திருமாவளவன் குற்றச்சாட்டு: "பாரத ரத்னா விருது வழங்குவதில் புறக்கணிக்கப்படும் தலித்துகள், தமிழகம்"

திருமாவளவன் படத்தின் காப்புரிமை Facebook

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினமணி: 'ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவருக்கு பாரத ரத்னா'

இதுவரை அம்பேத்கரைத் தவிர தலித் சமூகத்தைச் சேர்ந்த வேறு எவருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்படவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார் என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

"இந்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருதான 'பாரத ரத்னா' விருது மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த நானாஜி தேஷ்முக் என்பவரது பெயரும் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

நானாஜி தேஷ்முக் தீவிரமான ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் ஒருவர். ஜனசங்கம் என்ற அரசியல் கட்சியை ஆர்.எஸ்.எஸ். துவக்கிய போது அதை மக்களிடம் பரப்புவதில் முக்கிய பங்காற்றியவர்.

2002-ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக மிகப்பெரிய கலவரம் நடத்தப்பட்டபோது நானாஜி தேஷ்முக் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். அப்போது அவர் அதைக் கண்டிக்கவில்லை. வாஜ்பாயியுடன் முரண்பட்டிருந்த அவர் அன்றைய குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியை மறைமுகமாக ஆதரித்தார்.

அதுபோல, 1984-ஆம் ஆண்டு தில்லியில் சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் நடத்தப்பட்டு, ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டபோது அதை அவர் ஆதரித்ததாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன.

அத்தகைய ஒருவருக்கு பாரத ரத்னா விருது வழங்குவது அந்த விருது உருவாக்கப்பட்ட நோக்கத்துக்கே எதிரானதாகும்.

இந்திய நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது இதுவரை 48 பேருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

அந்தப் பட்டியலைப் பார்த்தால் முன்னேறிய சாதியினரே 60 சதவீதம் அந்த விருதைப் பெற்றுள்ளனர். பாரத ரத்னா விருதினை மொழி, இன, மத, சாதி, பாலின பாகுபாடு இல்லாமல் வழங்க வேண்டும் என அது உருவாக்கப்பட்டபோது கூறப்பட்டுள்ளது.

ஆனால் அந்த நோக்கத்துக்கு மாறாகவே அந்த விருதுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை அம்பேத்கரைத் தவிர தலித் சமூகத்தைச் சேர்ந்த வேறு எவருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்படவில்லை. பலமுறை நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்ட விஞ்ஞானி மேக்நாத் சாஹா, அரசியல் தலைவர் கன்ஷிராம், முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் முதலான தகுதிவாய்ந்த பலர் தலித் சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதாலேயே புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

தந்தை பெரியார், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா வழங்கவேண்டும் என தமிழகத்தின் சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது. இது ஏற்கப்படவில்லை. பாரத ரத்னா விருது மட்டுமின்றி பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகிய விருதுகளிலும் கூட தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது." என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்கிறது அந்நாளிதழ்.


படத்தின் காப்புரிமை தினமணி

தினத்தந்தி: 'தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை இடம்?'

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை இடம் என்பது குறித்து விரைவில் பேசி முடிவு செய்வோம் என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

தமிழக காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் துறையின் மாநில நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. விழாவுக்கு பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில தலைவர் நவீன் தலைமை தாங்கினார்.

அகில இந்திய காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் துறையின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ரோதஸ் பசோயா, தமிழக காங்கிரஸ் பொதுச்செயலாளர் சிரஞ்சீவி, பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில ஊடகத்துறை தலைவர் ஆர்.ரவிராஜ் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் புதிய நிர்வாகிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

"உரிமைக்காக போராடுபவர்கள் மீது வழக்கு, கைது என்பது பாசிச சர்வாதிகார போக்கு ஆகும். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜாக்டோ -ஜியோ சங்க நிர்வாகிகளை அழைத்து முதல்-அமைச்சர் அல்லது துறை சார்ந்த அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக திரும்பப்பெறவேண்டும்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட கைது நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன். நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தமிழகத்தில் ஓர் இடத்தில் கூட வெற்றி பெற முடியாது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை இடம்? என்பதை விரைவில் பேசி முடிவு செய்வோம்." என்று திருநாவுக்கரசர் கூறியதாக விவரிக்கிறது தினத்தந்தி நாளிதழ்.இந்து தமிழ்: "இன்று பணிக்கு திரும்பாவிட்டால் நடவடிக்கை"

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், திங்கள் கிழமை (இன்று) பணிக்கு திரும்பிவிட்டால் அவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் உறுதி அளித்தார் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது, இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை சரிசெய்வது என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கால வரையற்ற வேலைறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

"ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்றிருக்கக்கூடும் என கருதுகிறோம். எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் விரைவில் நடக்கவுள்ள நிலையில், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதால் மாணவர்களின் படிப்பு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் உணர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அரசின் வேண்டுகோளை ஏற்று உடனடியாக பணிக்குத் திரும்பவேண்டும்.

திங்கள்கிழமை (இன்று) பணிக்கு திரும்பிவிட்டால் அவர்கள் மீது எந்தவிதமான ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படாது. வேலைக்கு வராத நாட்களுக்கு மட்டும் சம்பளம் பிடித்தம் செய்யப்படும். வேலைநிறுத்தப் போராட்டத்தால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்ற நோக்கத்தில்தான் ஆசிரியர்கள் வராத இடங்களில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசு முடிவு செய்து அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. தற்காலிக ஆசிரியர் வேலை கோரி தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதிலிருந்து தகுதியான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்" என்று பிரதீப் யாதவ் கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ்.


தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'அயோத்தி வழக்கில் நாளைய விசாரணை திடீர் ரத்து'

அயோத்தி விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்கும் அரசியல்சாசன அமர்வில் இடம்பெற்றுள்ள ஒரு நீதிபதி இல்லாத காரணத்தால், நாளை (செவ்வாய்க்கிழமை )நடைபெறவிருந்த விசாரணை ரத்து செய்யப்பட்டுள்ளது.

"தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றுள்ள நீதிபதி எஸ்.ஏ.போப்டே செவ்வாய்க்கிழமை வர இயலாத சூழல் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, அன்றைய தினம் நடைபெறவிருந்த விசாரணையை, அரசியல் சாசன அமர்வு ரத்து செய்துள்ளது. அன்றைய தினம் விசாரணை நடைபெறாது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது." என்று உச்சநீதிமன்ற பதிவாளர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், விசாரணைக்கான புதிய தேதி எதுவும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்படவில்லை. எனவே, மனுதாரர்களில் யாரேனும் தலைமை நீதிபதி முன் ஆஜராகி, புதிய தேதியை அறிவிக்கக் கோருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :