பாஜக-வில் அஜீத் ரசிகர்கள்: அரசியலில் ஆர்வம் இல்லை என்கிறார் அஜீத்

அஜீத் படத்தின் காப்புரிமை Twitter

பாரதீய ஜனதாக் கட்சியில் அஜீத் ரசிகர்கள் இணைந்ததாக செய்திகள் வெளியான நிலையில், தனக்கு அரசியலில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த ஆர்வமும் இல்லையென்றும் என் பெயரோ, புகைப்படமோ எந்த ஒரு அரசியல் நிகழ்விலும் இடம்பெறுவதை தான் விரும்பவில்லையென்றும் அஜீத் விளக்கமளித்துள்ளார்.

திருப்பூரில் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் பாரதீய ஜனதாக் கட்சியில் இணையும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமையன்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் முன்னிலையில் நடைபெற்றது.

இவர்களில் பலர் தங்களை அஜீத் ரசிகர்கள் என சொல்லிக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை, "திரைப்பட கலைஞர்களிடையே நேர்மையானவர் அஜித் என்றும், தான் சம்பாதித்த பணத்தை மக்களுக்காக செலவு செய்ய நினைப்பவர் என்றும், அவரைப்போலவே அஜித்தின் ரசிகர்களும் நல்லவர்கள் இனி மோடியின் திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும்" என்று பேசினார்.

படத்தின் காப்புரிமை Twitter

இதையடுத்து சமூகவலைதளங்களில் அஜீத் ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதங்களும் கருத்துகளும் பரிமாறப்பட்டன. இந்த நிலையில், தன் நிலையை விளக்கி அஜீத் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில், தனிப்பட்ட முறையிலோ, நான் சார்ந்துள்ள திரைப்படங்களிலோ அரசியல் சாயம் வந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் தீர்மானமாக உள்ளவன். சில வருடங்களுக்கு முன்பாக என் ரசிகர் மன்றங்களைக் கலைத்ததும் இந்தப் பின்னணியில்தான். இந்த நிகழ்வுக்குப் பிறகும் சில அரசியல் நிகழ்வுகளுடன் என் பெயரையோ, என் ரசிகர்கள் பெயரையோ தொடர்புபடுத்தி சில செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இந்தத் தருணத்தில் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், எனக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ எனக்கு அரசியலில் எந்த ஈடுபாடும் இல்லை என்பதைத்தான். என் பெயரோ, புகைப்படமோ எந்த ஒரு அரசியல் நிகழ்விலும் இடம்பெறுவதை நான் விரும்பவில்லை" எனத் தெரிவித்திருக்கிறார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :