ஏன் மாயாவதி பா.ஜ.கவை சேர்ந்த சாதனா சிங்கால் அவமானப்படுத்தப்பட்டார்?

மாயாவதி படத்தின் காப்புரிமை Getty Images

நீங்களும் இதனை கேட்டிருக்ககூடும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி 'பெண்ணா அல்லது ஆணா?' அவர் தனது மரியாதையை அதிகாரத்திற்காக விற்றுவிட்டார் என்று பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பெண் சட்டமன்ற உறுப்பினர் சாதனா சிங் கூறினார். இதனை நீங்களும் கேட்டிருக்ககூடும்.

இப்படி கூறியதற்காக சாதனா மன்னிப்பு கோரிவிட்டார். ஆனால், பல பெண் தலைவர்கள் மாயாவதி குறித்து இவ்வாறாக விமர்சித்து இருக்கிறார்கள். ஒவ்வொரு விமர்சனமும் முந்தையதைவிட மோசமாக ஆகி கொண்டே வருகிறது.

இந்த விமர்சனத்திற்கான காரணங்களை தேடுவதைவிட, நாம் இன்னொரு விஷயத்தை கூர்ந்து பார்க்க வேண்டும். அதாவது இவ்வாறான விமர்சனங்களை கூறுவது பெண்கள் மட்டுமல்ல ஆண்களும்தான்.

ஆண்களின் அவதூறு

முதல்முறையாக மாயாவதி தன் தலைமுடியை வெட்டிய போது, சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் அவரை விமர்சித்தார்.

அதாவது நல்ல இந்திய பெண்கள் நீளமான முடிதான் வைப்பார்கள் என்றும், முடியை வெட்டியதால், மாயாவதி மேற்கத்திய பெண்ணாக ஆகிவிட்டார் என்றும் விமர்சித்தார்.

1995ஆம் ஆண்டு உத்தரபிரதேச கூட்டணி ஆட்சிக்கான தனது ஆதரவை பகுஜன் சமாஜ் திரும்பப் பெற்ற போது, சமாஜ்வாதி கட்சியினர் அரசு விடுதியில் மாயாவதியை தாக்கினர்.

இந்த தாக்குதலுக்குப் பின், முலாயம் சிங் யாதவ் மீது கிரிமினல் வழக்கு பதியப்பட்டது.

அந்த வழக்கு இன்னும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக கூறுகிறார் பத்திரிகையாளர் நேஹா தீக்சத்.

படத்தின் காப்புரிமை Getty Images

மாயாவதி குறித்து அவர் எழுதிய கட்டுரை ஒன்றில், முலாயம் ஒரு பேரணியில் கூறியதை கோடிட்டு காட்டுகிறார். அதாவது முலாயம், "ஒருவர் பாலியல் வல்லுறவு கொள்ள விரும்பும் அளவுக்கு மாயாவதி என்ன பேரழகியா?" என்று பேசியதாக தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார் நேஹா.

இதில் பொதிந்துள்ள அர்த்தம் என்ன? அழகிய பெண்களை பாலியல் வல்லுறவு செய்யலாம். பெண்கள் அழகாக இல்லை என்றால், அவர் பாலியல் வல்லுறவு செய்ய தகுதியற்றவர்கள். பெண்ணின் அழகுதான் அவர் பாலியல் வல்லுறவு செய்யப்பட காரணம்.

பிற தலைவர்களும் இவ்வாறாக மோசமாக விமர்சித்திருக்கிறார்கள். அதனை மீண்டும் மீண்டும் எழுதுவதால் என்ன நிகழ்ந்துவிடப் போகிறது? முலாயம் கூறியதை குறிப்பிட காரணமே, பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் விமர்சித்திருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டதான்.

இவ்வாறான விமர்சனங்கள் பெண்கள் குறித்த பழமைவாத சித்தாந்தத்தை வலுப்படுத்துகிறது.

ஏன் பெண்களுக்கு எதிராக பெண்கள்?

இங்கொரு கேள்வி எழுகிறது, பெண்களுக்கு எதிராக பெண்கள் பேச என்ன காரணம்?

இந்த கேள்விக்கான விடையும் சிக்கலானது அல்ல.

ஆண்கள் இவ்வாறாக விமர்சிக்க பழமைவாத சித்தாந்தத்தில் அவர்கள் வளர்ந்ததுதான் காரணமென்றால், இதே காரணம் பெண்கள் சக பெண்களை விமர்சிப்பதற்கு பொருந்தும்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த ஆண் ஆதிக்க சமூகத்தில், பெண்ணை, அதுவும் ஒரு தலித் பெண்ணை மோசமாக கருதுவது சரி என்றே கருதப்படுகிறது.

மாயாவதி ஆணா, பெண்ணா என்று எனக்கு புரியவே இல்லை என்று 2014ஆம் ஆண்டு, பா.ஜ.க செய்தி தொடர்பாளர் சாதனா ஜெய்ப்பூரில் நடந்த ஒரு கூட்டத்தில் கூறினார்.

சாய்னா ஒரு ஆடை வடிவமைப்பாளரும் கூட. மாயாவதியின் தோற்றம், அவரது சிகை அலங்காரம் குறித்து அவர் கூறியது, பெண்ணாக ஒருவர் கருதப்பட வேண்டுமானால், சில விதமான ஆடைகள், அலங்காரம் செய்துக் கொள்வது கட்டாயமென அவர்கள நினைப்பதை காட்டுகிறது.

அதிகாரமென்பது ஆண்களுக்கானது. மாயாவதி திருமணமாகதவர் என்பதால், அவர் நன்கு கத்தரிக்கப்பட்ட முடி வைத்திருக்கிறார். புடவை அணிவதில்லை. அவர் பெண் போன்ற பெண் என்று இவர்கள் கருதுகிறார்கள் என்கிறார் இடதுசாரி சிந்தனையாளர் கவிதா கிருஷ்ணன்.

சாதியும், வர்க்கமும்

இதுபோன்ற ஆபாச கருத்துகளை ஆண்களும், பெண்களும் மாயாவதிக்கு எதிராக மட்டும் வீசப்படவில்லை.

ஆனால், அவர் தலித்தாக இருப்பதால், நாடாளுமன்றத்திற்கு செல்வதற்கும், முதல் அமைச்சர் பதவியை அடைவதற்கும் அவர் சாதிய பாகுபாட்டையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது.

படத்தின் காப்புரிமை Penguin

மாயாவதி குறித்து பத்திரிகையாளர் அஜோய் போஸ் எழுதிய புத்தகத்தில் மாயாவதி எதிர்கொண்ட பல விஷயங்களை விவரித்திருக்கிறார்.

நாடாளுமன்றத்தில் பல பெண் தலைவர்கள் மாயாவதியை கிண்டல் செய்திருக்கிறார்கள். அவர் தலையில் எண்ணெய் வைத்திருக்கிறார் என்றும், மாயாவதிக்கு அதிகமாக வியர்க்கிறது. அதனால் அவர் அதிகமாக வாசனை திரவியம் உபயோகிக்க வேண்டுமென்றும் கிண்டல் செய்திருக்கிறார்கள் என்று தனது புத்தகத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

ஆண்களும், பெண்களும் மிக மோசமாக மாயவதியை விமர்சித்து இருக்கிறார்கள்.

இந்த கட்டுரையில் முன்பே குறிப்பிட்டது போல விமர்சனங்கள் மோசமாக ஆகிக் கொண்டே இருந்திருக்கிறது.

இது ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையேயான போட்டி அல்ல. இது சமூகம் மற்றும் அரசியல் தொடர்புடையது.

அனைத்து அரசியல் தலைவர்களும் இணைந்து அரசியல் சூழலை மாற்ற வேண்டும். பழைய சிந்தனைகளை விட்டொழிக்க வேண்டும். அனைவரையும் சமமாக மதிக்க வேண்டும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :