"இசையை நான் தேர்ந்தெடுக்கவில்லை, இசைதான் என்னைத் தேர்ந்தெடுத்தது" - இளையராஜா

படத்தின் காப்புரிமை TWITTER

தினமணி - "இசையை நான் தேர்ந்தெடுக்கவில்லை, இசைதான் என்னைத் தேர்ந்தெடுத்தது"

விரைவில் இசைக் கல்லூரியைத் தொடங்க உள்ளதாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தனது பிறந்த நாள் விழாவில் திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்ததாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைத் துறை சார்பில், இளையராஜாவின் 75-ஆவது பிறந்த நாள் விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அவர், பாடல்கள், இசையின் மூலம் மனிதனுக்கு சுத்தமான ஆற்றல் கிடைக்கிறது. இசையின் மூலம் பல்வேறு அதிசய சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இது இசையின் மகத்துவம் என்றார்.

தொடர்ந்து, மாணவர்கள் கேட்ட கேள்விக்கு இளையராஜா பதிலளித்தார். அப்போது, மாணவர் ஒருவர், நீங்கள் இசையை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்? எனக் கேட்டார். அதற்கு, இசையை நான் தேர்ந்தெடுக்கவில்லை. இசைதான் என்னைத் தேர்ந்தெடுத்தது என்றார்.

வெளிநாடுகளில் இசைக் கச்சேரிக்கு சென்றபோது ஏற்பட்ட அனுபவம் குறித்து மற்றொரு மாணவர் கேட்ட போது, அங்கே நடைபெறும் இசை நிகழ்ச்சியின்போது அமைதி, ஒழுக்கம், கட்டுப்பாடு காணப்பட்டது என்றார்.

இசைக் கல்லூரி தொடங்குவீர்களா? என்ற கேள்விக்கு, அதற்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்கியுள்ளேன். விரைவில் இசைக் கல்லூரி தொடங்கப்படும் என்றார் அவர்.

தி இந்து (ஆங்கிலம்) : கடவுளும் சட்டத்தை பின்பற்ற வேண்டும் - உயர்நீதிமன்றம்

படத்தின் காப்புரிமை PHILIPPE LISSAC / GODONG

அரசுக்கு சொந்தமான நிலங்கள், நடைபாதைகளில் கட்டப்பட்டுள்ள கோவில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் குறித்த தகவல்களை உள்ளாட்சிகளிடம் கேட்டுள்ளதாக நகராட்சி நிர்வாக செயலர் உயர்நீதிமன்றத்திடம் கூறியுள்ளதாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கோவையில் உள்ள வருவாய் கோட்டாட்சிய அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள விநாயகர் ஆலயத்தை நீக்குமாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

நில அபகரிப்பவர்களின் உதவியோடு கடவுள்களும் அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிக்க முடியாது. கடவுள் என்பதற்காக சட்டத்தை மாற்ற முடியாது என்று நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் கூறியுள்ளார் என்கிறது இந்நாளிதழ் செய்தி.

தினமலர்: 'டிக் - டாக்' பயன்படுத்த தடை

'மாணவர்கள், மொபைல் போனில், 'டிக் டாக்' செயலியை பயன்படுத்தக்கூடாது' என, பள்ளிகள் தடை விதித்துள்ளதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

'டிக் டாக், மியூசிக்கலி ' போன்ற வீடியோவுக்கான செயலிகள், மொபைல்போன் பயன்படுத்துவோரை அதிகம் ஈர்த்துள்ளன. குறிப்பாக மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், 'டிக் டாக்' செயலியின் மீது, அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். இதனால், பல்வேறு குடும்பங்களில் பிரச்னை ஏற்படுகிறது. குற்ற செயல்களும் அதிகரித்துள்ளன. சமூக விரோதிகள் இந்த, 'டிக் டாக்'கில் வரும் பெண்களின் சுய விபரங்களை தவறாக பயன்படுத்துவதும் அம்பலமாகியுள்ளது.

இந்நிலையில், வேலுார் மாவட்டம், திருப்பத்துாரில் உள்ள, அரசு உதவி பெறும் பள்ளியில், 'டிக் டாக்' மோகத்தால், வகுப்பறையில் ஆசிரியரை கிண்டல் செய்து, ஆடி பாடி ரகளை செய்த வீடியோ, சமீபத்தில், பெற்றோரை அதிர வைத்தது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, பல தனியார் பள்ளிகள், பிரார்த்தனை கூட்டங்களில், 'டிக் டாக்' போன்ற செயலியின் ஆபத்துகளை எடுத்து கூறி, மாணவர்கள் அவற்றை பயன்படுத்த தடை விதித்துள்ளன. மாணவர்கள் படிக்கும் காலங்களில், பேஸ்புக், வாட்ஸ் ஆப், டிக் டாக், மியூசிக்கல் லீ, இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் பொழுத்தை போக்காமல், படிப்பில் அக்கறை செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :