பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா: பாஜக-வின் இலக்கு என்ன?

  • ராஜேஷ் பிரியதர்ஷி
  • பிபிசி இந்தி
பாஜகவுக்கு உதவுவாரா பாரத ரத்னா பிரணாப் முகர்ஜி?

காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவரான பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருதை கொடுத்திருக்கும் பாஜக அரசு, பல இலக்குகளை குறிவைத்து ஒற்றை அம்பை எய்திருப்பதாக கருதப்படுகிறது. பாரத ரத்னா விருது பெறும் பிரணாப் முகர்ஜியின் தகுதி குறித்து யாருமே கேள்வி எழுப்பவில்லை.

கேள்விகளும் சந்தேகங்கள் எழுவது, நாட்டில் பொதுத்தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருக்கு, அதன் எதிரிக் கட்சியான பாரதிய ஜனதா கட்சி வழங்கியிருப்பதுதான் சர்ச்சையின் மையமாக இருக்கிறது.

பாரத ரத்னா விருது அரசியல் நன்மைகளுக்கு வழங்கப்படுகிறது என்ற சர்ச்சை இப்போது எழுந்ததில்லை. 1988ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு முன்னதாக, தமிழ்நாடு வாக்காளார்களை குறி வைத்து, அன்றைய ராஜீவ் காந்தி தலைமையிலான மத்திய அரசு எம்.ஜி.ஆருக்கு பாரத ரத்னா வழங்கியபோதும், இதுபோன்ற சர்ச்சைகள் வெடித்தன.

இருந்தாலும், 1984 மற்றும் 2004ஆம் ஆண்டுகளில் பிரதமராவதற்கு அனைத்து தகுதிகளும் இருந்தபோதிலும், பிரணாப் முகர்ஜிக்கு அந்த பதவி மறுக்கப்பட்டது. காங்கிரசில் காந்தி குடும்பத்தின் மீது முழுமையான விசுவாசம் கொண்டவர் அல்ல என்ற சந்தேகத்தினால், பல சந்தர்ப்பங்களில் ஓரம் கட்டப்பட்ட பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது கொடுத்து தேர்தல் வியூகத்தை அமைத்திருக்கிறது பாஜக.

குறிப்பிட்ட ஒரு குடும்பத்தினரைத் தவிர தகுதியிருந்தாலும், பிற தலைவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதை பொதுமக்கள் மத்தியில் மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சியினரின் மனதிலும் ஆழமாக விதைப்பதுதான் பாஜகவின் சாணக்ய தந்திரம். சர்தார் படேல், சாஸ்திரி, நரசிம்ம ராவ், பிரணாப் முகர்ஜி என அந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

காங்கிரசின் சித்தாந்தத்தின் பிரதான பிம்பமான பிரணாப் முகர்ஜி, கட்சியிலிருந்து மாறுபட்டு, தனது தனிப்பட்ட கருத்தை கடந்த ஆண்டு வெளிப்படுத்தினார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிகழ்ச்சி ஒன்றில் முக்கிய விருந்தினராக பிரணாப் முகர்ஜி கலந்துக் கொண்டது பல விவாதங்களை எழுப்பியது. பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஷ்டா முகர்ஜி உட்பட பலரும் பிரணாப் முகரிஜியின் இந்த முடிவு குறித்து கேள்வி எழுப்பினார்கள்.

2018, ஜூன் ஏழாம் தேதியன்று நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துக் கொண்ட பிரணாப் முகர்ஜி அங்கு உரையாற்றினார். பிரணாப் முகர்ஜி உரையாற்றியபோது, தான் வேற்று கட்சியை சார்ந்தவராக இருந்தாலும், நாடு, தேசியவாதம், நாட்டுப்பற்று என பல்வேறு விஷயங்களில் தனது சிந்தனையில் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை குறிப்பாக தெரிவித்தார்.

தற்போது, இந்த புத்தாண்டில், அவருக்கு பாரத ரத்னா விருதை பாஜக அரசு வழங்கியிருப்பது, காங்கிரஸ் கட்சியில் காந்தி குடும்பத்திற்கும் பிரணாப் முகர்ஜிக்கும் இடையிலான இடைவெளியை வெளிச்சமிட்டு காட்டுவதாக இருக்கிறது.

ஆனால் விஷயம் இத்துடன் முடிந்துவிடவில்லை. மேற்கு வங்க மாநிலத்தில் கடினமான சிக்கலை எதிர்கொள்ளும் பாஜக, வங்காளியான முகர்ஜிக்கு விருது வழங்கி, மேற்கு வங்க மக்களின் மீதான தங்கள் அன்பை வெளிக்காட்டிக் கொண்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி, காந்தி குடும்பத்தினரின் பிடிக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறது, வங்காளத்தை சேர்ந்த அனுபமும், திறமையும் மிக்க ஒருவரை பிரதமராவதில் இருந்து இருமுறை விலக்கி வைத்தது காங்கிரஸ், ஆனால் மாற்றுக் கட்சியாக இருந்தாலும் தகுதியையும் திறமையையும் மதிக்கக்கூடிய கட்சி என்பதை இந்த தேர்தல் பிரசாரத்தில் பாஜக வெளிப்படையாக முன்வைக்கும்.

வட இந்தியாவில் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கட்சிக்கு ஏற்படக்கூடிய நட்டத்தை மேற்கு வங்கத்தில் ஈடுகட்டும் முயற்சியின் பிரம்மாஸ்திரமாக பிரணாப் முகர்ஜிக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருது பார்க்கப்படுகிறது.

ஒட்டுமொத்தமாக பார்க்கப்போனால், காங்கிரஸை குடும்பக் கட்சியாக காட்டுவது, தார்மீக அடிப்படையில் காங்கிரஸ் செயல்படுவதில்லை என்பதை சுட்டிக்காட்டுவது, வங்காளத்தில் அரசியல் லாபம் பெறுவது என பல லாபங்கள் பாரத ரத்னா என்ற ஒற்றை அம்பின் இலக்காக இருக்கலாம்.

அதோடு, பாஜக, மூத்தோருக்கு மரியாதை செலுத்துகிறது, ஆனால் காங்கிரஸ் கட்சியோ நேருவின் குடும்ப உறுப்பினர்களுக்கு அதிலும் குறிப்பாக ராஜீவின் குடும்பத்தினருக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை பிரதானமாக உணர்த்த விரும்புகிறது பாஜக.

பிரணாப் முகர்ஜியை பாரத ரத்னா பட்டியலில் இடம் பெறச் செய்து, இதற்கு முன்னர் இந்த விருதைப் பெற்ற காங்கிரஸ் கட்சியின் பிரதமர்கள் மற்றும் குடியரசுத் தலைவர்களுக்கு சமமாக்கிவிட்டது பாரதிய ஜனதா கட்சி. இதன் மூலம், காங்கிரஸின் ஆட்சியில் பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட இந்திரா காந்தி, ராஜீவ் காந்திக்கு சமமானவராக உயர்த்தப்பட்டிருக்கும் பிரணாப் முகர்ஜி, அதைப் பெறாத சோனியா காந்தியை விட ஒரு படி மேலே உயர்த்தும் அரசியல் ரீதியான உத்தியை மேற்கொண்டிருக்கிறது பாஜக.

தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா

தற்போது வடகிழக்கு இந்தியாவில், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா தொடர்பாக மக்களிடையே அதிருப்தி நிலவுகிறது. அதேபோல் அசாம் மாநிலத்தில், பிற கட்சிகளுனான கூட்டணியில் பிளவு ஏற்பட்டது பாஜகவுக்கு பின்னடைவை ஏற்பத்தியுள்ளது.

பாஜக கூட்டணியில் இருந்து அசாம் கன பரிஷத் விலகியது ஒருபுறம் என்றால், குடியுரிமை சட்ட மசோதா விவகாரத்தில் மாநிலத்தில் பாஜகவுக்குள்ளேயே கருத்து வேறுபாடுகள் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. குடியுரிமை மசோதா விவகாரத்தில் அசாம் மாநில மக்களே இரு பிரிவாக பிரிந்து நிற்கின்றனர்.

வடகிழக்கு பிராந்தியத்தை சேர்ந்த ஒருவருக்கு பாரத ரத்னா விருது முதன்முறையாக வழங்கப்படுகிறதா என்று கேட்டால் இல்லை என்றே பதில் கிடைக்கிறது. 1999ஆம் ஆண்டு, சுதந்திர போராட்ட வீரர் மற்றும் முதலமைச்சரான கோபிநாத் போர்டோலோய்க்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

பிரபல பாடகர், இசையமைப்பாளர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளரான பூபேன் ஹசாரிகா, 2004ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். அசாமில் முக்கியத் தலைவராக கருதப்படும் அவருக்கும் பாரத ரத்னா விருது வழங்கி சிறப்பித்திருக்கும் பாஜக அரசு, இதன் மூலம் அசாம் மக்களின் சீற்றத்தை தணிக்கும் முயற்சியையும் மேற்கொண்டுள்ளது.

நானாஜி தேஷ்முக் மற்றும் தென்னிந்திய அரசியல்

காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுக்கு. பாஜக அரசு பாரத ரத்னா விருது வழங்குவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னரே, காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் பண்டித் மதன் மோகன் மாளவியாவுக்கு, பிரதமர் நரேந்திர மோதி பாரத ரத்னா விருது வழங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்து தலைவர்களுக்கு விருது வழங்கும் நடைமுறை, மதன் மோகன் மாளவியாவுக்கு விருது வழங்கியபோது தொடங்கி வைக்கப்பட்டது. மாளவியா காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும், நேருவின் மதசார்பர்ற பிரிவின் பிரதிநிதியாக அவர் இருந்ததில்லை. மாறாக, லாலா லஜபதி ராயைப்போன்று இந்துத்வாக் கொள்கை கொண்டவராக இருந்தார். 1909ஆம் ஆண்டு லாகூரில் அகில இந்திய இந்து மகாசபைக் கூட்டத்தின் தலைவராகவும் மாளவியா இருந்திருக்கிறார்.

சண்டிகாதாஸ் அம்ருத் ராவ் தேஷ்முக் எனப்படும் நானா ஜி, ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் நேரடியாக தொடர்பு கொண்டவர். அவருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

எதிர்காலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, தீனதயால் உபாத்யாய் போன்ற வழியில், சாவர்கர், கேஷவ் பலிராம் ஹேட்கேவார், சதாசிவ ராவ் கோல்வல்கர் போன்றவர்களுக்கும் நாட்டின் உயரிய விருது வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பில், ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் இது மகிழ்ச்சியை அளிக்கலாம்.

சாவர்கர், ஹெட்கேவார், கோல்வல்கர் போன்றவர்கள், இந்த விருதுக்கு தகுதியானவர்களா இல்லையா என்பது பற்றி நாடு தழுவிய அளவில் விவாதங்கள் நடைபெறும் என்பதும் வேறு விஷயம். ஆனால் இதற்கு முன்னரும் சிலருக்கு இந்த விருது வழங்கப்பட்டது தொடர்பான சர்ச்சைகளும் எழுந்துள்ளன.

நோபல் பரிசைப் போன்றே, பாரத ரத்னா விருதும் தகுதியான அனைவருக்கும் வழங்கப்படவில்லை. அதேபோல், விருது வழங்கப்பட்ட பலரின் தகுதி மீது சர்ச்சைகளும் எழுந்துள்ளன.

இந்த ஆண்டு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள மூன்று பேரின் தகுதி குறித்து எந்தவித சர்ச்சையும் எழவில்லை என்றாலும், நோக்கம் குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன.

விருதுகள் என்பது வழங்கப்படுவருக்கு பெருமை அளிப்பதாக இல்லாமல், மிக பொருத்தமான நபரை சென்றடைந்ததால் அந்த விருதுக்கு கெளரவம் கிடைக்க வேண்டும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :