பாஜக ஆளாத கேரளாவில் இருந்து தேர்தல் பிரசாரம் தொடங்கிய மோதி: இந்த வியூகம் வெல்லுமா?

நரேந்திர மோதி படத்தின் காப்புரிமை HINDUSTAN TIMES

2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரசாரத்தை தென்னிந்தியாவில் உள்ள கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோதி தொடங்கியுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சி (பாஜக) ஆளாத மாநிலங்களுக்கு நிகழ்ச்சிநிரலை அமைக்கும் வகையில், காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமையிலான கூட்டணிகளை கடுமையாக தாக்கி நரேந்திர மோடி பேசியுள்ளார்.

இந்தியாவை மிக விரைவாக வளாச்சியடையும் நாடாக உருவாக்கியுள்ளதாக தனது அரசின் நடவடிக்கைகளை புகழ்ந்த மோதி, மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியும் (எல்டிஃஎப்), காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணியும் (யுடிஃஎப்) ஒன்றுக்கொன்று எந்த வகையிலும் வேறுபட்டவை அல்ல என்று கூறியுள்ளார்.

"இடதுசாரி ஜனநாயக முன்னணியும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணியும், ஒரு நாணயத்தின் இருபக்கங்கள். பெயரில்தான் அவை வேறுபட்டவை. கற்பிதங்கள், மதவாதம், அரசியல் வன்முறையில் ஈடுபட்டு கலாசாரத்தை சேதப்படுத்துவதிலும், கேரள மக்களை ஏமாற்றுவதிலும் அவை ஒரே மாதிரியானவை" என்ற கொல்லம் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் மோதி பேசியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸுக்கு ஆதரவாக இந்தி மொழி மாநிலங்கள் தற்போது திரும்பியுள்ள நிலையில், இந்தியாவின் தெற்கு, கிழக்கு மற்றும் வட கிழக்கு பகுதிகளில் பாஜக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

இவ்வாறு மக்களவை தேர்தல் பிரசாரத்தை நிகழ்ச்சிநிரல் அமைத்து தொடங்கியிருப்பதை மூத்த அரசியல் ஆய்வாளர்கள் அரசியல் வியூக நடவடிக்கை என்று குறிப்பிட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை HINDUSTAN TIMES

பாரதிய ஜனதா கட்சிக்கு ஏற்கெனவே ஒரு அடித்தளம் உள்ள கர்நாடகாவை விட்டுவிட்டு, கேரளா, தெலங்கானா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் ஊடுருவ பாஜக முயன்ற வருகிறது.

தமிழ்நாட்டினை திராவிடக் கட்சிகளே ஆண்டு வரும் நிலையில், ஆளும் அதிமுக மத்தியில் ஆளும் கட்சியோடு நட்புறவில் இருந்து வருகிறது.

ஆனாலும், மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைப்பதற்கு கட்சியொன்றை பாஜக தேடி வருகிறது.

கேரளத்திற்கும் அதிக சபரிமலை பக்கதர்களை கொண்டுள்ள தெற்கு மாநிலங்களுக்கும் புத்திசாலித்தனமாக உருவாக்கப்பட்டுள்ள திட்டத்தை மோதி செயல்படுத்துகிறார் என்று அரசியல் ஆய்வாளரும், ஏசியாநெட் தொலைக்காட்சி ஆசிரியருமான எம். ஜி. ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.

"கேரளாவின் இடதுசாரி ஜனநாயக முன்னணியின் நடத்தை மிகவும் வெட்ககேடான நடத்தையாக வரலாற்றில் இருக்கும். கம்யூனிஸ்ட்கள் ஆன்மிகத்திற்கும், மதத்துக்கும் ஒருபோதும் மதிப்பு கொடுப்பதில்லை. இது மாதிரியான வெறுப்பை யாரும் கற்பனை செய்துகூட பார்த்ததில்லை" என்று பொது மக்களிடம் உரையாற்றுகையில் மோதி பேசியுள்ளார்,

படத்தின் காப்புரிமை Getty Images

ஐக்கிய ஜனநாயக முன்னணியையும் மோதி விட்டுவைக்கவில்லை. "அவர்கள் நாடாளுமன்றத்தில் ஒன்றை சொல்கிறார்கள். பத்தனம்திட்டாவில் இன்னொன்று சொல்கிறார்கள். ஒரு நாள் ஒன்றும், இன்னொரு நாள் மற்றொன்றும் சொல்கிறார்கள். உங்களது இரட்டை வேடம் அம்பலமாகிவிட்டது" என்று ஐக்கிய ஜனநாயக முன்னணியை தாக்கி மோதி பேசியுள்ளார்.

ராதாகிருஷ்ணன் மேலும் பேசுகையில், "மிகவும் புத்திசாலித்தனமாகவும், ராஜந்திர ரீதியாகவும் மோதி பேசியுள்ளார். சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் நுழைவது தொடர்பாக, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான எதையும் தனது உரையில் மோதி குறிப்பிடவில்லை. நெறிசார்ந்த கோணத்தில் இந்தப் பிரச்சனையைப் பேசியுள்ளார்" என்று கூறியுள்ளார்.

ஆனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்திய வழிமுறையில் மோதியின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. அவரது கட்சி உறுப்பினர்களால் உருவாக்கப்பட்ட பல பிரச்சனைகள் கேரள மாநிலத்தில் உள்ளன. உண்மையில், பிஜேபி/ஆர்எஸ்எஸ் உண்டாக்கிய வன்முறையை கையாள்வதில் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு மெத்தனமாக இருந்தது என்று மூத்த விமர்சகர் பிஆர்பி பாஸ்கர் கூறியுள்ளார்,

"இடதுசாரி ஜனநாயக முன்னணியும், ஐக்கிய ஜனநாயக கூட்டணியும் எங்களை பார்த்து சிரிக்கலாம். பாஜகவை குறைவாக மதிப்பிட வேண்டாம். கட்சி உறுப்பினர்களின் உறுதியை உங்களுடைய வன்முறை உடைத்துவிட முடியாது. திரிபுராவில் பூஜியத்தில் இருந்து அரசு அமைக்கும் நிலைக்கு நாங்கள் சென்றதை நினைவுப்படுத்தி கொள்ளுங்கள். திரிபராவில் நடைபெற்றது கேரளாவிலும் நடைபெறும்" என்று மோதி தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆனால், பாஸ்கரோ, பாஜகவின் அணுகுமுறை இந்த அடிப்படையில்தான் உள்ளது. இது செயல்படப் போவதில்லை. காரணம் கேரள மாநிலம் திரிபுரா அல்ல. கேரளா மார்க்சிஸ்ட்களின் வலுவிடமாக விளங்குவதோடு மட்டுமல்லாமல், 20 ஆண்டுகளாக அவர்கள் ஆட்சி செய்த மேற்கு வங்கம் மற்றும் திரிபுராவை போல் அல்லாமல், ஒரு முறை விட்டு அடுத்த முறை மார்க்ஸிட்களால் கேரளாவில் ஆட்சி அமைக்க முடிந்துள்ளது என்று தெரிவிக்கிறார்.

பிரதமர் மோதியின் விமர்சனம் கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.ஏ.பேபி ஆச்சரியப்படுத்தியுள்ளது.

"பிரதமரின் கட்சி, சமீபத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற ஐந்து மாநிலங்களில் மூன்றில் ஆட்சியை இழந்துள்ளது. அடுத்த மக்களவை தேர்தலில் பாஜக இல்லாத அரசு மத்தியில் இருக்கும். இங்கே ஒரு திரிபுரா உருவாகாது" என்று அவர் கூறியுள்ளார்.

இடதுசாரி ஜனநாயக முன்னணியையும், ஐக்கிய ஜனநாயக கூட்டணியையும் தாக்கி பேசுகையில், மக்களின் குரல்களை செவிமடுக்க மறந்து அதிகாரத்தை தங்களுக்குள்ளே மாற்றி கொள்வதாக மோதி குற்றஞ்சாட்டினார்.

"சபரிமலை அமைந்துள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் பாஜகவின் பிரசாரம் உச்சத்தில் இருந்தபோது, உள்ளாட்சித் தேர்தல்களில் ஒரு இடத்தில் 7 வாக்குகளும், மற்றோர் இடத்தில் 12 வாக்குகளும் பெற்றது பாஜக. கேரள மக்கள் இவர்களைப் பற்றி ஏற்கெனவே மதிப்பீடு செய்துவிட்டனர். எனவே தேர்தலில் பாஜக சிறப்பாக வாக்குகளைப் பெற முடியாது" என்று பேபி தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

"எல்லோருடனும், எல்லோருக்கும் வளர்ச்சி" என்ற அவரது 2014ம் ஆண்டு அணுகுமுறையையும் பிரசாரத்தில் கடைபிடித்தார் மோதி.

தேசிய நெஞ்சாலை 66-ல் அமைக்கப்பட்டுள்ள 13 கி.மீ. நீள புறவழிச்சாலையை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். ஆலப்புழாவிற்கும், திருவனந்தபுரத்திற்கும், இடையில் பயண நேரத்தை இது மிகவும் குறைக்கும். பத்மநாபசுவாமி கோயிலுக்கும் பிரதமர் சென்றுவந்தார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்