இலங்கையின் மன்னார் நகரில் தோண்ட தோண்ட தமிழர்களின் எலும்புக்கூடுகள்

சித்தரிப்புப் படம்

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

இந்து தமிழ்: "தோண்ட தோண்ட தமிழர்களின் எலும்புக்கூடுகள்"

இலங்கையின் மன்னார் நகரில் தோண்டத் தோண்ட தமிழர்களின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

"இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த இறுதிப் போரில் ஏராளமான புலிகள் கொல்லப்பட்டனர்.

போரின்போது ஏராளமான தமிழ் மக்களும் கொல்லப்பட்டதாக புகார்கள் எழுந்தன. குறிப்பாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாணத்தில் ஏராளமான பேரை ராணுவம் கொன்று குவித்ததாக பரவலான குற்றச்சாட்டு எழுந்தது. மன்னார் நகரில் ஏராளமான தமிழர்கள் வசித்து வந்தனர். இங்கு தமிழ் பேசும் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களும் இருந்தனர். இந்த நகரம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. போரின் போது இங்கு இலங்கை ராணுவம், விடுதலைப்புலிகள் மீது கடும் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வடக்கு மாகாணத் திலுள்ள மன்னார் நகரில் கடந்த ஆண்டு கூட்டுறவு சங்க கட்டடம் கட்டுவதற்கு பள்ளம் வெட்டியபோது அங்கு ஏராளமான எலும்புக்கூடுகள் குவியல் குவியலாய் கண்டெடுக்கப்பட்டன.

ராணுவம் நடத்திய வேட்டையில் கொல்லப்பட்ட மக்களின் எலும்புக் கூடுகள் இவை என்ற புகார் எழுந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் முதல் அங்குள்ள எலும்புக்கூடுகளை மீட்கும் பணியில் சிறப்பு சட்ட மருத்துவ நிபுணர் சமிந்த ராஜபக்ச தலைமையிலான குழவினர் ஈடுபட்டுள்ளனர். இலங்கை அரசின் உத்தரவின் பேரில் இந்தக் குழு அங்கு பணியாற்றி வருகிறது. இதுவரை அங்கு 300 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சில இடங்களில் ஒன்றன் மீது ஒன்றாக எலும்புக்கூடுகள் குவியல் குவியலாய் அடுக்கி வைத்தது போல கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இது இலங்கை அரசுக்கு கடும் சிக்கலை ஏற்பட்டுள்ளது. போரின்போது வடக்கு மாகாணப் பகுதி மக்களை இலங்கை ராணுவத்தினர் கொன்று இங்கு புதைத்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளில் 12 வயதுக்குட்ட 23 சிறுவர்களின் எலும்புக்கூடுகளும் அடங்கும். ராஜபக்ச தலைமையிலான குழுவில் மருத்துவ நிபுணர்கள், சட்ட நிபுணர்கள், தடயவியல் நிபுணர்கள், தொல்பொருள் ஆய்வுத் துறையினரும் இடம்பெற்றுள்ளனர். தோண்டியெடுக்கும் பணிகளைப் பார்வையிட பத்திரிகையாளர்களும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து சமிந்த ராஜபக்ச கூறும்போது, "ஏராளமான எலும்புக் கூடுகள் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதுவரை 125 நாட்களுக்கும் மேலாக இங்கு அகழாய்வுப் பணி செய்துள்ளோம். இந்த சம்பவத்தை நாங்கள் ஒரு குற்ற சம்பவமாகவே பார்க்கிறோம். ஒருவேளை இது மயானமாக இருந்தால், புதைக்கப்படும் சடலங்கள் கிடைமட்டமாக இருக்கும். ஆனால் இங்கு உடல்களைக் கொன்று குவித்து அப்படியே பள்ளத்தில் தள்ளிவிட்டது போல் உள்ளது.

கண்டெடுக்கப்பட்ட எலும்புகள் தற்போது நீதிமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அமெரிக்காவின் மியாமியிலுள்ள ஆய்வகத்துக்கும் சில எலும்புக் கூடுகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆய்வு முடிவு வரும் வரை வேறு எந்தத் தகவலையும் தெரிவிக்க இயலாது" என்றார்.

ஆனால் மன்னார் பகுதியில் இலங்கை ராணுவம் யாரையும் கொன்று புதைக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளது.

- என்கிறது இந்து தமிழ் நாளித செய்தி.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: "புதிய தொழில் புத்தாக்க கொள்கை"

தமிழகத்த்தில் புதிய தொழில் மற்றும் புத்தாக்கத்துக்கான கொள்கையை மாநில அரசு வெளியிட்டுள்ளது என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி.

இதன்படி, 2018 - 2023 ஆகிய கால இடைவெளியில் 5000 ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை உண்டாக திட்டமிட்டு இருப்பதாகவும், ஸ்டார் அப் நிறுவனங்களை தொடங்குவதற்கான உகந்த சூழலை தமிழகத்தில் ஏற்படுத்தி தருவதற்காகவும் விரிவான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அந்த கொள்கை விவரிக்கிறது என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்.

தினத்தந்தி: "சபரிமலையில் மீண்டும் பதற்றம்"

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வந்த 2 பெண்கள் போலீசாரால் திருப்பி அனுப்பப்பட்டனர். கோவில் நடை இன்று சாத்தப்படுகிறது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

அந்நாளிதழ் விவரிப்பதாவது,

சபரிமலை அய்யப்பன் கோவில் மகரவிளக்கு, மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 17-ந் தேதி திறக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் 10-50 வயதுக்கு இடைப்பட்ட பெண்கள் சபரிமலை கோவிலுக்கு வந்ததால் இந்து அமைப்புகளும், அய்யப்ப பக்தர்களும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே சமீபத்தில் கனகதுர்கா, பிந்து என்ற 2 பெண்கள் சபரிமலை கோவிலுக்கு சென்று வழிபட்டனர். இதைத்தொடர்ந்து கேரளாவில் மீண்டும் வன்முறை வெடித்தது. இதற்கிடையே கேரள அரசு இந்த மண்டல பூஜை காலத்தில் இதுவரை 51 பெண்கள் கோவிலுக்கு வந்ததாக சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.

இந்த தகவலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரமாண பத்திரத்தில் உள்ள பெயர்களில் இருக்கும் பல பெண்கள் 50 வயதை கடந்தவர்கள் என்றும், தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு பெயருக்கு சொந்தக்காரர் ஆண் என்றும் தகவல் வெளியானது. பா.ஜனதா, காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் பொய்யான தகவலை அரசு கோர்ட்டுக்கு தெரிவித்துள்ளதாக புகார் கூறினர்.

திருவாங்கூர் தேவசம்போர்டு உறுப்பினர் கே.பி.சங்கரதாஸ் கூறும்போது, "அரசு கூறியதற்கான ஆதாரம் தேவசம்போர்டில் இல்லை. அரசு கூறுவதற்கு ஆதாரம் இருந்தால் அந்த தகவலை நிராகரிக்க தேவையில்லை" என்றார்.

இந்நிலையில் நேற்று காலை கண்ணூரை சேர்ந்த சுமார் 35 வயதுள்ள ரேஷ்மா நிஷாந்த், ஷனீலா சஜேஷ் ஆகிய 2 பெண்கள் சபரிமலைக்கு வந்ததால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. பெண்கள் இருவரும் நிலக்கல் முகாமுக்கு காலை 5 மணி அளவில் வந்துசேர்ந்தனர். அவர்களை போலீசார் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவர்களிடம், கோவில் சந்நிதானத்தில் ஏராளமான பக்தர்கள் இருப்பதால் அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்பு உள்ளது. எனவே உங்களை கோவிலுக்கு அழைத்துச் செல்வதிலும், பாதுகாப்பு கொடுப்பதிலும் சிரமம் இருக்கிறது என்று போலீசார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.

அந்த பெண்கள் கூறும்போது, "நாங்கள் ஏற்கனவே கடந்த 16-ந் தேதி சபரிமலை வந்தோம். அப்போது எங்களை பார்த்த பக்தர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்ததால் எங்கள் முடிவை கைவிட்டு திரும்பிச் சென்றோம். நாங்கள் 41 நாட்கள் விரதம் இருந்து கோவிலுக்கு வந்தோம். போலீசார் பெண்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று உறுதி கூறிவிட்டு, பின்னர் எங்களை ஏமாற்றிவிட்டார்கள்" என்றனர்.

இரவு 9.50 மணியுடன் தரிசனம் முடிவடைவதால் நேற்று காலையே அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பிவழிந்தது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சில பூஜைகளுக்கு பின்னர் கோவில் நடை சாத்தப்படுகிறது. இதன்மூலம் கடந்த 2 மாதங்களாக அய்யப்ப பக்தர்கள் நடத்திவந்த போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வருகிறது.

தினமணி: "குடும்பத்தினர் 4 பேருக்கு விஷம் கொடுத்து கொன்று அரசுப் பள்ளி ஆசிரியர் தற்கொலை"

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியில் அரசுப் பள்ளி ஆசிரியர் தனது குடும்பத்தினர் 4 பேருக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டார் என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

கருமத்தம்பட்டி அமலி நகரைச் சேர்ந்தவர் அந்தோணி ஆரோக்கியராஜ். இவர், திருப்பூர் மாவட்டம், கூலிபாளையத்தில் அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், கருமத்தம்பட்டியில் அந்தோணி ஆரோக்கியராஜ் வீடு சனிக்கிழமை காலை முதல் திறக்கப்படவில்லை.

இதனால், சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் மாலை 6 மணி அளவில் அவர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, படுக்கை அறையில் அந்தோணி ஆரோக்கியராஜ் தூக்கிட்ட நிலையிலும், அவரது மனைவி ஷோபனா, குழந்தைகள் ரித்திக் மைக்கேல், ரியா, அவரது தாயார் புவனேஸ்வரி ஆகிய 4 பேர் படுக்கையில் இறந்து கிடப்பதும் தெரியவந்தது.

இது குறித்து கருமத்தம்பட்டி காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே, ஆய்வாளர் சண்முகம் தலைமையில் போலீஸார் அங்கு சென்று 5 பேரின் உடல்களைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், அந்தோணி ஆரோக்கியராஜ் எழுதிவைத்திருந்த கடிதத்தைக் கைப்பற்றினர். கடிதத்தில், தான் நீண்ட வருடங்களாக முதுகு வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், அதனால் தற்கொலை செய்து கொள்வதாகவும், அதற்கு முன்னர் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு விஷம் கொடுத்து விட்டதாகவும் எழுதிவைத்திருந்தார்.

போலீஸார், 5 பேரின் உடல்களை பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன், கருமத்தம்பட்டி காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். ஐந்து பேர் இறந்த சம்பவம் கருமத்தம்பட்டி பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

- இவ்வாறாக அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :