கர்நாடகத்தில் ஆபரேஷன் கமலா 3.0 : ஆட்சியை கவிழ்ப்பு முயற்சியில் பாஜக, விமானத்தில் பறக்கும் எம்.எல்.ஏ.க்கள்

கர்நாடக முதல்வர் குமாரசாமி படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கர்நாடக முதல்வர் குமாரசாமி

கர்நாடகத்தில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சி எடுத்துவருவதாக கூறப்படும் நிலையில், இரு தரப்பிலும் எம்.எல்.ஏ.க்களை இழுப்பதற்கான குதிரைபேர முயற்சிகள் நடந்துவருவதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரமேஷ் ஜர்கிஹோலியும், வேறு மூன்று எம்.எல்.ஏ.க்களும் மும்பை பறந்து சென்று ஒரு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இன்னும் பலர் இப்படிப் பறக்கக்கூடும் என்ற ஊகங்கள் பரவத் தொடங்கியுள்ளன.

காங்கிரஸ் தங்கள் அமைச்சர்களை குறிப்பாக மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்களாக உள்ள அமைச்சர்களை உஷார்படுத்தியுள்ளது.

" தற்போது சுமார் ஒரு டஜன் எம்.எல்.ஏ.க்கள் அணி மாறி எங்கள் வசம் வந்துள்ளனர். அவர்கள் ஒரு இடத்தில் தங்கவைக்கப்படவில்லை. இந்த எண்ணிக்கை 17ஐத் தொடும்போது டெல்லியில் ஒரு செய்தியாளர் சந்திப்பு நடத்தி அவர்களை அங்கு நிறுத்துவோம். மக்களவைத் தேர்தலுக்கு முன்பாகவே கர்நாடகத்தில் ஆட்சி கவிழும்" என்று பெயர் குறிப்பிடவிரும்பாத ஒரு கட்சித் தலைவர் பிபிசி ஹிந்தி சேவையிடம் தெரிவித்தார்.

"இந்த முறை மதச்சார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ.க்களுக்கு, கட்சியை விட்டு வெளியேற தலா ரூ.50 கோடி, இடைத் தேர்தலில் போட்டியிட ரூ.30 கோடி கூடுதலாக ஒரு அமைச்சர் பதவி போன்ற ஆசைகளைக் காட்டி இழுக்கும் முயற்சி நடக்கிறது" என்று முதல்வர் குமாரசாமியும் கூறியுள்ளார்.

காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் தங்கள் எம்.எல்.ஏ.க்களை இழுத்துவிடாமல் பாதுகாக்க பாஜக-வும் தங்கள் எம்.எல்.ஏ.க்களை டெல்லி கொண்டு சென்று அங்கிருந்து ஹரியாணாவில் உள்ள குர்காவ்ன் கொண்டு சென்றுள்ளது. முதல்வர் குமாரசாமி, அமைச்சர் சிவக்குமார் ஆகியோருடன் தலா ஐந்து பாஜக எம்.எல்.ஏ.க்கள் தொடர்பில் இருப்பதாக அவர்களது கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்திருந்த ஆர்.சங்கர் மற்றும் எச்.நாகேஷ் ஆகிய இரண்டு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஆதரவை திரும்பப் பெறுவதாகவும், பாஜக-வை ஆதரிப்பதாகவும் தெரிவித்து ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

ஆபரேஷன் கமலா 3.0 என்று அறியப்படும் பாஜக-வின் இந்த குதிரைபேர முயற்சிக்கு வெற்றி கிடைக்குமா கிடைக்காதா என்பது இன்னும் சில நாள்களில் தெரிந்துவிடும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :