சபரிமலைக்குச் சென்ற கனகதுர்காவை வீட்டில் நுழைய விடாமல் தடுத்த கணவர்

கனகதுர்கா படத்தின் காப்புரிமை Getty Images

இம்மாத (2019 ஜனவரி) துவக்கத்தில் சபரிமலை கோயிலுக்குள் நுழைந்து தரிசனம் செய்து வரலாற்றில் இடம்பெற்ற கனகதுர்காவை அவரது கணவர் வீட்டுக்குள் நுழைய விடாமல் தடுக்கிறார்.

முன்னதாக, சபரிமலை ஐயப்பனை தரிசித்ததால், பாரம்பரிய வழக்கத்தை மீறியதாக குற்றம்சாட்டிய தனது மாமியாருடன் ஏற்பட்ட சண்டையில் தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். திங்கள்கிழமை மாலை மருத்துவமனையில் இருந்து கனகதுர்கா வீடு திரும்பியிருக்கிறார்.

அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது. தன்னை வீட்டுக்குள் நுழைய விடாமல் கணவனின் குடும்பம் தடுப்பதையும், தனது கணவன் வீட்டை காலி செய்ததை கண்டறிந்ததும் காவல்துறையை அணுகினார் கனகதுர்கா. நேற்று இரவு அவரை அரசின் ஒரு பெண்கள் நல மையத்துக்கு காவல்துறை அழைத்து சென்றுள்ளனர் என பிபிசியிடம் சமூக செயற்பாட்டளார் தங்கச்சான் விதயட்டில் தெரிவித்துள்ளார்.

தனது கணவனின் குடும்பம் தாம் மீண்டும் வீட்டுக்கு செல்வதை விரும்பவில்லை என்பதை கண்டறிந்ததும் கனகதுர்கா காவல் நிலையத்துக்குச் சென்றுள்ளார்.

''கனகதுர்காவின் கணவர் காவல் நிலையத்துக்கு வந்தார். ஆனால் தனது மனைவியை வீட்டுக்கு அழைத்துச் செல்ல விருப்பம் இல்லை என தெரிவித்தார். உடனே, கனகதுர்கா, தனது கணவன் எங்கு சென்றாலும் அவருடன் செல்ல விரும்புவதாகச் சொன்னார். அதற்கு அவரது கணவன் தாம் காவல் நிலையத்திலேயே இருப்பேன் எனக் கூறினார்.நாங்கள் அவர்கள் இருவருக்கும் மன நல ஆலோசனை வழங்கினோம். அதன் பின்னர் கடுமையான மன அழுத்தத்தில் இருக்கும் பெண்களுக்காக கேரள அரசு அமைத்துள்ள பெண்கள் நல மையம் ஒன்றுக்கு அவரை அனுப்பியுள்ளோம்'' என மலப்புரம் காவல் துறை கண்காணிப்பாளர் பிரதீஷ் குமார் பிபிசியிடம் தெரிவித்தார்.

'' தற்போது கனகதுர்கா புகார் அளித்துள்ளார். ஆகவே இது குடும்ப வன்முறை வழக்காக பதிவாகியுள்ளது. வழக்கு நீதிமன்றத்துக்குச் செல்லும்'' என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

முன்னதாக, தனது மாமியார் தன்னை அடித்ததாக கூறி கனகதுர்கா புகார் கொடுத்திருந்தார்.

39 வயது கனகதுர்காவும், 40 வயது பிந்து அம்மிணியும் கடந்த ஜனவரி 2-ம் தேதி சபரிமலை கோயிலுக்கு மலையில் ஏறிச் சென்று தரிசனம் செய்தனர். சுவாமி ஐயப்பனை அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருந்த நிலையில், தீர்ப்பை செயல்முறைப்படுத்துவதற்காகச் சென்றுள்ளனர்.

அனைத்து சடங்குகளையும் முறையாக பின்பற்றி ஐயப்பன் கோயிலின் புனித இடமாக கருதப்படும் 18 படி வழியாக மேலேறி சென்று ஐயப்பனை தரிசித்துள்ளனர். அவர்களுக்கு காவத்துறையினரும் உறுதுணையாக இருந்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

முன்னதாக டிசம்பர் மாதம் 24-ம் தேதி அவர்கள் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்ய திட்டமிட்டபோது பா ஜ கவின் குடையில் இருக்கும் ஒரு அமைப்பான சபரிமலை கர்மா சமிதியின் ஆதரவாளர்களின் எதிர்ப்பால் அதிகளவு காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தபோதிலும் தரிசனம் செய்ய முடியவில்லை.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
'அவர்கள் எங்களை கொலை செய்யலாம்; ஆனாலும் பயமில்லை'

மாதவிடாய் ஏற்படும் வயதில் உள்ள பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்கக்கூடாது எனும் மரபு வழக்கத்தை நம்பும் அந்த அமைப்பு உச்சகநீதிமன்றத் தீர்ப்பினை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது.

மரபு வழக்கத்தை விட பெண்களின் அடிப்படை உரிமையே முக்கியம் என கருதி 4-1 என்ற கணக்கில் சபரிமலையில் பெண்கள் நுழைவதற்காக ஆதரவாக நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

''தன்னை வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டி, புதன்கிழமை கனகதுர்கா மாஜிஸ்திரேட்டிடம் செல்கிறார். தற்போது அவர் மிகவும் மன வருத்தத்தில் இருக்கிறார்'' என்கிறார் தங்கச்சான்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :