"துக்கத்துக்கு வராத உறவினருக்கு விருந்தில் என்ன வேலை?" - மோதிக்கு எதிராக கேள்வி

மோதி படத்தின் காப்புரிமை Getty Images

பிரதமர் மோதி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு பலூன்களை பறக்கவிட்டு போராட்டம். ஒரு நாட்டின் பிரதமர் ஒரு மாநிலத்திற்கு வரக்கூடாது என்று போராடுவது சரியா? என நேற்று வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம். அதற்கு வாசகர்கள் தெரிவித்த கருத்துகளின் தொகுப்பு இங்கே.

"ஓட்டுக்காக மட்டும் ஒரு மாநிலத்திற்கு வருவார் என்றால் கருப்புக்கொடி காட்டுவதில் தவறொன்றும் இல்லை" என்று பதிவிட்டுள்ளார் சேகர் என்ற நேயர்.

"உங்க வீட்டில் துக்கத்துக்கு வராத உறவினருக்கு விருந்தில் என்ன வேலை?" என்று கேள்வியெழுப்பியுள்ளார் கிருஷ்ணன்.

"ஒரு நாட்டின் பிரதமர் ஒரு மாநிலத்தின் இயற்கை சீற்றத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வராமல், அடிக்கல் நாட்டு விழாவிற்கு தேர்தல் நெருங்கும் நேரத்தில் வருவது சரியா?" என்று ஃபேஸ்புக்கில் கேட்டுள்ளார் அசோக்குமார் என்ற நேயர்.

"ஒருநாட்டின் பிரதமர் ஒரு மாநிலத்திற்கு வருவது தவறல்ல. ஆனால், தமிழ்நாடு இந்தியாவின் ஒரு பகுதி என்ற நினைப்பு, தேர்தல் நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் பிரதமருக்கு வரவேண்டும்" என்று பதிவிட்டுள்ளார் தங்கம்.

"ஒரு பிரதமர் என்பவர் ஒரு மாநிலத்தின் பேரிடர் பாதிப்பு ஏற்படும்பொழுது துணை நிற்க வேண்டும் அதைத் தவிர்த்து மாநிலத்தை சூறையாட நினைக்கக் கூடாது" என்று பதிவிட்டுள்ளார் பிரபு என்னும் ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்.

"பிரதமர் என்பவர் அனைத்து மாநிலங்களிலும் வாழும் மக்களுக்கும் பொதுவானவர். நன்மை தரக்கூடிய திட்டங்களை அவர்கள் ஜெயிக்க வாய்ப்பு உள்ள மாநிலத்துக்கும் மக்கள் விரும்பாத திட்டத்தை எதிர்கட்சிகள் ஆளும் மாநிலத்திற்கு கொடுக்கிறார். மொத்தத்தில் எதிர் கட்சிகளை எதிரி கட்சியாக நினைத்து அழிக்க முயற்சிக்கிறார். கடைசியில் மக்கள் ஓட்டு போட்டால்தான் இவரே பிரதமர் ஆகமுடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார் ராம் என்னும் நேயர்.

"தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த ஒரு மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட வந்த ஒரு பிரதமருக்கு கருப்பு கொடி காட்டி,இவர்கள் சாதித்தது என்ன?" என்று கேள்வியெழுப்பியுள்ளார் சிம்பு என்னும் நேயர்.

"நமது பிரதமர் கஜ புயல் பாதிப்பிற்கு வந்து, ஆறுதல் சொல்லி புயல் நிவாரணம் அளித்திருந்தால், இப்பொழுது இந்த அளவு எதிர்ப்பை மக்கள் காட்டி இருக்கமாட்டார்கள். ஒரு நல்ல சந்தர்ப்பத்தை பாஜக தவற விட்டு விட்டது. ஆனாலும் ஒரு நாட்டின் பிரதமரை ஒரு மாநிலத்துக்கு வரக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை" என்று பதிவிட்டுள்ளார் பாபு கிருஷ்ணன் என்ற நேயர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்