லயோலா கல்லூரி சர்ச்சை: ஓவியக் கண்காட்சியில் இந்து மதம் இழிவுபடுத்தப்பட்டதா?

ஓவியக் கண்காட்சி சர்ச்சை; லயோலா கல்லூரி வருத்தம் படத்தின் காப்புரிமை Twitter

சென்னை லயோலா கல்லூரியில் நடத்தப்பட்ட கலை விழா ஒன்றில் காட்சிப்படுத்தப்பட்ட ஊடகங்கள் தங்கள் மனதை புண்படுத்துவதாக இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்ததையடுத்து கல்லூரி நிர்வாகம் வருத்தம் தெரிவித்துள்ளது.

லயோலா கல்லூரியும் மாற்று ஊடக மையம் என்ற அமைப்பும் இணைந்து "வீதி விருது" என்ற நிகழ்ச்சி ஒன்றை ஜனவரி 19-20ஆம் தேதிகளில் நடத்தின. இந்த விழாவின் ஒரு பகுதியாக ஓவியக் கண்காட்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் "கருத்துரிமை ஓவியங்கள்" எனும் தலைப்பில் சில ஓவியங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

இந்த ஓவியங்களை முகிலன் என்பவர் வரைந்திருந்தார். இவற்றில் பல ஓவியங்கள் மத்திய பாரதீய ஜனதா கட்சி அரசையும் இந்து அமைப்புகளையும் விமர்சிக்கும் பாணியில் அமைந்திருந்தன. விழா முடிந்த நிலையில், இந்த விவகாரத்தைக் கையில் எடுத்த இந்து அமைப்பினர் சமூக வலைதளங்களில் கடுமையாக எதிர்வினையாற்றினர்.

"சென்னை லயோலா கிறித்துவக் கல்லூரியில் வி.சி.க, கம்யூனிஸ்ட், நக்ஸல் கிறித்தவ மதமாற்றம் செய்யும் தீயசக்திகள் அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து திட்டமிட்ட விதத்தில் இந்து மதம் மற்றும் தேசத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்" என தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக கருத்தை வெளியிட்டார் பா.ஜ.கவின் தேசியச் செயலர் எச். ராஜா.

இதற்கடுத்து, பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் தமிழிசையும் "லயோலா கல்லூரியில் இந்து மத நம்பிக்கை சின்னங்களையும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தையும் பாரத பிரதமரையும் பாரத மாதாவையும் இழிவுபடுத்தும் கண்காட்சியை நடத்திய கல்லூரி நிர்வாகத்தை கண்டிக்கிறோம். மதசார்பின்மை என சொல்லிக்கொள்ளும் கட்சி தலைவர்கள் அங்கே பங்கேற்பு! பா.ஜ.க. போராடும்" என்று தெரிவித்தார்.

இதற்குப் பிறகு, #boycottloyola, #shutdownloyola என்ற ஹாஷ்டாக்குகளுடன் இந்து அமைப்புகளின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் லயோலா கல்லூரிக்கும் இந்த ஓவியங்களுக்கும் எதிரான கருத்துகளைப் பதிவுசெய்ய ஆரம்பித்தனர்.

இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் மாநிலக் காவல்துறைத் தலைவரைச் சந்தித்து இது தொடர்பாக புகார் ஒன்றையும் அளித்தனர்.

இந்த நிலையில், திங்கட்கிழமை முற்பகலில் இந்த ஓவியக் கண்காட்சி குறித்து லயோலா கல்லூரி வருத்தம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்தக் கல்லூரியின் கலை மற்றும் எழுத்தறிவுப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் காளீஸ்வரன் அனுப்பியுள்ள அறிக்கையில், சமூகத்தின் அமைதியைக் குலைக்கும் எந்த ஒரு விஷயத்தையும் ஆதரிக்க மாட்டோம் என்று கூறியிருப்பதோடு, வீதி விருது விழாவுக்கு அளிக்கப்பட்ட இடம் தவறாகப் பயன்பட்டிருப்பதிலும் குறிப்பிட்ட மதப் பிரிவு மற்றும் கட்சியை மோசமாக சித்தரிக்கப் பயன்படுத்தப்பட்டிருப்பதிலும் தாங்கள் மிகவும் வேதனையடைந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Twitter

இந்த விவகாரம் தங்கள் கவனத்திற்கு வந்ததும், உடனடியாக அந்த ஓவியங்கள் அகற்றப்பட்டுவிட்டதாகவும் தங்கள் தரப்பில் கவனக் குறைவு இருப்பதை ஏற்றுக்கொள்வதோடு, இதனால் ஏற்பட்டத்த மனவருத்தத்திற்கு மன்னிப்புக் கேட்பதாகவும் லயோலா கல்லூரி தெரிவித்திருக்கிறது.

இந்த விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் கருத்து எதையும் இதுவரை தெரிவிக்கவில்லை. "இது மிக ஆபத்தான போக்கு. ஆட்சியை விமர்சிப்பதை இந்துத்துவத்தை விமர்சிப்பதாக மாற்றுகிறார்கள். இதுபோல நடப்பதை அரசியல் கட்சிகள் கண்டுகொண்டுகொள்ளாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. அரசியல் ரீதியாக இந்துத்துவக் கட்சிகளை எதிர்க்கத் தயாராக இருக்கும் அரசியல் கட்சிகள் நடைமுறை ரீதியாக உள்ள இந்துத்துவத்தை எதிர்க்கத் தயாராக இருப்பதில்லை. இதனால், இந்தப் போக்கு நிலைபெற்றுவிடும்" என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலர் ரவிக்குமார்.

ஆனால், லயோலா கல்லூரி மன்னிப்புக் கேட்ட பிறகு, எச். ராஜா ட்விட்டரில் தெரிவித்துள்ள கருத்தில், அந்தப் படங்கள் விழா முடிந்த பிறகுதான் அகற்றப்பட்டன என்று கூறியிருக்கிறார். "வீதி விருது விழாவிற்கு வழங்கிய அனுமதி தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது கவனத்துக்கு வந்தவுடன் சர்ச்சைக்குரிய பதாகைகள் அகற்றப்பட்டுவிட்டன என்று லயோலா கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது பச்சைப் பொய். 2 நாள் கண்காட்சி நேற்று மாலை 6 மணிக்கு முடிவடையும் போதுதான் அவை படமெடுக்கப்பட்டன." என்று அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்