சசிகலாவுக்கு சலுகை: லஞ்சம் தந்த குற்றச்சாட்டில் புகழேந்தி ஆஜராக உத்தரவு

சசிகலா படத்தின் காப்புரிமை Getty Images

பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறப்பு வசதிகளை ஏற்படுத்தி தருவதற்காக சிறைத்துறை அதிகாரிகளுக்கு இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் அளித்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக வரும் 24ஆம் தேத்தி தேதி நடைபெறவுள்ள விசாரணையில் ஆஜராகுமாறு அம்மா மக்கள் முன்னேற்ற கழக கர்நாடக மாநில செயலாளர் புகழேந்திக்கு கர்நாடக லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அளித்துள்ளது.

சிறையில் சட்டவிரோதமாக சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் அளிப்பதற்காக சிறைத்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக அப்போதைய கர்நாடக சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா மொட்கில் தெரிவித்திருந்தார்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மீது உச்சநீதிமன்றத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற சசிகலா கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய புகழேந்தி, "கர்நாடக லஞ்ச ஒழிப்புத்துறை என்னை இன்று (செவ்வாய்க்கிழமை) ஆஜராவதற்குதான் சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், இன்றைய நாளை விடுமுறை தினமாக மாநில அரசு அறிவித்துள்ளதால் ஜனவரி 24ஆம் தேதியன்று ஆஜராகுமாறு கோரியுள்ளனர். அன்றைய தினம் நான் கண்டிப்பாக ஆஜராவேன்" என்று கூறினார்.

முன்னாள் கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபாவால் முன்வைக்கப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை விசாரித்த வினய் குமார் ஆணையம் இதுகுறித்து விசாரணை நடத்துமாறு கர்நாடக லஞ்ச ஒழிப்புத்துறையை கேட்டுக்கொண்டது. ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான வினய் குமார் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை குழு ரூபாவால் முன்வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தியது.

படத்தின் காப்புரிமை Twitter
Image caption புகழேந்தி

சசிகலாவுக்கு சிறையில் சலுகைகள் வழங்குவதற்காக சிறைத்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுவது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று புகழேந்தி கூறுகிறார். "குற்றச்சாட்டை நிரூபிக்கும் எந்த ஆதாரமும் இல்லை. யார் யாருக்கு பணம் கொடுத்தது? பணம் கொடுப்பதற்கான தேவை என்ன? நான் நேர்மையாக சொல்கிறேன், இதுவரை நான் ஒரு கோடி ரூபாயையே நேரில் பார்த்ததில்லை என்னும் நிலையில், இரண்டு கோடி ரூபாய் குறித்து என்னிடம் கேள்வி கேட்கிறார்கள்" என்று அவர் கூறுகிறார்.

கர்நாடக லஞ்ச ஒழிப்புத்துறை புகழேந்திக்கு அனுப்பிய சம்மனில், "பெங்களூரு நகர காவல்துறையின் லஞ்ச ஒழிப்பு பிரிவில் பதிவாகியுள்ள குற்றம் எண் 7/2018 பிரிவு 13 ( 1) ((C) r/w 13 (2 ) P.C. Act 1988 தொடர்பாக உங்களுக்கு தெரியும் விவரங்கள் என்று எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே, இதுகுறித்து உங்கள் தரப்பு வாதத்தை பதிவு செய்வது அவசியமாவதால், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் வரும் ஜனவரி 24ஆம் தேதி ஆஜராகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது."

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :