சென்னையின் குடிநீர் தேவைக்கு விவசாய கிணறுகளில் கைவைக்க முடிவு

சென்னையின் குடிநீர் தேவைக்கு விவசாய கிணறுகளில் கைவைக்க முடிவு படத்தின் காப்புரிமை Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினமணி: "சென்னையின் குடிநீர் தேவைக்கு விவசாய கிணறுகளில் கைவைக்க முடிவு"

சென்னை மக்களின் குடிநீர்த் தேவையை சமாளிக்க திருவள்ளூர் மாவட்ட விவசாயக் கிணறுகளில் இருந்து தினமும் 8 கோடி லிட்டர் முதல் 12 கோடி லிட்டர் குடிநீர் எடுக்க சென்னை குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

படத்தின் காப்புரிமை Getty Images

சென்னையில் கடந்த ஆண்டு வட கிழக்கு பருவமழைக் காலத்தில் 352. மி.மீ மட்டுமே மழை கிடைத்தது. இது வழக்கமாகப் பெய்யும் மழையின் அளவை விட 55 சதவீதம் குறைவு. அதன் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், செங்குன்றம், சோழவரம், பூண்டி ஆகிய ஏரிகளில் சனிக்கிழமை (ஜன.26) நிலவரப்படி மொத்த கொள்ளளவில் (11 ஆயிரத்து 257 மில்லியன் கனஅடி), 1,077 மில்லியன் கன அடி நீர் இருப்பில் உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் ஏரியில் 4 ஆயிரத்து 869 மில்லியன் கன அடி நீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது சென்னை மக்களுக்குத் தேவையான குடிநீர், கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் 20 கோடி லிட்டர், வீராணம் திட்டத்திலிருந்து 18 கோடி லிட்டர், ஏரிகளில் இருந்து 27 கோடி லிட்டர் என மொத்தம் 65 கோடி லிட்டர் குடிநீர் பெறப்பட்டு வருகிறது. ஏரிகளில் உள்ள நீர் தீர்ந்துவிடும் நிலையில் இருப்பதால், திருவள்ளூர் மாவட்ட விவசாய கிணறுகளில் இருந்து குடிநீர் எடுக்க சென்னை குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியது: திருவள்ளூர் மாவட்ட விவசாயக் கிணறுகளில் இருந்து தினமும் 8 கோடி முதல் 12 கோடி லிட்டர் குடிநீர் வரை எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக விருப்பம் உள்ள விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இதில் உடன்பாடு எட்டப்பட்ட பின்னர், விவசாயக் கிணறுகளில் இருந்து குடிநீர் வாரிய சுத்திகரிப்பு நிலையங்களுக்கு நீரை கொண்டு வந்து விநியோகம் செய்ய இருக்கிறோம். தேவைக்கு ஏற்ப சிக்கராயபுரம் கல் குவாரி, போரூர் ஏரி, கொளத்தூர் ரெட்டேரி ஆகியவற்றில் இருந்து அருகில் உள்ள பகுதிகளுக்குக் குடிநீர் விநியோகிக்கப்படும். இதையடுத்து ஏரியில் இருந்து நீர் எடுப்பது குறைக்கப்படும் என்றனர்.

- இவ்வாறாக அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.


தினத்தந்தி: 'தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க குவிந்த பட்டதாரிகள்'

ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தம் காரணமாக தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்கள், பள்ளிகளில் பட்டதாரிகள் குவிந்தனர் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

அந்நாளிதழ் செய்தி கூறிவதாவது:

ஜாக்டோ-ஜியோ அமைப்பில் அங்கம் வகிக்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22-ந் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் காரணமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சில இடங்களில் ஆசிரியர்கள் வராததால், பள்ளிகளை மூடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அரசு சார்பில் தொடர்ந்து ஆசிரியர்களை பணிக்கு வருமாறு வேண்டுகோளும், எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு வந்தது. எனினும் ஆசிரியர்கள், அரசின் வேண்டுகோளை ஏற்காமல், தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், மாணவர் ஒருவர் தொடர்ந்த பொதுநல வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் கடந்த 25-ந் தேதிக்குள் பணிக்கு திரும்பவேண்டும் என்று உத்தரவிட்டது. எனினும் ஆசிரியர்கள் தங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். பணிக்கு வராத சுமார் 2 லட்சம் ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு, கல்வித்துறை சார்பில் நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் ரூ.10 ஆயிரம் மாதச் சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்கள் பெற்றோர்-ஆசிரியர் கழகம் மூலம் நியமிக்கப்படுவார்கள் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்தது. இதையடுத்து தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க, ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வு மூலம் இரண்டாம் நிலையில் தேர்ச்சி பெற்றவர்கள், பி.எட். முடித்த பட்டதாரிகள், முதுகலை தகுதி பெற்றவர்கள் உள்பட தகுதி பெற்ற ஆசிரியர்கள் அருகாமையில் உள்ள முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்கள், பள்ளிகளில் குவிந்தனர்.

சென்னை எழும்பூரில் உள்ள முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்துக்கும் ஏராளமான பட்டதாரிகள் விண்ணப்ப படிவங்களை சமர்ப்பிக்க வந்திருந்தனர். தகுதியின் அடிப்படையில் 28-ந் தேதி (நாளை) முதல் அவர்களுக்கு பள்ளிகளில் ஆசிரியர் பணி ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.

இதற்கிடையே நேற்று வரை பள்ளிக்கு வராத ஆசிரியர்களின் பெயர் பட்டியலை தயார் செய்து, அந்த பணியிடங்கள் காலியாக அறிவிக்கப்பட்டு, தகுதியான தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். இதேபோல பள்ளிகள் முறையாக நடைபெறுவதையும், அனைத்து மாணவர்கள் பள்ளிக்கு வருவதையும் உறுதி செய்யவேண்டும் என்று கல்வித்துறையை சேர்ந்த அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கான செயல்பாடுகளை ஆய்வு செய்ய மாவட்ட வாரியாக இணை இயக்குனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் கண்காணிக்கும் பணியில் ஈடுபடுவார்கள். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சில சங்கங்களை சேர்ந்தவர்கள் நாளை முதல் பணிக்கு திரும்ப திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.இந்து தமிழ்: 'தாம்பத்திய ஆசையைப் பூர்த்தி செய்யவில்லையென மனைவியிடம் விவாகரத்து கோர முடியாது'

"ஈரோடு மாவட்டத்தில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்திவந்த நபருக்கும், அங்கு பணிபுரிந்த பெண் ஒருவருக்கும் கடந்த 1997-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு கடந்த 1999-ல் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் தனது உடல் ரீதியிலான ஆசையை மனைவி பூர்த்தி செய்யவில்லை எனக்கூறி கணவர் கடந்த 2013-ம் ஆண்டு ஈரோடு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் மனைவி தாக்கல் செய்த பதில் மனுவில், ''கணவரின் தாம்பத்திய ஆசையை பூர்த்தி செய்ததால்தான் எனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. கணவருக்கும், அவருடைய அத்தை மகளுக்குமிடையே தவறான தொடர்பு உள்ளது. அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வதற்கு ஏதுவாக என்னிடம் விவாகரத்து கோருகிறார். எனவே எனது கணவருக்கு விவாகரத்து வழங்க முடியாது. மேலும் எனக்கும், எனது மகளுக்கும் மாதம் ரூ. 30 ஆயிரத்தை ஜீவனாம்சமாக வழங்க கணவருக்கு உத்தரவிட வேண்டும்' என அதில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஈரோடு குடும்ப நல நீதிமன்றம், 'மனைவி மற்றும் மகளின் பராமரிப்புக்காக கணவர் மாதந்தோறும் ரூ. 7,500-ஐ ஜீவனாம்சமாக வழங்க உத்தரவிட்டு, கணவரின் மனுவை தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கணவர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பையா, சி.சரவணன் ஆகி யோர் அடங்கிய அமர்வு, 'மனுதார ரான கணவர் 16 ஆண்டுகள் கழித்து தனது மனைவி தாம்பத்திய ஆசையை பூர்த்தி செய்யவில்லை எனக்கூறி விவாகரத்து வழக்கை தொடர்ந் துள்ளார். இது ஏற்புடைய தல்ல. வயது, உடல்நிலை, குழந்தை வளர்ப்பு போன்ற காரணங்களால் குடும்பத்தின் கூடுதல் சுமை மனைவி மீது விழும் சூழலில், இல்லற வாழ்வில் ஒத்துழைக்க மறுக்கிறார் எனக்கூறி எளிதாக ஒதுக்கிவிட முடியாது. இது குடும்பச் சூழ்நிலை மற்றும் வழக்கின் உண்மைத்தன்மைக்கு ஏற்ப மாறுபடும் என்பதையும் ஏற் கெனவே பல்வேறு தீர்ப்புகள் உறுதிசெய்துள்ளன. இந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் சரியான உத்தரவைதான் பிறப்பித்துள்ளது" எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்" என்கிறது இந்து தமிழ் நாளிதழ்.


தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - 'கங்கையில் குளிப்பது தீங்கு விளைவிக்கலாம்'

அலஹாபாத்தில் ஓடும் கங்கை நதி குளிப்பதற்போ அல்லது குடிப்பதற்கோ உகந்த நீர் என்பதால்  கும்பமேளாவின் போது அந்த நதியில் குளிப்பது தீங்கு விளைவிக்கலாம் என மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய தரவுகள் தெரிவிப்பதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

உத்தரகண்ட், உத்தர பிரதேசம், பிஹார், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் ஓடும் கங்கை நதி நீரின் தரம் குறித்து மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் கண்காணித்து வருகிறது.

அலஹாபாத்தில் ஓடும் கங்கையில் உயிர்வேதியியல் பிராணவாயு அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருப்பதனால் இதில் குளிப்பதோ அல்லது குடிப்பதோ தீங்கு விளைவிக்கலாம். வரும் மார்ச் 5ஆம் தேதிவரை நடைபெறவுள்ள கும்பமேளாவில் 12 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஒன்றாக சேரும் த்ரிவேனி சங்கமத்தில் கங்காஸ்நானம் செய்வதற்காகவே பல மக்கள் திரள்வார்கள் என்கிறது இந்நாளிதழ் செய்தி.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :