கொடநாடு விவகாரம் - குற்றமற்றவர் என நிரூபிக்க முதல்வர் நெருப்பில் குதிப்பார்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

நாளிதழ்களில் இன்று வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகின்றோம்.

தினகரன் - "முதல்வர் குற்றமற்றவர் என நிரூபிக்க நெருப்பில் குதிப்பார்"

கொடநாடு விவகாரத்தில் தன்னை குற்றவாளி அல்ல என நிரூபிக்க, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நெருப்பிலும் குதிப்பார், கடல் நீரிலும் இறங்குவார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்ததாக தினகரன் நாளிதழ்செய்தி வெளியிட்டுள்ளது.

சாத்தூரில் செய்தியாளார்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சென்னை தலைமை செயலகத்தில் துணை முதல்வர் தன்னுடைய அறையில் யாகம் நடத்தவில்லை என்றும், சாமிதான் கும்பிட்டார் என்றும் தெரிவித்தார்.

மேலும், தேர்தல் களத்தில் இருக்கப்போவது அதிமுக, திமுகதான் என்றும், மற்ற கட்சிகள் எதுவும் தேர்தல் களத்திலேயே இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தினத்தந்தி - "2014 நாடாளுமன்ற தேர்தலில் மோசடி" - இணைய நிபுணர் குற்றச்சாட்டு

படத்தின் காப்புரிமை Hindustan Times

கடந்த 2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற நிலையில், அந்த தேர்தலில் மோசடி செய்யப்பட்டதாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வடிவமைத்த சையது சுஜா தெரிவித்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2009ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை தான் இந்திய மின்னணு கழகத்தில் பணியாற்றிய போது, 2014ஆம் ஆண்டு தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை வடிவமைத்த குழுவின் தான் இருந்ததாகவும், அப்போது மின்னணு கழகம் கேட்டுக் கொண்டதன் பெயரில் தான் மோசடி செய்தததாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தை தெரிந்து கொண்ட பாஜக மூத்த தலைவர் கோபிநாத் முண்டே சாலை விபத்து என்ற பெயரில் கொல்லப்பட்டதாகவும், அதை கொலை வழக்காக பதிய முயன்ற என்.ஐ.ஏ அதிகாரியும் கொல்லப்பட்டதாகவும் சையது சுஜா தெரிவித்துள்ளார்.

அவரது குழுவினரும் கொல்லப்பட்டதால், தான் பயந்துபோய் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாக சுஜா தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இந்து தமிழ் : பெருங்குடி குப்பைமேட்டில் இளம்பெண்ணின் உடல் பாகங்கள்

சென்னையில் உள்ள பெருங்குடி குப்பைமேட்டில், இளம்பெண் ஒருவரின் கை, கால்கள் கொண்ட பார்சலை கண்டு மாநகராட்சி ஊழியர்கள் அதிர்ச்சியடைந்ததாக இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பெண்ணின் உடல் பாகங்களை கைப்பற்றி பள்ளிகரணை போலீஸார் நடத்திய விசாரணையில், பெண்ணின் உடல் பாகங்கள் வந்த லாரி கோடம்பாக்கம் பவர் ஹவுசிலிருந்து குப்பையை ஏற்றி வந்தது தெரியவந்தது.

30லிருந்து 35 வயது மதிக்கத்தக்க அப்பெண்ணின் கையில் இரண்டு இடங்களில் பச்சைக் குத்தப்பட்டுள்ளது. கை, கால்கள் மட்டும் கிடைத்த நிலையில் உடலின் பிற முக்கிய பாகங்களை தேடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

கோடம்பாக்கம் பகுதியில் சமீபத்தில் பெண்கள் யாராவது காணாமல் போனார்களா? என்ற தீவிர விசாரணையில் போலீஸார் இறங்கி உள்ளனர்.

தினமலர் - குட்கா ஊழல் விவகாரம் - சிபிஐ வசம் சிக்கிய முக்கிய ஆதாரம்

குட்கா ஊழல் குறித்து, தமிழக டி.ஜி.பி., மற்றும் தலைமை செயலருக்கு, வருமான வரித்துறை அதிகாரிகள் எழுதிய ரகசிய கடிதத்தை, அதிகாரிகள் இருவர் பெற்றதற்கான ஆதாரம் கிடைத்துள்ளதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு ஜூலையில், வருமான வரித்துறை நடத்திய சோதனையை தொடர்ந்து, அப்போது தலைமை செயலராக இருந்த ராம மோகன்ராவ், டி.ஜி.பி.,யாக இருந்த அசோக்குமார் ஆகியோருக்கு, வருமான வரித்துறை அதிகாரிகள் ரகசிய கடிதம் எழுதினர். ஆனால், வருமான வரித்துறை அதிகாரிகளிடம் இருந்து கடிதம் வந்தது பற்றிய தகவல், அரசு சார்பில், மறைக்கப்பட்டு வந்தது.

ஆனால், கடிதத்தை, உதவி நிர்வாக அதிகாரி ஒருவரும், டி.ஜி.பி., அலுவலக முகாம் கண்காணிப்பாளர் ஒருவரும் பெற்றுள்ளனர். இது தொடர்பான ஆதாரங்கள், குட்கா ஊழல் குறித்து விசாரித்து வரும், சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளன.

ஆளப்போறான் தமிழனை மிஞ்சிய 'ரௌடி பேபி'| Most Viewed Tamil Songs |

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்