நாடாளுமன்ற தேர்தல் 2019: தேர்தல் அறிவிப்பும், நடைமுறையும்

பொதுத்தேர்தல் அறிவிப்பும், அதற்கான நடைமுறையும்

பத்திரிகைகள், தொலைகாட்சி, பொது இடங்கள் என எல்லா இடங்களிலும் வரவிருக்கும் மக்களவை தேர்தல் பற்றிய பேச்சே அதிகமாக தென்படுகிறது. அரசியல் தலைவர்கள் நடத்தும் பேரணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. கருத்துக்களும்-எதிர்கருத்துக்களும், குற்றச்சாட்டுகளும் அதற்கு பதில்களும் என தேர்தல் திருவிழா களைகட்டத் தொடங்கிவிட்டது. அதெல்லாம் சரி, தேர்தல் எப்போது நடைபெறவிருக்கிறது?

வழக்கமாக மார்ச் மாதம் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதிகளை அறிவிக்கிறது. தேர்தல் எப்போது நடைபெறும் என்ற ஊகங்களுக்கு இடையில் மார்ச் மாத முதல் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று ஊடகங்கள் கூறுகின்றன.

பொதுத் தேர்தலுடன் சேர்த்து, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடத்தப்படும் வாய்ப்பும் இருக்கிறது. ஜம்மு-காஷ்மீர் சட்டசபை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கலைக்கப்பட்டது. விதிமுறைகளின்படி, சட்டசபை தேர்தல்கள் 6 மாதங்களுக்குள் நடைபெற வேண்டும். எனவே, ஜம்மு மற்றும் காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல்ளும், பொதுத் தேர்தல்களுக்கு முன்னதாக அல்லது பொதுத் தேர்தல்களுடன் சேர்த்தே நடத்தப்படலாம்.

2014 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற்றபோது, அந்த ஆண்டு மார்ச் ஐந்தாம் தேதி தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்டது. தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 16 ம் தேதி தொடங்கி, மே 13 வரை 5 கட்டங்களாக நடைபெற்றது.

தேர்தல் முடிவுகள் மே 16 அன்று வெளியானபோது பாரதிய ஜனதா கட்சி பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்றது, பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு உருவானது. பா.ஜ.க மட்டும் 282 தொகுதிகளில் வென்று அறுதிப் பெரும்பான்மை பெற்றது.

ஒரு வேட்பாளர் தனது வேட்பு மனுவைத் திரும்பப் பெறும் தேதியையும் தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரம் செய்வதற்கு ஏதுவாக, வேட்பு மனுவைத் திரும்பப் பெறும் தேதி மற்றும் வாக்குப்பதிவு தேதிக்கு இடையில் குறைந்தபட்சம் 14 நாட்கள் இருக்குமாறு தேர்தல் ஆணையம் தேர்தல் தேதிகளை முடிவு செய்யும்..

இது தவிர, தேர்தல் அறிவிப்பு மற்றும் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இடையில் 7 நாட்கள் இடைவெளி இருக்கும்.

படத்தின் காப்புரிமை Reuters

நாடாளுமன்ற தொகுதிகள் மொத்தம் எத்தனை?

நமது அரசியலமைப்பு சாசனத்தின்படி, நம் நாட்டில் அதிகபட்ச நாடாளுமன்றத் தொகுதிகள் 552 இருக்க முடியும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. தற்போது நம் நாட்டின் மொத்த மக்களவை தொகுதிகள் 545. இதில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 543 தொகுதிகளுக்கு பொதுத் தேர்தல் நடைபெறும்.

இதைத் தவிர, ஆங்கிலோ-இந்திய சமூக மக்களுக்கு மக்களவையில் போதுமான பிரதிநிதித்துவம் இல்லை என்று குடியரசுத் தலைவர் கருதினால், அவர் இரண்டு பேரை நியமிக்கலாம்.

மொத்த மக்களவைத் தொகுதிகளில் 131 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டவை, அவற்றை தனித் தொகுதிகள் என்று அழைக்கிறோம். அந்த 131 தொகுதிகளில் பட்டியல் சாதிகளுக்கு 84 தொகுதிகளும், 47 தொகுதிகள் பட்டியல் பழங்குடி மக்களுக்கு எனவும் ஒதுக்கப்பட்டுள்ளன. அதாவது இந்த தனித் தொகுதிகளில் முறையே, பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் மட்டுமே போட்டியிட முடியும்.

பொதுத் தேர்தலில் ஒரு கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற வேண்டுமானால் 272 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அறுதி பெரும்பான்மை பெறுவதற்கு சில தொகுதிகள் குறைவாக இருந்தால், பிற கட்சிகளிடம் இருந்தோ, சுயேட்சை வேட்பாளர்களின் ஆதரவுடன் கூட்டணி வைத்தும் ஆட்சி அமைக்கலாம்.

தேர்தலுக்கு முன்போ அல்லது தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகோ அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கின்றன. ஒரு அரசியல் கட்சி மக்களவை எதிர்க்கட்சித் தலைவரை பெறும் அந்தஸ்து பெற, மொத்த மக்களவைத் தொகுதிகளில் குறைந்தபட்சம் 10%, அதாவது 55 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். 2014 பொதுத் தேர்தல்களில் பிரதான எதிர்க்கட்சியால் தேர்தலில் 44 மக்களவைத் தொகுதிகளை மட்டுமே பெற முடியும்.

2014 ஆம் ஆண்டில் பா.ஜ.க 282 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதி பெரும்பான்மை பெற்றது, ஆனால் தற்போது பாரதிய ஜனதா கட்சியிடம் 268 மக்களவை எம்.பிக்கள் மட்டுமே இருக்கின்றனர். அதற்கு காரணம், இடைத் தேர்தல்களில் பா.ஜ.க சில தொகுதிகளை இழந்தது.

பி.எஸ். எடியூரப்பா மற்றும் பி. ஸ்ரீராமுலு போன்ற சிலர், சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக எம்.பி பதவியை ராஜினாமா செய்தனர், இதனால் அந்த தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. ஆனால் கூட்டணி கட்சிகளின் ஆதரவு இருப்பதால், பா.ஜ.க அரசு ஆபத்து இல்லாமல் இருக்கிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்திய தேர்தல் நடைமுறை எதை அடிப்படையாகக் கொண்டது?

இந்திய ஜனநாயக அமைப்பு பிரிட்டிஷ் வெஸ்ட்மின்ஸ்டர் மாதிரியை அடிப்படையாகக் கொண்டது. பிரிட்டனின் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே நாளில் நடைபெறும். வாக்குப்பதிவன்று மாலையே கருத்துக் கணிப்புக்கள் வெளியாகும். அதே நாள் இரவில் வாக்குகள் எண்ணப்பட்டு, அடுத்த நாள் காலைக்குள் தேர்தல் முடிவுகள் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டுவிடும்.

ஆனால் இந்தியாவில் அப்படி நடைபெறுவதில்லை. வாக்குப்பதிவின்போது பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னிட்டு இந்தியா போன்ற மிகப் பெரிய நாட்டில் தேர்தல் பல கட்டங்களாக நடைபெறுகிறது. ஒவ்வொரு கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்ததும், மின்னணு வக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்படும்.

தேர்தல் ஆணையத்தின் நெறிமுறைகளின்படி, பல கட்டங்களாக தேர்தல் நடைபெறும்போது, இறுதி கட்ட தேர்தல் வாக்குப்பதிவுக்கு பின்புதான், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்படலாம். இறுதி கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த ஒரு சில நாட்களுக்கு பிறகு, வாக்குகள் எண்ணப்படும். வாக்கு எண்ணிக்கை காலையிலிலேயே தொடங்கிவிடும்.

தேர்தலில் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்பட்ட சமயத்தில், தேர்தல் முடிவுகள் தெளிவாக வெளி வருவதற்கு அதிக நேரம் ஆகும். ஆனால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த தொடங்கிய பிறகு முடிவுகள் மாலைக்குள் தெளிவாக தெரிய வந்துவிடுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :