கடந்த 5 ஆண்டுகளில் எந்த பயங்கரவாத சம்பவங்களும் நடைபெறவில்லையா? உண்மை என்ன?

  • 24 ஜனவரி 2019

கூறப்படுவது: இந்திய பிரதமராக நரேந்திர மோதி 2014ஆம் ஆண்டு பொறுப்பேற்றதிலிருந்து எந்த பெரிய பயங்ரவாத சம்பவங்களும் நடைபெறவில்லை என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகிறார்.

உண்மை என்ன? அரசு தரவுகள் மற்றும் சுதந்திரமாக பெற்ற தகவல்களை ஆராய்ந்து பார்த்ததில் 2014ஆம் ஆண்டுக்குப் பின் பல பயங்கரவாத சம்பவங்கள் இந்தியாவில் நடந்துள்ளன. இந்த கால இடைவெளியில் நடந்த பயங்கரவாத சம்பங்களில் இரண்டு தாக்குதல்கள் மிகப் பெரியவை என அரசுத் தரவுகளே கூறுகின்றன.


இது குறித்து விரிவாக பார்ப்போம்.

அமைச்சர் கூறியவை

அண்மையில் நடந்த ஆளும் பா.ஜ.க கட்சியின் மாநாட்டில் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் காத்திரமாக ஒரு கூற்றை பகிர்ந்தார்.

அந்த காத்திரமான கூற்று இதுதான்: "2014ஆம் ஆண்டுக்குப் பின் பெரிதாக எந்தவொரு பயங்கரவாத தாக்குதலும் நடைபெறவில்லை."

அந்த மாநாட்டில் மேலும் அவர், "எல்லையில் சில தொந்தரவுகள் இருந்தது உண்மைதான். ஆனால், இந்திய ராணுவம் அந்த ஊடுருவல் முயற்சிகளை வெற்றிகரமாக முறியடித்துள்ளது"

எதிர்க்கட்சிகள் கூறியவை

எதிர்க்கட்சியான காங்கிரஸின் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம், "இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் பதான்கோட்டும், உரியும் எங்கு இருக்கிறது இந்திய வரைப்படத்தை எடுத்து பார்ப்பாரா?" என்று டிவிட்டரில் ட்வீட் செய்திருந்தார்.

இவை இரண்டும் ராணுவ தளங்கள் மீது 2016ஆம் ஆண்டு நடந்த தாக்குதல்கள்.

2016ஆம் ஆண்டு தொடக்கத்தில் பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள ராணுவ தளத்தில் நடந்த தாக்குதலில் 7 இந்திய ராணுவ வீரர்களும், ஆயுத குழுக்களை சேர்ந்த 6 பேரும் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானை சேர்ந்த ஆயுத குழுக்களால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்திய ஆளுகையின் கீழ் இருக்கும் உரியில் நடந்த தாக்குதலில் 17 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

அரசு தரவுகள் என்ன கூறுகின்றன?

இந்திய பாதுகாப்புத் துறை தனது உள்நாட்டு பாதுகாப்பு விவகாரத்தை நான்கு பிரிவுகளாக பிரிக்கிறது.

  1. இந்திய ஆளுகையின் கீழ் இருக்கும் காஷ்மீரில் நடக்கும் தாக்குதல்கள்.
  2. இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் நடக்கும் கிளர்ச்சி.
  3. இடதுசாரி பயங்கரவாதம்.
  4. இந்தியாவின் பிற பகுதிகளில் நடக்கும் தாக்குதல்கள்.

அரசின் தரவுகளின்படியே, அதாவது உள்துறை அமைச்சகத்தால் நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட தகவல்களின்படியே, இந்தியாவின் உட்பகுதிகளில் (பிரிவு 4) 2015 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் தாக்குதல்கள் நடந்துள்ளன.

மற்ற மூன்று பிரிவுகளிலும் தாக்குதல்கள் நடைபெற்றதாக கூறப்பட்டு இருந்தாலும், மிகப் பெரிய என்ற வார்த்தை இந்தியாவின் உட்பகுதிகள் குறித்து கூறும் போதுதான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

சரி பெரிய தாக்குதல் என்றால் என்ன?

பாதுகாப்புத் துறை வல்லுநர் அஜய் சுக்லா, "எது பெரிய தாக்குதல், எது சிறிய தாக்குதல் என்று தெளிவாக விவரிக்கும் கொள்கை சார்ந்த எந்த தரவுகளையும் அரசு வெளியிடவில்லை. அது நம் பார்வையை பொறுத்தது" என்கிறார்.

"எங்கு தாக்குதல் மேற்கொள்ளப்படுகிறது, தாக்குதல் மேற்கொள்ளப்படும் இடத்தின் முக்கியத்துவம், அந்த தாக்குதலால் ஏற்படும் விளைவு. இவற்றைக் கொண்டே எது பெரிய தாக்குதல், எது சிறிய தாக்குதலென புரிந்துக் கொள்ளப்படுகிறது." என்கிறார்.

இது குறித்து இந்திய அரசிடம் விளக்கத்தை பெற பிபிசி முயன்றது. அதாவது, அவர்களின் தரவுகளில் கூறப்பட்டுள்ள 'பெரிய தாக்குதல்' என்பதை சுட்டிக்காட்டி விளக்கம் கோரியது. ஆனால், இந்த கட்டுரை எழுதப்படும் வரை அவர்களிடம் இருந்து எந்த விளக்கமும் வரவில்லை.

அரசுசாரா அமைப்பான, தெற்காசிய பயங்கரவாத நிகழ்வுகள் குறித்த தரவுகளை வைத்திருக்கும் எஸ் ஏ டி பி தளம் பெரிய தாக்குதல் என்றால் என்ன என்று விளக்குகிறது.

மூன்றுக்கும் மேற்பட்ட சாமனியரோ அல்லது ராணுவத்தினரோ ஒரு தாக்குதலில் இறந்திருந்தால், அது பெரிய தாக்குதல் என்கிறது அந்த தளம்.

388 பெரிய தாக்குதல்கள்

அதன் கணக்கின்படி, 2014 - 2018 இடையேயான கால இடைவெளியில் 388 பெரிய தாக்குதல் சம்பவங்கள் இந்தியாவில் நடந்துள்ளன.

அமைச்சக தகவல்கள் மற்றும் ஊடக செய்திகளை கொண்டு அவர்கள் இதனை தொகுத்துள்ளார்கள்.

வன்முறை சம்பவங்கள்

எங்கு அதிகமான தாக்குதல் சம்பங்கள் நடந்துள்ளன, எங்கு குறைவான சம்பவங்கள் நடந்துள்ளன என்று ஆராய்ந்தோமானால், போன ஆட்சிக்கும் இந்த ஆட்சிக்கும் இது வேறுபடுகிறது.

2009 -13 இடையிலான காங்கிரஸ் ஆட்சியின் போது, நாட்டின் உட்பகுதிகளில் 15 பெரிய பயங்கரவாத தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. தற்போதைய ஆட்சியில் நடந்த சம்பவங்களைவிட இது அதிகம்.

பயங்கரவாதத்தில் 451 பேர் பலி

அதே நேரம், இந்திய கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீர் பகுதிகளில், 2009- 2014 காலக்கட்டங்களில் மெல்ல தாக்குதல் சம்பவங்கள் குறைந்து வந்துள்ளன. ஆனால், பாஜக அரசு பொறுப்பேற்றப் பின் அங்கு தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

2018ஆம் ஆண்டில்தான், அதிகளவிலான மக்கள் பயங்கரவாதம் தொடர்பான தாக்குதல் சம்பவங்களில் பலியாகி உள்ளனர். அதாவது 451 பேர். கடந்த பத்தாண்டுகளில் இந்த எண்ணிக்கைதான் அதிகம் என்கிறது எஸ் ஏ டி பி-யை சேர்ந்த அஜய்.

காங்கிரஸ் ஆட்சியில், 2008ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை அதிகமாக இருந்திருக்கிறது.

அரசு தரவுகளின் படி, 2012ஆம் ஆண்டை தவிர, மற்ற ஆண்டுகளில் வட கிழக்கு மாநிலங்களில் தாக்குதல் சம்பவங்கள் குறைந்துள்ளன, சாமானியர்கள் கொல்லப்படுவதும் 2015ஆம் ஆண்டிலிருந்து குறைந்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த பகுதிகள் பல இன மற்றும் பிரிவினைவாத பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளன. பல ஆயுத குழுக்கள் சுயாட்சிக்காகவும், தனி நாடு வேண்டியும் போராடி வருகின்றன.

இடதுசாரி பயங்கரவாத சம்பவங்களை பார்க்கும் போது, பிரதமர் நரேந்திர மோதி முந்தைய காங்கிரஸ் ஆட்சியுடன் ஒப்பிட்டு பேசுகிறார்.

ஜுலை 2018ஆம் ஆண்டு சுவராஜ்யா பத்திரிகையிடம் பேசிய நரேந்திர மோதி, மாவோயிச தாக்குதல் சம்வங்கள் 20 சதவீதம் குறைந்துள்ளன என்றும், இந்த சம்பவங்களில் மரணமடைவர்களின் எண்ணிக்கை 34 சதவீதம் குறைந்துள்ளன என்றும் 2013 மற்றும் 2017 ஆண்டு தரவுகளை ஒப்பிட்டு பேசினார்.

கிழக்கு மற்றும் மத்திய மாநிலங்களில் உள்ள மாவோயிச புரட்சி குழுக்கள் தாங்கள் கம்யூனிச ஆட்சி வேண்டியும், பழங்குடிகள் மற்றும் ஏழைகளின் உரிமைக்காகவும் போராடுவதாக கூறுகிறார்கள்.

பிரதமர் நரேந்திர மோதி கூறியது அரசு தரப்பு கணக்குடன் சரியாக இருந்தாலும், உள்துறை அமைச்சகத்தின் தகவலின்படி, இந்த பயங்கரவாத சம்பவங்கள் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த 2011ஆம் ஆண்டிலிருந்தே குறைந்த வண்ணம்தான் உள்ளது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :