இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.

இதற்கிடையில், சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சேலம் சரக டி.ஐ.ஜி. செந்தில்குமார், முதன்மைக் குற்றவாளி கனகராஜ் விபத்தில்தான் உயிரிழந்தார் என்று தெரிவித்தார். தற்போது கனகராஜ் மரணத்தில் சந்தேகம் தெரிவிக்கும் தனபால், காவல்துறையிடம் இது தொடர்பாக எந்தப் புகாரையும் அளிக்கவில்லையென்றும் கூறினார்.

கனகராஜ் சம்பவ தினத்தன்று பதிவெண் இல்லாத வாகனத்தில் சென்று, தவறான திசையில் வளைந்து விபத்தை ஏற்படுத்தியதாகவும் விபத்துக்குப் பிறகு அவர் 108 ஆம்புலன்சில் ஏற்றப்பட்டபோது அவர் மீது மது வாசனை வீசியதாகவும் ஆம்புலன்சின் மருத்துவ உதவியாளர் தெரிவித்ததாக டிஐஜி கூறினார்.

கனகராஜின் பிரேதப் பரிசோதனையிலும் அவரது உடலில் ஆல்கஹால் இருந்தது தெரிய வந்ததாகவும் விபத்திற்கு அடுத்த நாள் ஊடகங்களிடம் பேசிய கனகராஜின் சகோதரர் தனபால், இது எதிர்பாராத விபத்து எனக் கூறியதையும் டிஐஜி செந்தில்குமார் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அந்தத் தருணத்தில் தனபால் பேசிய வீடியோவையும் காவல்துறையினர் வெளியிட்டனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்