மாஞ்சா கயிற்றில் இருந்து பறவைகளை மீட்க சென்ற பெண் உயிரிழப்பு

மாஞ்சா படத்தின் காப்புரிமை KRINA VYAS

சமீபத்தில் குஜராத்தில் நாங்கள் உத்தராயன் என்று கூறப்படும், காற்றாடி அதாவது பட்டம் விடும் திருவிழாவை கொண்டாடினோம். சிலர் காற்றாடிகளை பறக்கவிட்டு கொண்டாடிய நிலையில், சிலரோ பறவைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் குஜராத்தில் இத்திருவிழா நடைபெறும்போது, பறவைகளும் சரி, மனிதர்களும் சரி மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

உத்தராயன் திருவிழாவின் ஒரு நாளில், அகமதாபாத்தை சேர்ந்த ரஹிலா உஸ்மான், காந்திநகரில் வனத்துறையினரால் நடத்தப்பட்ட பறவைகள் மீட்பு பிரசாரத்தில் கலந்து கொள்ள சென்றிருந்தார்.

வீடு திரும்பிக் கொண்டிருக்கும்போது, சர்கெஜ்-அஹமதாபாத் நெடுஞ்சாலையில் இருக்கும் கே.டி.மருத்துவமனைக்கு அருகே, காற்றாடியின் நூல் ரஹிலாவில் கழுத்தில் சுற்றிக் கொண்டதில் இறந்துவிட்டார்.

ரஹிலா உஸ்மானின் குடும்பம் இன்னும் இந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. யாரிடம் பேசும் நிலைமையிலும் அவர்கள் இருக்கவில்லை.

படத்தின் காப்புரிமை AMAAR SHETH

ரஹிலாவின் சித்தப்பாவான மருத்துவர் இஃபிக்கர் மலிக்கிடம் பிபிசி குஜராத்தி பேச முயற்சி செய்தது.

காந்திநகரில் எம்பிஏ படித்துக் கொண்டிருந்த ரஹிலா, அத்திருவிழா அன்று தானாகவே முன்வந்து பறவை மீட்பு பிரசாரத்தில் கலந்து கொள்ள சென்றதாக அவர் தெரிவித்தார்.

பறவைகளும் விலங்குகளும் அதிகம் பிடிக்கும்

ரஹிலாவுடன் படித்த நேஹா ஜெஷ்வானி பிபிசியிடம் கூறுகையில், "நாங்கள் இருவருமே பிரசாரத்தில் கலந்து கொள்ள காந்திநகர் சென்றிருந்தோம். ரஹிலா அகமதாபாத்தில் வசிப்பதினால், காந்திநகர் வருவது தூரமாக இருக்கும் என்று நான் கூறினேன். ஆனால், அவளுக்கு பறவைகளும் விலங்குகளும் அதிகம் பிடிக்கும் என்பதால் வந்தார்" என்றார்.

இந்த சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

காற்றாடியில் நூல் அவரது கழுத்தில் சுற்றி கொண்டவுடன், ரத்தம் வடிய அங்கிருந்த மக்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் பிழைக்கவில்லை என்கிறார் மருத்துவர் மலிக்.

படத்தின் காப்புரிமை IFTIKHAR MALEK

காற்றாடியால் உயிரிழக்கும் பறவைகள்

உத்தராயன் திருவிழாவின்போது காற்றாடி விட்டு கொண்டாடும் மக்களால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழக்கின்றன.

போட்டிக் காற்றாடியை அறுப்பதற்காக கண்ணாடி துகள்கள் அல்லது உலோகத்தால் மூடப்பட்ட மாஞ்சா கயிறே இதற்கு காரணம்.

இதனால் ஏற்படும் பறவைகள் உயிரிழப்பை தடுக்க, குஜராத் அரசு மற்றும் பல தொண்டு நிறுவனங்கள் பிரசாரம் மேற்கொள்கின்றன.

இந்த ஆண்டுக்கான கருணா பிரசாரத்தை அம்மாநில முதலமைச்சர் விஜய் ருபானி ஜனவரி 11 அன்று அகமதாபாத்தில் தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், ஒவ்வொரு ஆண்டும் இந்த பிரசாரத்தின் கீழ் 20 ஆயிரம் பறவைகள் காப்பாற்றப்பட்டு வருவதாகவும், கடநத் இரு ஆண்டுகளில் இதுவரை 40 ஆயிரம் பறவைகள் காப்பாற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை SHERWIN EVERETT

இதைத்தவிர பல தொண்டு நிறுவனங்களும் பறவை மீட்புப்பணியை மேற்கொண்டு வருகின்றன.

ஜீவ்தயா தொண்டு நிறுவனத்தின் பொறுப்பாளரான ஷெர்வின் கூறுகையில், இந்த ஆண்டு காயமடைந்த பறவைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக குறிப்பிட்டார். ஆனால், குளிர்காலத்தில் மற்ற தேசங்களில் இருந்து வரும் பறவைகளும் இருக்கும். அதனால், புறாக்கள் மற்றும் சிட்டுக்குருவிகளை தவிர கொக்குகள் மற்றும் அன்னப்பறவைகளும் காயமடையக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பறவைகள் பறந்து கொண்டிருக்கும்போது, மாஞ்சா கயிறால் அடிபட்டு கீழே விழுகின்றன.

இதுவரை ஜனவரி மாதத்தில் மட்டும் 2,275 பறவைகள் காயமடைந்து தங்களிடம் சிகிச்சைக்காக வந்ததாக ஷெர்வின் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

மனிதர்களும் பாதிக்கப்படுகிறார்கள்

உத்தராயன் திருவிழாவின் போது, காற்றாடியின் மாஞ்சா கயிறுகளால் மனிதர்கள் சிலர் உயிரிழந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குஜராத் மாநிலத்தின் உள்ளூர் ஊடகங்கள் செய்தியின்படி, இதனால் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

வதோதராவில் 4 வயது சிறுமி ஒருவரும், மஹுவாவில் 5 வயது சிறுமி ஒருவரும் மாஞ்சா நூலால் இறந்துள்ளனர்.

அதேபோல, மாஞ்சா நூல் கழுத்தில் சுற்றி டெலிவரி செய்யும் நபர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்