மின்னணு வாக்கு இயந்திரங்களை ஹேக் செய்ததா பாஜக? - என்ன சொல்கிறார் சையத் சுஜா?

மின்னணு வாக்கு இயந்திரங்களை ஹேக் செய்ததா பாஜக? - என்ன சொல்கிறார் சையத் சுஜா?
Image caption லண்டனில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு

அமெரிக்காவை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் லண்டனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்திய நாட்டின் மின்னணு வாக்கு இயந்திரங்கள் குறித்து முன்வைத்த பரபரப்பான ஆனால், நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகள் இந்திய அரசியலில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

அமெரிக்காவை சேர்ந்த சைபர் நிபுணர் சையத் சுஜா, செய்தியாளர்கள்கள் மற்றும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் கபில் சிபில் ஆகியோர் பங்கேற்ற நிகழ்வில் ஸ்கைப் மூலம் உரையாற்றினார்.

அப்போது, இந்தியாவில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை வடிவமைத்த குழுவில் தான் இருந்ததாகவும், 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் நிகழ்ந்ததாகவும் குற்றஞ்சாட்டினார்.

லண்டனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிபிசி தெற்காசிய செய்தியாளர் ககன் சபர்வால் அங்கு நடைபெற்ற நிகழ்வையும், அவர் சையத் சுஜாவிடம் அவர் முன்வைத்த கேள்விகளையும் குறித்து விரிவாக அலசுகிறார்.

இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தது யார்?

ஐரோப்பாவுக்கான இந்திய செய்தியாளர்கள் சங்கம் மற்றும் லண்டன் வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் சங்கம் கூட்டாக ஒருங்கிணைந்து நடத்திய சந்திப்பில் செய்தியாளர்கள், மாணவர்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கபில் சிபில் உள்பட பிரிட்டன் மற்றும் இந்தியாவை சேர்ந்த பொது உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டனர்.

படத்தின் காப்புரிமை SAM PANTHAKY

திட்டமிட்ட நிகழ்வின்படி, அமெரிக்காவை சேர்ந்த சைபர் நிபுணர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எவ்வாறு ஹேக் செய்யப்படுகின்றன என்பதை காட்ட வேண்டும். ஆனால், கடந்த வார இறுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் சையத் தாக்கப்பட்டதால் தனது லண்டன் பயணத்தை ரத்து செய்துள்ளதாக சையத் தெரிவித்தார்.

இசிஐஎல் எனப்படும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் என்று தன்னை அறிமுகப்படுத்தி கொண்டார் சையத். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வடிவமைக்கும் குழுவில் தானும் இடம்பெற்றிருந்ததாக தெரிவித்தார்.

சையத் உயிருக்கு அச்சுறுத்தல்

ஸ்கைப் வழியாக சையத் தனது உரையாடலை நிகழ்த்தினார். அவர் அமர்ந்திருந்த அறை இருட்டாக இருந்தது தனது அடையாளத்தை அவர் வெளியிட விரும்பவில்லை என்பதை எடுத்து காட்டியது. தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார் சையத். தன்னால் ஆங்கிலம் தவிர பிற இந்திய மொழிகளிலும் பேச முடியும் என்றும், ஆனால் ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டுக் கொண்டதால் தான் ஆங்கிலத்தில் பேசுவதாகவும் சையத் கூறினார்.

Image caption லண்டனில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு

கடந்த ஐந்தாண்டுகளாக சையத் அமெரிக்காவில் வசித்து வருவதால் அவரது ஆங்கில மொழி நடை அமெரிக்க பாணியில் இருந்தது. தான் ஹைதராபாத்திலிருந்து வந்திருப்பதாகவும், 2014 ஆம் ஆண்டு தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால் அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் கோர வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டதாகவும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இந்தியாவின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை கணினி வழியாக ஊடுறுவ முடியும் என்பதைப் பற்றி பல தகவல்களை அறிந்திருந்ததால் தனது நண்பர்களைப் போல தனது உயிருக்கும் அச்சுறுத்தல் இருப்பதாகவும், தன்னுடன் பணியாற்றியவர்களில் குறைந்தது ஐந்து ஊழியர்கள் இதன் காரணமாகவே கொல்லப்பட்டார்கள் என்றும் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டை முன்வைத்தார்.

சையத் சுஜாவிடம் சில கேள்விகளை பிபிசி முன்வைத்தது.

சையத், அமெரிக்கா மற்றும் காங்கோ போன்ற நாடுகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எவ்வித பிரச்சனைகளுமின்றி பயன்படுத்தப்படுவது எப்படி?

அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து நான் ஆய்வு செய்ததில்லை. அதற்கான வாய்ப்புகளும் எனக்கு கிடைக்கவில்லை. அதனால், அமெரிக்கா மற்றும் காங்கோ குறித்து கருத்து கூற முடியாது.

கடந்தாண்டு, இந்திய தேர்தல் ஆணையம் இந்தியாவில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்வது பற்றி பொதுவெளியில் சவால் விடுத்திருந்தனர். அதில் நீங்கள் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தீர்களா?

நான் அமெரிக்காவில் தஞ்சம் கோரி வந்துள்ளேன். நான் மீண்டும் இந்தியாவுக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டால் அங்கு என்னுடைய பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது? அதனால், அந்த சவாலில் பங்கேற்கத் தயாராக இருந்தவர்களுக்கு என்னுடைய விருப்பத்தை தெரிவித்திருந்தேன். ஆனால், கடைசி நேரத்தில் அவர்கள் அந்த சவாலில் கலந்து கொள்ளவில்லை.

நீங்கள் இப்போது இதுபற்றிய பேச வேண்டிய நிலை என்ன? இந்த செய்தியாளர் சந்திப்பின் மூலம் என்ன சாதிக்க நினைக்கிறீர்கள்?

"நேர்மையாக சொல்லப்போனால் நான் நிச்சயம் எதையும் எதிர்பார்த்து செய்யவில்லை. இங்கு எதுவும் மாறிவிடாது என எனக்குத் தெரியும். காரணம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நிரந்தரமாக இருக்கும். என்ன நடந்து கொண்டு இருக்கிறதோ அது தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கும். நாட்டு மக்கள் ஒன்றிணைந்து எங்களுக்கு வாக்குச்சீட்டு முறைதான் வேண்டும் என்றாலும் எதுவும் மாறப்போவதில்லை. காரணம், வாக்குகளை வாங்கும் அளவுக்கு பாஜக வசம் அவ்வளவு பணம் இருக்கிறது. தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை மக்கள் இந்த தருணத்தில் சிந்திக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஓர் அரசாங்கம் இங்கு தேவையா, ஓர் அரசாங்கம் இந்தியாவில் அனைத்தையும் மிகைப்படுத்தி கொண்டே செல்கிறதே அது தேவையா என்று மக்கள் சிந்திக்க வேண்டும். இங்கு யாரும் இதைப்பற்றி எதுவும் செய்ய மாட்டார்கள்."

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இல்லாமல் மாற்றாக எதை பயன்படுத்த நீங்கள் பரிந்துரைக்கிறீர்கள்?

யாரும் ஊடுறுவ முடியாத மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இந்தியா வசம் உள்ளன. ஆனால், அதை அவர்கள் பயன்படுத்த மாட்டார்கள். நாங்கள் இந்திய அரசாங்கத்திடம் அதன் வடிவமைப்பை கொடுத்துள்ளோம். அதனை யாராலும் ஹேக் செய்ய முடியாது. அதன் வடிவமைப்பு அவ்வளவு சிக்கலானது.

சையத் சுஜாவின் குற்றச்சாட்டுகள் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் கபில் சிபிலின் கருத்துகளை அறிய முயன்றார் ககன். ஆனால், சையத் தெரிவித்துள்ள கருத்துகளை சரிபார்த்து அதன்பிறகு ஒரு முடிவுக்கு வரவேண்டியுள்ளதாக கபில் சிபில் தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்களை அந்த சந்திப்பில் சையத் சுஜா சமர்பிக்கவில்லை. ஆனால், இதுகுறித்த தரவுகளை செய்தியாளர்களிடம் பகிரத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

இந்தியத் தேர்தல்களில் பயன்படுத்தும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்யவே முடியாது என்ற தங்களது கருத்திலிருந்து எப்போதும் பின்வாங்கப்போவதில்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய தேர்தல் ஆணையத்தால் உருவாக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும் என்று நிரூபிப்பதற்காக லண்டனில் நடத்தப்பட்டது நிகழ்ச்சி பற்றி எங்களது கவனத்துக்கு வந்தது.

பாரத் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ஆகிய இந்திய அரசின் நிறுவனங்களில் கடும் கண்காணிப்பின் கீழ் உருவாக்கப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்யமுடியாது என்ற கருத்தில் உறுதியாக உள்ளோம்.

மேலும், லண்டனில் நடந்த இந்த நிகழ்வு குறித்து தனியே ஆராய்ந்து, அதுகுறித்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வாக்கு இயந்திர உருவாக்கத்தில் அவர் இல்லை

மின்னணு வாக்கு இயந்திர உருவாக்கத்தில் சையத் சுஜா இல்லை என்று அறிக்கை வெளியிட்டு இருக்கிறது தேர்தல் ஆணையம்.

அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், சையத் சுஜா மின்னணு வாக்கு இயந்திர உருவாக்க அணியில் தாம் இருந்ததாகவும், அதனை ஹேக் செய்ய முடியுமென்றும் அவர் கூறியதாக சில ஊடக தகவல்கள் மூலம் நாங்கள் அறிகிறோம். உண்மையில் அவர் இதன் உருவாக்கத்தில் இல்லை. இதனை உருவாக்கிய நிறுவனத்திலும் பணியாற்றவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சையத்தின் இந்த செயலானது இந்திய தண்டனை சட்டத்தை மீறும் செயலாகும் குறிப்பாக ஐ.பி.சி 505(1)(b)ஐ என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :