பெற்றோரால் கைவிடப்பட்ட பெண் சிசுவுக்கு பாலூட்டி உயிர்காத்த காவலர்

breast feeding

பெற்றோரால் கைவிடப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை ஒன்றுக்கு பெங்களூருவில் உள்ள அரசு மருத்துவமனையில், பணிக்கு வந்த பெண் காவலர் ஒருவர் பாலூட்டி, அதன் உயிரைக் காப்பாற்றியுள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

புதன்கிழமை காலை, பெங்களூருவில் உள்ள எலஹங்கா பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனையில் கைவிடப்பட்ட பெண் குழந்தை ஒன்று அனுமதிக்கப்பட்டுள்ளது குறித்து விசாரிக்க, சங்கீதா ஹலிமணி எனும் காவலர் வந்தார்.

"நான் சென்றபோது அக்குழந்தைக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டிருந்தது. எனக்கும் 10 மாதக் குழந்தை இருப்பதால், நான் இந்தப் பெண் குழந்தைக்கு பாலூட்டலாமா என மருத்துவர்களைக் கேட்டேன். அவர்களும் ஒப்புக்கொண்டனர், " என பிபிசியிடம் பேசிய அவர் தெரிவித்தார்.

அக்குழந்தை புதனன்று காலை நடை பயிற்சிக்கு வந்தவர்களால், பெங்களூருவில் உள்ள வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டது.

"கண்டெடுக்கப்பட்டபோது அக்குழந்தை மீது தூசு படிந்திருந்ததுடன், எறும்புகள் கடித்த காயங்களும் இருந்தன," என்றார் 25 வயதாகும் சங்கீதா.

அந்தக் குழந்தை கண்டெடுக்கப்பட்டதற்கு ஒரு நாள் முன்னர் பிறந்திருக்கலாம் என்றும், கடைசி 10 - 12 மணிநேரம் வரை பாலூட்டப்படவில்லை என்றும் எலஹங்கா அரசு மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் அஸ்மா தபசும் கூறினார்.

பிறகு மேல் சிகிச்சைக்கு அக்குழந்தை வாணி விலாஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

உடலில் சர்க்கரை அளவு மிகவும் குறைந்திருந்த அக்குழந்தைக்கு சங்கீதா பாலூட்டியது உயிரைக் காக்க உதவியது என அந்த மருத்துவமனையின் இருப்பிட மருத்துவ அலுவலர் மருத்துவர் ரவீந்திரநாத் மேதி கூறினார்.

வாணி விலாஸ் மருத்துவமனைக்கும் சென்று சங்கீதா அப்பெண் குழந்தையை பார்த்தார்.

அக்குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தம்மிடம் தெரிவித்ததாகக் கூறும் சங்கீதா, தமக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருப்பதால் இக்குழந்தையை தம்மால் தத்தெடுக்க இயலாது என தமது இயலாமையை வெளிப்படுத்தியுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்