பாலியல் புகார்: பிஷப் முலக்காலுக்கு எதிராகப் போராடிய கன்னியாஸ்திரீகள் இடமாற்றம்

கன்னியாஸ்திரிகள் போராட்டம்
Image caption கன்னியாஸ்திரீகள் போராட்டம்

கன்னியாஸ்திரீ ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பஞ்சாபின் ஜலந்தர் மறைமாவட்ட ஆயர் பிரான்கோ முலக்காலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளிப்படையாக போராடிய 4 கன்னியாஸ்திரீகளை திருச்சபை இடமாற்றம் செய்துள்ளது.

"நாங்கள் பயப்படவில்லை. எங்களை இடம்மாறிபோக வேண்டுமென அவர்கள் சொன்னால், நாங்கள் போக மாட்டோம். எங்களை நீக்க வேண்டுமானால் நீக்கட்டும். பிரச்சனையில்லை. நாங்கள் இங்குதான் இருப்போம்" என்று இந்த கன்னியாஸ்திரீகளில் ஒருவரான அனுபமா பிபிசியிடம் தெரிவித்தார்.

ஜலந்தர் மறைமாவட்ட ஆயர் பிரான்கோ முலக்காலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கன்னியாஸ்திரீகள் அனுபமா, ஆல்ஃபி, ஜோஸ்பின், அன்சிட்டா ஆகிய நான்கு கன்னியாஸ்திரீகளும் வெளிப்படையாக போராடத் தொடங்கியது, "சேவ் அவர் சிஸ்டர்ஸ்" இயக்கத்திற்கு ஊக்கமூட்டியது.

முன்னதாக போராட்டத்தில் பங்கேற்றதற்காக அல்லது வழிநடத்தியதற்காக பாதிரியார் அகஸ்டின் வட்டோலிக்குக்கும், கன்னியாஸ்திரீ லூசி கலாப்புராவுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டதைப் போல இந்த 4 கன்னியாஸ்திரீகளுக்கும் இடமாற்ற ஆணை வழங்கப்பட்டுள்ளது.

2014 முதல் 2016ம் ஆண்டுக்கு இடையில் கன்னியாஸ்திரீ ஒருவரை பாலியல் வல்லுறவு செய்த குற்றச்சாட்டில், பஞ்சாப் மாநில ஜலந்தர் மறைமாவட்டத்தில் இருந்து கேரளாவின் கொல்லம் நகருக்கு ஆயரை கொண்டு வந்த சிறப்பு போலீஸ் குழு, அவரிடம் நடத்திய 30 மணிநேர விசாரணைக்கு பின்னர். 2018 செப்டம்பர் 22ம் தேதி ஆயர் பிரான்கோ முலக்கால் கைது செய்யப்பட்டார்.

கன்னியாஸ்திரீ அன்சிட்டா கேரளாவின் கன்னூருக்கு இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளார், கன்னியாஸ்திரீ ஜோசபின் ஜார்கண்ட்-டுக்கும், கன்னியாஸ்திரீ ஆல்ஃபி பிகாருக்கும், கன்னியாஸ்திரீ அனுபமா பஞ்சாபுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கன்னியாஸ்திரீகளுக்கு அனுப்பப்பட்டுள்ள ஏறக்குறைய ஒரே மாதிரியான கடிதங்களில், 'ஜலந்தர் மிஷ்னரிஸ் ஆப் ஜீஸ்ஸ்" சபையின் தலைமை கன்னியாஸ்திரீ ரெஜினா கடாம்தோட்டு, "நீதிக்காக நிலைப்பாடு எடுக்கின்ற கன்னியாஸ்திரீகள் மீது எம்ஜே சபை அக்கறை காட்டுவதில்லை என்று பொது வெளியில் அதிகமாக பரவியுள்ள குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை" என்று கூறியுள்ளார்.

ஆனால், பாலியல் வல்லுறவுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கை வாபஸ் பெற பாதிக்கப்பட்ட சகோதரியை சம்மதிக்க வைப்பதற்கு திருச்சபை வழங்கும் அழுத்தமாகவே தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றங்களை இந்த கன்னியாஸ்திரீகள் பார்க்கின்றனர்.

"நாங்கள் இந்த வழக்கில் சாட்சிகள். அவர்கள் எங்களை பிரித்துவிட்டால், பயணம் செய்து வந்து செல்ல மன உளச்சலை ஏற்படுத்தி, இந்த வழக்கை நாங்கள் வாபஸ் பெற கட்டாயப்படுத்தும். எங்களை தொலைதூர இடத்திற்கு அனுப்புவதற்கு இதுவே காரணம்" என்று கன்னியாஸ்திரீ அனுபமா தெரிவித்தார்,

"சேவ் அவர் சிஸ்டர்ஸ்" இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக இருப்பதைக் கைவிட வேண்டும் அல்லது நடவடிக்கையை சந்திக்க வேண்டுமென திருச்சபையால் தெரிவிக்கப்பட்டுள்ள பாதிரியார் அகஸ்டின் வட்டோலி, "இந்த கன்னியாஸ்திரீகள் எல்லாம் இந்த வழக்கில் சாட்சிகள். இந்த நிலையில் அவர்களை பிரித்துவிடுவது என்பது மிகவும் பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை AS SATHEESH/BBC

"திருச்சபை இத்தகைய போராட்டங்களை பொறுத்துக் கொள்ளப் போவதில்லை என்பது கன்னியாஸ்திரீகள் சபைக்கும், மக்களுக்கும் வழங்கப்படும் தெளிவான செய்தியாகும். இந்த செய்தியானது, போப் பிரான்சிஸ் அவரது கிறிஸ்மஸ் செய்தியில் பாலியல் துஷ்பிரயோகத்தை குறிப்பாக, அதிகாரத்தில் இருப்போரின் துஷ்பிரயோகத்தை திருச்சபை பொறுத்துக்கொள்ளாது என்று கூறியுள்ளபோது வந்துள்ளது" என்று அகஸ்டின் தெரிவித்திருக்கிறார்,

செயற்பாட்டாளரும், இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் முன்னாள் பெண்கள் ஆணையாளருமான வெர்ஜீனியா சால்டான்ஹா, இந்த கன்னியளாஸ்திரீகளுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையால் அதிர்ச்சியடையவில்லை.

"அவர்கள் தங்களை பாதுகாத்து கொள்ள அதிகாரத்தை பயன்படுத்துகிறார்கள். இதுதான் நிறுவனம். இவ்வாறுதான் அது பயன்படுத்தப்படுகிறது" என்று அவர் தெரிவித்தார்.

"இந்த சபையின் தலைமை கன்னியாஸ்திரீ (இடமாற்ற ஆணைகளில் கையெழுத்திட்டவர்) தன்னுடைய அதிகார வரம்புக்குள், பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரீக்கு சில கன்னியாஸ்திரீகள் ஆதரவு வழங்குவதை தடுக்க முயல்கிறார், சபையின் தலைமை கன்னியாஸ்திரீ ஆயர் முலக்காலின் அதிகாரத்திற்கு கீழ் வருகிறார். எனவே, பாதிக்கப்பட்டவருக்கு எதிராக ஆயருக்கு ஆதரவு வழங்குவதற்கு இயன்றதை செய்கிறார்" என்று சால்டான்ஹா கூறினார்.

படத்தின் காப்புரிமை AS SATHEESH/BBC

"எல்லா கன்னியாஸ்திரீகளுக்கும் தாயாக இருக்க வேண்டிய ஒரு பெண்ணாக விளங்குகின்ற சபையின் தலைமை கன்னியாஸ்திரீயின் இந்த நிலைப்பாடு பெண்களுக்கு எதிரான நிலைப்பாடாகும். ஆனால், அவ்வாறுதான் ஆணாதிக்க அமைப்புகள் வேலை செய்கின்றன. அவை பெண்களுக்கு எதிராக ஆண்களுக்கு உதவுகின்றன' என்கிறார் சால்டான்ஹா.

“இந்த கன்னியாஸ்திரீகள் தவறான நோக்கத்தோடு பொதுவான அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர். சபையின் நற்பெயரை கெடுக்கின்ற அடிப்படை இல்லாத கதைகளை பரப்பியுள்ளனர். சபையின் தலைமை கன்னியாஸ்திரீயையும், பிற உறுப்பினர்களையும் நீதிக்காகப் போராடுவோருக்கு எதிரானவர்கள் என்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளனர்” என்று குற்றஞ்சாட்டியுள்ள சபையின் தலைமை கன்னியாஸ்திரீயான ரெஜினா, “உங்கள் அனைவருக்கும் உணவு, உறைவிடம் மற்றும் மருத்துவ செலவை இந்த சபை தொடர்ந்து வழங்குவதை உறுதி செய்துள்ளேன்" என்று கூறியுள்ளார்.

இந்த கன்னியாஸ்திரீகள் நியமிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு செல்ல வேண்டுமென சபையின் தலைமை கன்னியாஸ்திரீயான ரெஜினா கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் ஜேஸ்பின் மற்றும் ஆல்ஃபிக்கும், ஏப்ரல், மே மாதங்களில் அன்சிட்டாவுக்கும், ஜூன் மாதம் அனுபமாவுக்கும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு சென்று ரெஜினா நிர்ணயித்த தேதிகளை இந்த கன்னியாஸ்திரீகள் புறக்கணித்துவிட்டனர்.

சட்ட மற்றும் நீதி வழிமுறைகளிலும், இந்த வழக்கில் உங்களுடைய சட்டபூர்வ போராட்டத்திலும் தலையிடுகின்ற எந்த நோக்கமும் எம்ஜே கன்னியாஸ்திரீகள் சபைகளுக்கு இல்லை என்று சபையின் தலைமை கன்னியாஸ்திரீ ரெஜினா கூறியுள்ளார்,

நீதித்துறை கடமைகளை நிறைவேற்ற நீதிமன்றம் அழைக்கின்றபோது இவர்கள் சுதந்திரமாக சென்று வரலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"நாங்கள் பாதிக்கப்பட்ட இந்த கன்னியாஸ்திரீயோடு இருக்க வந்துள்ளோம்" என்று அனுபமா கூறியுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :