"மருத்துவ படிப்பு இடங்கள் 30% அதிகரிக்கப்பட்டுள்ளன" - எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோதி

மோதி
படக்குறிப்பு,

கோப்புப் படம்

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட பிரதமர் நரேந்திர மோதி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அடிக்கல் நாட்டினார்.

இதற்காக காலை 11.30 மணி அளவில் அவர் மதுரைக்கு வந்தடைந்தார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள் சிலரும் நரேந்திர மோதியை விமான நிலையத்தில் வரவேற்றனர்.

மதுரை தோப்பூர் பகுதியில், 262 ஏக்கர் பரப்பளவில், 1264 கோடி ரூபாய் செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளது.

பிரதமருக்கு எதிர்ப்பு

பிரதமர் நரேந்திர மோதியின் வருகையையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பலர் மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் கறுப்புக் கொடி ஏந்தியும், கறுப்பு பலூன்களை பறக்கவிட்டும் போராட்டம் நடத்தினர்.

இந்த சூழலில் #GoBackModi என்ற ஹாஷ்டாக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

"நியூட்ரினோ, ஹைட்ரோகார்பன், முல்லைப் பெரியாறு மற்றும் மேக்கேதாட்டு போன்ற திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அனுமதி வழங்குகிறது. இந்த திட்டங்கள் தமிழகத்தை அழித்துவிடும். இந்த போராட்டம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எதிரானது அல்ல. தமிழக நலனை புறக்கணித்த காரணத்துக்காக நரேந்திர மோதிக்கும், அவருடைய அரசுக்கும் எதிரானது" என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறுகிறார்.

இந்த சூழலில், மதுரை விமான நிலையத்தில் இருந்து எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள மண்டேலா நகருக்கு பிரதமர் மோதி நரேந்திர காரில் சென்றார்.

அடிக்கல் நாட்டும் முன் அதற்கான விழாவில் முதலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோதிக்கு சால்வை அணிவித்தும் பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றார்.

விழாவில் வரவேற்புரை அளித்து பேசிய துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், தமிழக மக்களின் சார்பாக பிரதமர் மோதிக்கு இதயபூர்வமான நன்றி தெரிவித்து கொள்வதாக கூறினார்.

விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சுகாதார சேவைகளை வழங்குவதில் இந்தியாவிலேயே முன்மாதிரியாக தமிழகம் அமைகிறது என்றார்.

ராமநாதபுரத்தில் ஒரு புதிய மருத்துவக் கல்லூரி திறக்க, வரும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் என்றும் பிரதமர் மோதியை முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.

இதனையடுத்து ரிமோட் வசதி மூலமாக எய்ம்ஸ் மருத்துவமனை கட்டடத்திற்கு பிரதமர் மோதி அடிக்கல் நாட்டினார்.

மேலும், மதுரை, தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலியில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் பல்நோக்கு உயர் சிகிச்சை மைய கட்டடங்களையும் அவர் திறந்து வைத்தார்.

நரேந்திரமோதி உரை

பின்னர் விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, தமிழில் வணக்கம் சொல்லி தன் உரையை தொடங்கினார்.

"மீனாட்சி அம்மன் கோவில் இருக்கும் மதுரைக்கு வந்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்தவமனை, தன் சேவை மூலம் தனி இடத்தை பிடித்துள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரியும். தற்போது மதுரையில் எய்ம்ஸ் அமையவுள்ளதால், இந்த சேவை நம் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக நாம் கூறலாம்" என்றார்.

"மதுரையில் 1200 கோடி ரூபாய்க்கு மேலான செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படவுள்ளது. இதனால் தமிழக மக்கள் அனைவரும் பயன்பெறுவார்கள். அனைவருக்கும் கட்டுப்படியான விலையில் மருத்துவம் இருக்க வேண்டும் என்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணி சுகாதார சேவைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது" என்று அவர் மேலும் கூறினார்.

கடந்த நான்கரை ஆண்டுகளில் மருத்துவ படிப்பு இடங்கள் கிட்டத்தட்ட 30 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தனது அரசாங்கம் 2025ஆம் ஆண்டிற்குள் டிபி நோயை முற்றிலுமாக அழிக்க பாடுபடும் என்றும் பிரதமர் நரேந்திர மோதி கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :