ஆசிரியர்கள் போராட்டம்: ‘தேர்வை எப்படி எதிர்கொள்ள போகிறோம்?’ மாணவர்கள் அச்சம்

ஆசிரியர் போராட்டம்

பழைய ஓய்வூதிய திட்டம் உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் கடந்த 22ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்த போரட்டத்தை நடத்தி வருகின்றனர்.

ஜாக்டோ ஜியோ போராட்டத்தால் தமிழகம் முழுவதும் பரவலாக பல பள்ளிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த போராட்டத்தில் தங்கள் கல்வி பாதிக்கப்படுவதாக மாணவர்கள் தெரிவிப்பதாக செய்திகள் கூறுகின்றன.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற போராட்டத்தால் மாவட்டத்திலுள்ள 1,244 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள், 64 அரசு உயர்நிலைப்பள்ளிகள்,67 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் 8,052 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலையாசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்களில் வியாழக்கிழமை 4,745 ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவில்லை,

இதனால் ஒருசில மேல்நிலைப்பள்ளிகள் மட்டும் திறந்திருந்தன அங்கேயும் ஒரு சில ஆசிரியர்கள் மட்டுமே இருந்தனர்; மற்ற ஆசிரியர்கள் யாரும் பள்ளிக்கு வராததால் மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக ராமேஸ்வரத்தில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்காலம் படித்த அரசு நடுநிலைப்பள்ளி இரண்டு தினங்களாக ஆசிரியர்கள் இன்றி மூடப்பட்டுள்ளது,

இதனால் அப்பள்ளியில் படிக்கும் 130 க்கும் மேற்பட்ட மாணவர்களின் படிப்பு முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் ராமேஸ்வரம் தீவு மக்கள் மட்டுமல்லாது அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் பாலா கூறுகையில் 'வரலாற்று சிறப்பு மிக்க மாமனிதர் அப்துல் கலாம் படித்த பள்ளி, ஆசிரியர் வேலைநிறுத்தப்போரட்டத்தால் மூடபட்டிருப்பதை பார்க்கும்போது மிகவும் கவலையளிக்கிறது'

'ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போரட்டம் நடத்தலாம். ஆனால் மாணவர்களின் கல்வி பாதிக்காத வண்ணம் நடத்த வேண்டும்'

'தற்போது ராமேஸ்வரம் மட்டும் அல்லது தமிழகம் முழுவதும் நடைபெறும் ஆசிரியர்களின் போரட்டத்தால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கும்' என பாலா பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இதனிடையே ஆசிரியர் போரட்டத்தில் கலந்து கொள்ளாத ராமேஸ்வரம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஜெயகாந்தன் பிபிசி தமிழிடம் பேசுகையில், 'அரசு பள்ளி ஆசிரியர்கள் நடத்தும் போரட்டத்திற்கு ஆதரவு அளிக்காமல் பள்ளிக்கு வந்துள்ளேன். காரணம் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கல்வி பாதிக்க கூடாது என்பதற்காகதான்'

'ஆனால், ஆசிரியர்களை போரட்டத்தில் தள்ளியதற்கு அரசுதான் காரணம். ஆசிரியர்கள் கடந்த ஓராண்டாக அரசிடம் தொடர் கோரிக்கைகளை வைத்தனர். ஆனால் அரசு சரியான நேரத்தில் செவிசாய்க்கவில்லை'

' எனவே தான் ஆசிரியர்கள் தற்போது போரட்டத்தில் இறங்கியுள்ளனர். ஆனால், ஆசிரியர்களும் மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு வேலைநிறுத்த போரட்டத்தை கைவிட்டு மாணவர்களின் கல்வி பாதிக்காத வண்ணம் வேறு போராட்டம் நடத்தலாம்' என கூறினார்.

வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்ட புதுரோடு பள்ளி ஆங்கில ஆசிரியர் ஜெரோம் பிபிசி தமிழிடம் பேசுகையில் ' நான் 22ம் தேதியில் இருந்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறேன்'

'நான் பத்தாம் வகுப்புக்கு ஆங்கில பாடம் நடத்தி வருகிறேன். எனது வேலைநிறுத்தப் போராட்டத்தால் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும் என்பதால் இன்று நான் பள்ளிக்கு வந்து மாணவர்களுக்கு தேர்வு நடத்தி சந்தேகங்களை தீர்த்து வருகிறேன். ஆனால், ஆசிரியர் வருகை பதிவேட்டியில் கையெப்பம் இடாமல் எனது எதிர்ப்பை தெரிவித்து வருகிறேன்' என தெரிவித்தார்.

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி சரேஜினி பிபிசி தமிழிடம் .'எங்களது பள்ளியில் மொத்தம் ஏழு ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால் வேலைநிறுத்தப்போரட்டம் காரணமாக இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே பள்ளிக்கு வந்துள்ளனர். அவர்களும் ஆறாம், ஏழாம் வகுப்பு நடத்தும் ஆசிரியர்கள்'

'ஆனால், நான் பத்தாம் வகுப்பு படிக்கிறேன். எனக்கு தேர்வு மற்றும் செயல்முறை தேர்வுகள் ஆரம்பிக்கவுள்ளது. ஆனால் எனக்கு பாடங்களில் எழும் சந்தேகங்களை யாரிடம் கேட்பது என தெரியாமல் இருக்கிறேன்' என சரேஜினி தெரிவித்தார்.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மாணவன் சாரங்கன் 'எங்கள் பள்ளியில் தற்போது இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே பணியில் இருகின்றனர். இதனால் வரும் தேர்வை எப்படி எதிர்கொள்ள போகிறோம் என்ற அச்சம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது' என கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்