பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட மூவருக்கு பாரத ரத்னா

பிரணாப் முகர்ஜி
படக்குறிப்பு,

பிரணாப் முகர்ஜி

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி உள்ளிட்ட மூவருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது பெறுவோர் பெயர்களை இன்று (வெள்ளிக்கிழமை) இரவு மத்திய அரசு அறிவித்தது.

இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பிரணாப் முகர்ஜி, மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த சமூக ஆர்வலரும், பாரதிய ஜனதா கட்சியின் நிறுவனர்களில் ஒருவருமான மறைந்த நானாஜி தேஷ்முக், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், திரைப்படத் தயாரிப்பாளருமான மறைந்த பூபேன் அசாரிகா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது அளிக்கப்படும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார்.

"பணிவுடன் ஏற்கிறேன்" - பிரணாப்

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

பணிவோடும், இந்திய மக்களுக்கான நன்றியுணர்வோடும் தனக்குத் தரப்படும் பாரத ரத்னா விருதினை ஏற்பதாகவும், இந்திய மக்களுக்கு தாம் அளித்ததை விடவும் அதிகமாக மக்களிடம் இருந்து பெறுவதாகவும் பிரணாப் முகர்ஜி தமது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

"காங்கிரஸ் பெருமை கொள்கிறது" - ராகுல்

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

பிரனாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதற்கு டிவிட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "பொதுப் பணிக்கும், தேசக் கட்டுமானத்துக்கும் நம்மில் ஒருவர் அளித்த பெரும் பங்களிப்புக்கு அங்கீகாரமும், மரியாதையும் வழங்கப்பட்டிருப்பதில் காங்கிரஸ் கட்சி பெருமை கொள்கிறது" என்று கூறியுள்ளார். பாரத ரத்னா விருது பெறும் மற்ற இருவருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

"நம் காலத்தின் தலைசிறந்த அரசியல் தலைவர்" - மோதி

பிரனாப் முகர்ஜி நம் காலத்தின் தலைசிறந்த அரசியல் தலைவர் என்று பிரதமர் மோதி டிவிட்டரில் தெரிவித்துள்ளார். தன்னலமோ, தளர்வோ இல்லாமல் பல தசாப்தங்களுக்கு அவர் நாட்டுக்கு சேவை ஆற்றினார் என்றும், நாட்டின் வளர்ச்சிப் பாதையில் வலுவான தடயத்தை அவர் ஏற்படுத்தியுள்ளார் என்றும் மோதி கூறியுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 3

Twitter பதிவின் முடிவு, 3

அவரது அறிவுக்கு ஒப்பானவர்கள் ஒரு சிலரே என்றும் அவர் கூறியுள்ளார். பாரத ரத்னா பெற்ற மற்ற இருவரையும், பத்ம விருது பெற்றவர்களையும் மோதி பாராட்டியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :