உலக முதலீட்டாளர் மாநாடு: ‘புதிய முதலீடுகள் மூலம் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு’

தமிழ்நாட்டில் நடந்து முடிந்துள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் புதிதாக மூன்று லட்சத்து 441 கோடி ரூபாய்க்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார். ஆனால் எதிர்க்கட்சியான தி.மு.க. இந்த மாநாட்டை கடுமையாக விமர்சித்துள்ளது.
சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டின் நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மாநாட்டில் நிறைவுரை ஆற்றிய முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, இந்த முதலீட்டாளர் மாநாட்டில் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருப்பதாகவும் இதன் மூலம் மூன்று லட்சத்து 441 கோடி ரூபாய் முதலீடுகள் வரவிருப்பதாகவும் தெரிவித்தார். இதன் மூலம் 10 லட்சத்து 50 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்குமென்றும் அவர் தெரிவித்தார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் மிகப் பெரிய பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையை அமைக்க சென்னை பெட்ரோ கெமிக்கல் நிறுவனம் 27,500 கோடி ரூபாய் முதலீடு செய்யவிருப்பதாகவும் ஹுண்டாய் கார் நிறுவனம் 7,000 கோடி ரூபாயை விரிவாக்கப் பணிகளில் முதலீடு செய்யவிருப்பதாகவும் மின்சாரக் கார்களைத் தயாரிக்க இருப்பதாகவும் முதலமைச்சர் அறிவித்தார்.
மேலும், எம்ஆர்எஃப் நிறுவனம் வேலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் தற்போதுள்ள தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்ய 3,000 கோடி ரூபாயை முதலீடு செய்யுமென்றும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் 2,500 கோடி ரூபாயை முதலீடுசெய்யுமென்றும் அதானி நிறுவனம் காட்டுப்பள்ளி துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய பத்தாயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்யுமென்றும் பிஎஸ்ஏ ஃப்ரான்ஸ் நிறுவனம் பிஜோ கார்களைத் தயாரிக்க திருவள்ளூர் மாவட்டத்தில் 1,250 கோடி ரூபாயை முதலீடு செய்யும் என்றும் இந்த மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.
எய்ஷர் மோட்டார் நிறுவனம் தனது விரிவாக்கப் பணியில் 1,500 கோடி ரூபாயை முதலீடு செய்யுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக முதலீட்டாளர் மாநாடு: முதலீடு எதிர்பார்ப்பு எவ்வளவு?
அமெரிக்காவைச் சேர்ந்த டிபிஐ காம்போசைட்ஸ் நிறுவனம் காற்றாலைகளுக்குத் தேவையான இறக்கைகளைத் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்கவிருப்பதாகவும் சால்காம்ப், லக்ஷேர் நிறுவனங்கள் எலக்ட்ரானிக் ஹார்ட்வேர் தயாரிப்பில் இறங்கப்போவதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த விழாவில் பேசிய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, இந்த முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் பெருமளவு முதலீடுகள் ஈர்க்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்தார்.
இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மாநாடு, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சியுடன் நிறைவடைந்தது.
இந்நிலையில், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் இந்த மாநாடு குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
ஜெயலலிதா காலத்தில் நடத்தப்பட்ட முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் 2.42 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு வருமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெறும் 62 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே வந்திருப்பதாக ஆளுநர் உரையில் கூறப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கும் மு.க. ஸ்டாலின், முதல் மாநாடு முடிந்து நான்கு வருடங்கள் கழிந்த பிறகும்கூட, போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 25 சதவீதம்கூட செயல்பாட்டிற்கு வரவில்லையென குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
தற்போது புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளவற்றில் பல, வழக்கமாக வரும் முதலீடுகள் என்றும், டாவோஸில் 2019ம் ஆண்டின் உலகப் பொருளாதார அமைப்பின் கூட்டம் நடைபெறுகின்ற நேரத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் வர மாட்டார்கள் என்று தெரிந்தும் இந்த மாநாடு நடத்தப்பட்டிருப்பதாக மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
பிற செய்திகள்:
- உலகின் எடை குறைந்த 'கலாம்சாட்' செயற்கைக் கோளை விண்ணில் ஏவிய இந்தியா
- தன்னை மீட்க அறிவிக்கப்பட்ட வெகுமதியை தானே வென்ற சிறுமி
- இஸ்லாம் மதத்தை `சீனமயமாக்க' சீனாவின் ஐந்தாண்டு திட்டம்
- வெனிசுவேலாவுக்கு யார் அதிபர்? அமெரிக்கா - ரஷ்யா மோதல்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்